செவ்வாய், 9 அக்டோபர், 2018

விஜய சேதுபதியின் 96 கவிதைகள்

 விஜய சேதுபதியின் 96 கவிதைகள்
=============================================ருத்ரா

விஜய் சேதுபதியின்
நடிப்புக்குள்  இத்தனை பரிமாணமங்களா?
பத்திரிகைகள்
பட்டா கொடுத்து விட்டன.
காதல் என்று காட்டிக்  கொள்ளாமல்
காதலை வெளிப்படுத்துவது
ஒரு நுட்பம்.
இந்த தலைமுறைக்கு
அதை நன்றாகவே
நடிப்பின் கவிதை யாக்கியிருக்கிறார்கள்
விஜய் சேதுபதியும் திரிஷாவும்.
"முதல் மரியாதை"யில்
சிவாஜி ராதாவிடம் காட்டியது என்ன?
அவருக்கு அவர் தடவிய
மயில் ரெக்கை
அவர் மனஆழத்தின்
லாவா (லவ்வா அது?)வரை அல்லவா
சென்றது.
சிறார் பருவம் என்பது
வானிலை அறிவிப்பாளர்களால்
அறிவிக்கப்பட்ட இயலாத
அத்தனை ஆயிரம் சூறாவளிகளையும்
கருக்கொண்டது.

பள்ளிக்கூட த்தின்
அந்த உடைந்து சிலேட்டு வழியாக
அவனுக்கு ஒரு சன்னல் தெரியுமே!
அதில் அவன் மனத்துள் இருத்தியிருந்த
அவளது
குட்டைப்பாவாடையும்
ரெட்டைச்சடையும் கூட
ஒரு ரோஜாப்பூவை நீட்டிக்கொண்டிருக்குமே.
அது
இருப்பது முப்பது
வருடங்களை விழுங்கிய பிறகும்
மில்லியன் மில்லியன்
வருடங்களுக்கும்  முந்திய
டைனோசார்களாய்
இனிமையாய் மத்தாப்பூக்கள்  சிதற
உறுமிக்கொண்டு தான் இருக்கும் போலும்.
இருவரும்
அதை பட்டாம்பூச்சி சிறகுகளின்
வருடல்களாய்
படத்தின்
ஒவ்வொரு  ஃபிரேமிலும்
பாவ்லா காட்டியிருப்பது தான்
அற்புதமான
நடிப்புக்குள்ளும் ஒரு நடிப்பாய்
நம்மை கொத்தி கொத்தி கடிக்கிறது.
அந்த பாம்புகக்கியிருப்பது விஷம் அல்ல.
அமுதக்கடல்.
காதலின் பிரளயம்
விஜய் சேதுபதியின்
நரையிலும்  தொப்பையிலும் கூட
ஒரு "ஞான பீட விருதின்" இலக்கியத்தை
பதிப்பிக்கிறது.
ஆயிரம் ஆயிரம் வானங்களை
தன் ஏக்கத்தின் சிறிய சிமிழில்
அடைத்துக்கொண்டு
த்ரிஷா காட்டும் வெளிப்பாடுகள்
அந்த காதல் தெய்வத்துக்கு
அர்ச்சிக்கும்  வைரப்பூக்கள்.
96 விதமாய் கவிதைகளை
"இம்போசிஷனாய்"
எழுதி அதை யாரோ
ஒரு வாத்தியாருக்கு காட்டியிருப்பது
போல் இருக்கிறது படம்.
காதல் பாடத்தை
சரியாய் படிக்கவில்லை என்றும்
ஆனால் இப்போது
காதல் நூற்றுக்கு நூறு எங்களிடம்
வாங்கிவிட்டது என்றும்
அந்த வாத்தியாருக்கு
காட்டியிருக்குமோ இப்படம்!
இயக்குனர்
காமிராவை அப்புறப்படுத்திவிட்டு
உணர்ச்சிப்பிழம்பை
அப்படியே அள்ளிப்பூசியிருக்கிறார்.
காவியம் படைப்பதில்
"காளிதாசனை"த்தான் முன்னிறுத்துகிறார்கள்.
இப்படத்தின் டீம்  முழுவதும்
காளிதாசன்களைக்கொண்டே
அமைக்கப்பட்டியிருக்கிறது எனலாம்.
இலக்கியத்தின் இமாலயவெற்றியே
இப்படம்.

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக