வியாழன், 18 அக்டோபர், 2018

"சிந்தனை செய் மனமே"



"சிந்தனை செய் மனமே"

=================================================ருத்ரா



காகிதமும் பேனாவுமாக கவிஞன்.

எதிரே கடவுள்

கையில் ஒரு "ரிமோட்டுடன்".

"கவிஞனே!

காதல் கத்தரிக்காய் எல்லாம்

இருக்கட்டும்..

ஒரு பத்துப் பாட்டு

காதலின் வெத்துப்பாட்டு என‌

இல்லாமல் பாடு.

தவறி நீ பாடினாயானால்

இதை ஒரே அழுத்து..

உங்கள் எல்லோரையும் சேர்த்து

நானும் கூட‌

வெடித்துச்சிதறுவேன்.

தயாரா?

இறைவன் சீறினான்.

இப்போது தான்

ஏதோ ஒரு திரைப்படம் பார்த்தான்

போலிருக்கிறது.

காதலை குத்தாட்டம் குரங்காட்டமாக‌

பார்த்துவிட்டு வந்த

அவன் கூட

அதோ வெறி பிடித்து

ரிமோட்டை வெடிக்க காத்திருக்கிறான்.

கவிஞனுக்கு பயம்.

நான் போனாலும் பரவாயில்லை.

இந்த உலகம் காப்பாற்றப்படவேண்டுமே

என்ற நடுக்கத்தில்

"சிந்தனை செய் மனமே..."

பாடல்கள் தொடங்கி விட்டான்.

முதல் பாட்டு..

2 ஆம் பாட்டு..

3 ஆம் பாட்டு..

........

.........

11 ஆம் பாட்டு



இந்த தடவை கவிஞன் ஏமாறவில்லை.

கடவுள் காப்பு பாட்டையும் சேர்த்து தான்

பாடியிருக்கிறான்.

......

ஆனாலும்

என்ன ஆயிற்று?

இறைவன் ரிமோட்டை அழுத்திவிட்டான்..

எல்லாம் தொலைந்தது..

எல்லாம் புகைமயம்.

சூன்யம் எனும் வெறுமை...



காளைமாட்டின் மேல் இருந்த‌

தேவனிடம் தேவி

படபடத்துக்கொண்டிருந்தாள்!

"என்ன காரியம் செய்து விட்டீர்கள்?"

கவிஞன் சரியாகத்தானே பாடியிருந்தான்.

"என்ன பாட்டு

காதலாகி..என்று ஆரம்பித்து

கடைசியில் ..இன்பம்" என்று ஒலிக்க‌

அல்லவா அத்தனை பாட்டும் பாடினான்."



"சரி தான்.

உங்களுக்கு ஒரு புலவன் பாடினானே

காதலாகி கசிந்துருகி..

அது போல் துவக்கி

பேரின்பத்தை "பெரும்பேர் இன்பம்"

என்று

உங்களைப்பற்றியே அல்லவா

உருகி உருகிப்பாடினான்.



அப்படியா?

ஐயோ! தவறு செய்துவிட்டேனே!

மீண்டும்

"ரீ ப்ளே"பட்டனை அமுக்கிவிட்டால்

போயிற்று.

"தேவையில்லை"

இது ஆண்டவனின் அசரீரி அல்ல.

மனிதனின் கணீர்க்குரல்..

படைப்புக்கும் அழிப்புக்கும்

"பாஸ் வர்டே"

இன்பம் தான்..

மகிழ்ச்சி தான்.

இதில் சிறிது என்ன? பெரிது என்ன?

மனிதனே தான்

உனது பாஸ் வர்டு

உன்னை அறிய நீ

என்னைப்படைத்தாய்!

அறிந்து கொண்டாயா?

சொல்?

காளை மாட்டோடு

கடவுள் ஓடியே போய்விட்டார்!



==============================================
மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக