புதன், 3 அக்டோபர், 2018

புரியாத புதிர்

புரியாத புதிர்
===================================ருத்ரா

அவன் கேட்டான்.
அவள் சிரித்தாள்.
அவள் கேட்டாள்.
அவன் சிரித்தான்.

அந்த சிரிப்புகளும்
கேள்விகளும்
சிணுங்கல்களும்
இன்னும் புரியவில்லை.

இருவருக்கும் புரியவில்லை
அது காதல் என்று.
காதலுக்கு மட்டுமே புரிந்தது
அது காதல் என்று.

காதல் என்று புரிந்தபோது
வெகு தூரம் வந்திருந்தார்கள்.
அடையாளம் தெரியாத‌
மைல் கற்களோடு
தாலி கட்டி மேளம் கொட்டி..
குடும்பம் குழந்தை குட்டிகள் என்று.

வேறு கணவன்
வேறு மனைவி
எரிமலையில்
அதே உள்ளங்கள்
வெந்து முடிந்தும்
உருகி வழிவது மட்டுமே
காலண்டர் தாள்களை
உதிர்த்துப்போட்டு
காலம் மேடு தட்டிப்போயின.

இருப்பினும்
அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
அந்த கேள்விகளும்
சிரிப்புகளும் சிணுங்கல்களும்
இன்னும் புரியவில்லை.

அவர்கள் குழந்தையின்
கிலுகிலுப்பை ஒலிகள்
அவனுக்கு கேலிக்குரல்கள்.
அவளுக்கு நில அதிர்ச்சிகள்.

அவர்களுக்கு
வாழ்க்கை புரிகிறது.
ஆனால்
காதல் மட்டும்
இன்னும் புரியவே இல்லை.

==============================================
28.06.2016



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக