திங்கள், 8 அக்டோபர், 2018

கோப்பை.




கோப்பை
==========================================ருத்ரா இ.பரமசிவன்

குடிக்கும் கோப்பையை
உருட்டி உருட்டி
திருப்பிகொண்டேயிருந்தான்.
இங்க்கிலாந்துக் கவிஞன் "கீட்ஸ்"

கோப்பையின்
கிரேக்கத்து கலை வடிவங்கள்
சுழலும் உலகைப்போல்
அவன் கையில்.
ஆயிரம் ஆயிரம்  கவிதைகள்
அவனுக்கு ஊறி வழிந்தன!

நமக்கு கிடைத்த கோப்பை
வெறும் தாகத்தை மட்டுமே
மொழிபெயர்த்து சொன்னது.
வாழ்கையின் ஆவிபறக்கும்
தருணங்களை இதில்
ஆற்றி ஆற்றி
என்னத்தைக்  குடித்து தீர்த்தோம்.
என்பதே தெரியவில்லை.

போதைக்கு குடிக்கிறவர்கள்
அவர்கள் மேனியை...
அவர்கள் உள்ளச்சிலுப்பல்களை....
ஏதோ  பூங்குரங்கு ஒன்று
சொறிந்து கொண்டே இருக்கும் அளவுக்கு
அங்கு எரிந்து கொண்டே இருக்கும்
"தினவு".....
இனிய சுகமான உட்பிறாண்டலாய்...
நாளங்களில் எல்லாம் மல்லாந்து கிடக்கிறார்கள்.

வாழ்க்கையை  அப்படி வாழ்ந்து தீர்ப்பதற்கும்
வாழ்கையே தான் கோப்பையாய்
 மனிதன் முன் நீட்டப்பட்டிருக்கிறது.
அதில் உற்று நோக்கினால்
அவன் பிம்பமே
கசக்கப்படும் துணிச்சிப்பமாய்
பிழியப்படுகிறது.
இருட்டு முண்டம் உருண்டு திரண்டு
கண்ணில் உயிர்த்து
அவனோடு கூடியிருக்கிறது.
அது அவன் திமிர்த்த பிழம்பு.
அது அவன் குழைத்த சைனாக் களிமண்.

கீட்ஸ் எழுதுகிறான்
அந்த கிரேக்கக்கிண்ணத்து
ஒவியங்களில்
கிறங்கிப்போய்:
"கேட்ட பாடல் இனிது
இன்னும் கேட்கப்படாத‌
அந்தப் பாடல் அதனினும் இனிது!"

இன்னும் கருப்பிடிக்காத‌
அந்த மின்னலின் குழம்புக்கிண்ணத்து
வாழ்க்கை
அந்தக்கடவுளினும் பெரிது!

அவன் கவிதையில்
அவனே பற்றி எரிகிறான்.

பார்த்துக்கொண்டே இருக்கும்போது
கோப்பை நொறுங்கிப்போகிறது.
கோப்பை வடிவம்
இன்னும் கனமாக
இன்னும் இறுக்கமாக
தொடு உணர்வு தாண்டிய
எ ஃ கு போல்
அவன் எச்சில் மிடறுகளில்
இறங்குகிறது.
அது சிலுவையா?
அவித்த பனங்கிழங்கா ?
சவ்வு மிட்டாய்க்காரன்
இழுத்து இழுத்து உருட்டி தரும்
நீள் இழையா?
அல்லது
"மேஜிக் நிபுணன்"
தொண்டைக்குள் செருகும்
பள பள கத்தியா?
நீரே இல்லாமல் ஒரு ஆழக்கடலின்
நீச்சல் பாய்ச்சல்களே
இந்த கோப்பை.

============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக