வெள்ளி, 26 அக்டோபர், 2018

நிழற்பூதம்

நிழற்பூதம்
===============================================ருத்ரா

நீ என்ன நினைக்கிறாய்
என்று
என்
முகம் பார்க்கும் கண்ணாடி
என்னைப்பார்த்துக்கேட்டது?
என்னைப்பற்றி சொல்ல‌
என்ன இருக்கிறது?
என்னைப் பார்க்கவேண்டும் என்றால்
உன்னிடம் தான் வருகிறேன்.
ஆமாம்.
உனக்குப் பின்னால் ரசம் பூசியவர்கள்
யார்?
அவர்களை எனக்கும்
அப்படியொரு ரசம் பூசச்சொல்லு.
பார்ப்பவர்களை
அப்படியே
நான் படம்பிடித்துக்கொள்ளலாம்
அல்லவா!
கண்ணாடி பக பக வென்று சிரித்தது!
நான் ஒன்றும் அப்படி சிரிக்கவில்லை.
இந்த பிம்பத்தில் அந்த சிரிப்பு
எப்படி வந்தது?
நான் விதிர் விதிர்த்துப்போனேன்.
வியர்வையில் நனைந்தேன்.
பயப்படாதே!
கண்ணாடி பேசியது.
ஒரு வினாடி
என் ரசத்தை விலக்கிக்கொண்டேன்.
நீ "யாரோவாய்" ஆகி
சிரித்தாய்.
உன் முகத்தின் மீது
மற்றவர்கள்
தங்கள் முகத்தை
அச்சடிக்க ஆசைப்பட்டாயே!
அதைப்பற்றித்தான் அப்படி சிரித்தேன்
என்றது.
இந்த ரசம் வெறும் நிழல்.
உன் முகத்தை மட்டுமே
தினமும் எனக்கு பூதம் காட்டுகிறாய்.
மாறாக இந்த நிழல்
உன் மீது பூதம் காட்டினால்...

"பூதம் காட்டினால் என்ன ஆகும்?"
நான் கேட்டேன்.
அது சொன்னது.
அதைத்தான் உட்பொருள் அறியாமல்
கடவுள் என்கிறாய்.
அந்த பூதம் உன்னை
பயமுறுத்தும் உணர்வு ஆனது கூட‌
அறியாமல்
அந்த நிழலைக்குவித்து வைத்து
பூசனைகள் செய்கிறாய்.
கண்ணாடி
மீண்டும் பக பகவென்று சிரித்துவிட்டு
அமைதியானது!

=============================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக