புதன், 3 அக்டோபர், 2018

இது விஜய் சேதுபதி வானம்இது விஜய் சேதுபதி வானம்
============================================ருத்ரா

"செக்கச்சிவந்த வானம்"
ஆனந்த விகடன் விமர்சனம் படித்து
அந்த படம் பார்த்து
மெர்சல் ஆவதை விட‌
ஒரு "மெப்ளாங்க்" ஆகி
கில்லி அடிப்பது போல்
ஒரு கிர்ர்ர்ர் வந்துவிட்டது.
மேலே உள்ள சொற்களைக்கண்டு
டர்ர்ர்ர் ஆகவேண்டாம்.
இது கூட ஏதோ
கொஹஞ்சோ ஹடபுடாவில்
தோண்டியெடுத்த சர்கார் மொழியில்
நம் செம்மொழியின்
முன்மொழி வடிவம் தான்.
அது போகட்டும்.
சொற்ப நீளமான
விஜய சேதுபதி பாத்திரம்
எப்படி
அந்த விரிந்து சிவந்த வானத்தை
தன் பாக்கெட்டில்
சுருட்டி மடக்கி வைத்து
மகுடம் சூட்டிக்கொண்டது.
நடிக்காமலேயே
வந்து நின்றுவிட்டு போய்
எப்படி
அத்தனை ஆழமாய் நடிப்பது
என்ற உத்தி
விஜய சேதுபதி அவர்களுக்கு உண்டு.
இயக்குனர் மணிரத்னம் அவர்களும்
அத்தகைய அபூர்வ "ஃப்ரேம்"களை
அவருக்கு உருவாக்கித் தந்திருப்பது
அவரது நுண்கலை வெளிப்பாடு ஆகும்.
ராவணனில் விக்ரமை
அந்த புதிய கோணத்தில்
காட்டியிருப்பதை நாம்
இன்றும் அணு அணுவாய்த்தான்
ரசிக்கிறோம்.
இது ஒரு காலம்.
நடிப்பு மிகை நடிப்பு
என்றெல்லாம் நம் சினிமா
தங்கமான ஒரு எவரெஸ்டில் நின்று
கொடி நட்டிய காலம்
ஒன்று உண்டு.
அந்தக்கொடி நாட்டியவர்
நம் நடிகர் திலகம் மட்டுமே.
நடிப்பு என்றாலே அது மிகை நடிப்பு தானே
என்ற நடிப்பின்
அன்றைய தொல்காப்பிய இலக்கணத்தை
இலக்கியம் ஆக்கியவர் அல்லவா
சிவாஜி.
சம்பூர்ண ராமாயணம் படத்தில்
திரைச்சக்கரவர்த்தி என்.டி ராமராவ் அவர்கள்
அந்த இதிகாசத்தை அற்புத ரசமாக்கி
நமக்கு பருகத்தந்தவர்.
அந்த கிண்ணத்துள்ளும்
நடிப்பின்
ஏழ் கடல் சுநாமியை
ஒரு சில நிமிடங்களில்
அலைவீசி
பரதனாய் மாறி
அந்த ராமாயணத்தை "பரதாயணம்"
ஆக்கியவர் சிவாஜி.
இதைக்கண்டு சிலிர்த்துப்போய்
ரசித்து பாராட்டியவர்
நம் மூதறிஞர் ராஜாஜி.
நமது அந்த பழைய நினைப்புகளை
அசைபோட வைத்துவிட்டது
விஜயசேதுபதியின் பாத்திரம்.
அவர்
அவ்வளவு பெரிய வானத்தில்
நறுக்கென்று சுறுக்கென்று
முள் குத்திய முத்தான நடிப்பில்
வெடுக்கென்ற ஒரு பாத்திரத்தை
விட்டெறிந்து போய் விட்டார்.
அது
படத்தின் "புல்ஸ் ஐயில்"
சரியாக பாய்ந்து
அதகளம் பண்ணிவிட்டது.
ஒரு நாயகனை
நாலு நாயகன் ஆக்கிய‌
மணிரத்னத்தின் இந்த
மணி விரிப்பில்
விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்தது
செக்கச்சிவந்த
"ரத்த"னக் கம்பளவிரிப்பு.

=================================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக