திங்கள், 15 அக்டோபர், 2018

கமல் எனும் காற்றாடி

கமல் எனும் காற்றாடி
==============================================ருத்ரா


தமிழ் என்றார்.
ஆகா என்றனர்.
சிந்துவெளி என்றார்
மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றனர்.
திராவிடம் என்றார்
அப்படி போடு அருவாளை என்றனர்.
எண்ணூர் ஒட்டிய‌ வாய்க்காலில்
தேனும் பாலும் ஓடவைக்கலாம்
என்றார்.
ஊழல் ஆட்சியை விரட்டணும்
என்றார்.
இவர் தான் நம் "நாயகன்" என்று
இறும்பூது கொண்டனர்.
கவிஞர்களுக்கு கூட புரியாத‌
எதுகை மோனைகளை
எடுத்துவிட்டார்.
சரி தான்.
இவர் தான் நம் சங்கப்பலகையின்
நடு "மய்யம்" என்று
தமிழில் புல்லரித்துக்கொண்டார்கள்.
காந்தி என்றார்
குரு என்றார்
கம்யூனிசம் என்றார்.
காவிக்குள் கருப்பு
கருப்புக்குள் காவி
என்று ஸ்பெக்ட்ரம் எனும்
விஞ்ஞானத்தையும் கூட‌
டிங்கரிங் செய்து
அடித்து நொறுக்கினார்.
பலே! சபாஷ்!
கரகோஷங்களில்
குளிக்கத்தொடங்கினார்.
சாதி மத ஆதிக்கத்தை
தவிடு பொடியாக்க புயல் ஆகினார்.
எல்லா திராவிடக் கட்சிகளையும்
தூக்கியெறி
என்று முழங்குகின்றார்.
அது தானே நியாயம்
என்ற உணர்வு பரவும்படி
ஊழல் பூதம் எதிர் நிற்பதை
பலூன் ஊதுகின்றார்.
காங்கிரஸ்...என்றதும்
அவர் காற்று இறங்கிய பலூனாய்
"கை"களை அங்கே இங்கே
அசைத்து
சலங்கை ஒலி பாணியில்
அபிநயம் செய்யத்தொடங்கிவிட்டார்.

என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்னை?
நான் என்ன பரமக்குடியில்
எருமை மாடு மேய்த்துவிட்டுவந்த பரம்பரையா?
என் ரத்தநாளங்களை பாருங்கள்
தேசிய நீரோட்டம் சிலிர்த்துக்கொண்டிருப்பதை
என்றும் கூட பிரகடனம் செய்வார்.
காங்கிரஸ்  உடைத்துக்கொண்டு வரட்டுமே
என்கிறார்.

காங்கிரசும் மூவர்ணத்தை
இத்தனை ஆண்டுகளாக‌
நான்கு வர்ணக்காற்றில் தானே
"பட்டொளி" வீசி பறக்கவிட்டுக்கொண்டிருந்தது?
முந்த்ரா ஊழல் என்று
முதன் முதலில் அந்த ருசி காட்டி
நாற்காலிகளுக்கு சட்டம் மாட்டித் தானே
வைத்திருந்தது?

ஈழம் எனும் நெருப்பை
வேள்வி போல காட்டியவர்
தேர்தலில் புகைவளையங்கள் விட‌
சிகரெட்டுக்கு நெருப்பு கேட்டு
கூட்டத்தை நோக்கி "கை" நீட்டுகிறார்.
விஸ்வரூபம் ஒன்று இரண்டு மூணு..
இது என்ன‌
விஸ்வரூபமா?
புஸ்வரூபமா?
கமல் எனும் காற்றாடி
விசிலடிக்கும் டவுசர் பசங்களுக்கு
நல்லதொரு விளையாட்டு.

================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக