வியாழன், 11 அக்டோபர், 2018

கனவு மிருகம்

கனவு மிருகம்SDC11958.JPG
ஆண்டிலோப் கேன்யான், அரிசோனா, யு .எஸ்.ஏ


கனவு மிருகம்
================================ருத்ரா


கனவுப்புகை மிருகத்தின்
அந்த வெள்ளிக்கூர் நகங்கள்
இருட்டைக்கிழித்து
வெளிச்சத்தின்
வெள்ளருவி பாய்ச்சின.
நீல மின்னல் திரட்சிகளில்
ஆவேசமான தாகங்கள்
எல்லாவற்றையும்
குடித்து தீர்க்கத் துடித்தன.
ஒலியை
அந்த இளஞ்சிவப்புக்கழுத்துள்
மிடைந்து வைத்து
உடைந்து உடைந்து
கசியச்செய்து
கலங்கடித்தது கனவு.

நான் எங்கு இருந்து
இந்த மண்ணுக்குள் வந்து
நரம்பின் நாற்று பாவினேன்?

எங்கோ ஒரு அரபிய
பாலைமணல் துளியா நான்?

அட்லாண்டிக்
அடிவயிற்று சதைமடிப்புக்குள்
கிடக்கும் கட்டிடச்சிதிலங்களின்
முனகல்களா நான்?

குமரிக்கண்டத்தில் புதைந்து கிடக்கும்
குத்து விழியா நான்?

ஒரு பனிக்காலத்து
பெரும்பிசாசாய் உறைந்துபோன‌
நயாகாராவின்
விறைத்துப்போன‌
பளிங்கின் நாக்குப்படலத்தில்
நழுவி விழும் மௌனப்பிழம்பா நான்?

ஸ்கேன் பார்த்து
உதடு பிதுக்கினார் டாக்டர்.

"நாற்பது நாள் நீலக்குழவி இது.
நாற்பது பிரபஞ்சத்தை
உருக்கிய ஒளியின் மூளையுடன்..
கண்ணைக்கூசுகிறது"
........
டாக்ட்ருக்கு தலை சுற்றியது.
"ராட்சசத்தனமாய்
ஒரு மெமரி சிப்..
இனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.
பைனரி அரிசி சமைத்திடுங்கள்.
அறிவுப்பசி..
அறி அறி அறி அறி
அல்லது
அழி அழி அழி அழி..

மயிர்க்கீற்றில்
நாற்பது கோடி மண்டலங்களின்
கூகிள் கள் கூடு கட்டும்..

கல்லும் ருசிக்கும்
மண்ணும் இனிக்கும்.
கணினிக் கர்ப்பம்
ஊழிகளின் ஊழிகளாய்
உள்ளே கரு பிடித்து..."

விலுக்கென்று விழித்துக்கொண்டேன்.
வியர்வை முத்துக்கள்
உப்புக்கரித்தன.
கனவு மிருகம் செத்துக்கிடந்தது.

=====================================================
அமெரிக்காவின் அரிஸோனா "ஆண்டிலோப் கேன்யானின்"
திடுக்கிடும் கோணம் இது.
======================================================
05.05.2014l ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக