புதன், 10 அக்டோபர், 2018

கம்பளிப்பூச்சி.


கம்பளிப்பூச்சி.
================================ருத்ரா இ பரமசிவன்

அந்த கம்பளிப்பூச்சி
மரத்தின் கிளைகளில்
ஊர்ந்து ஊர்ந்து ஊடுருவி
இலைகளை தின்றது.
கீழே
வட்ட வட்டமாய்
வெள்ளிக்காசுகளை
இறைத்த சூரியன்
அந்த இலைகளின்
குடல்களுக்குள்ளும்
இரைப்பைக்குள்ளும்
புகுந்து வந்து
"பச்சையத்தின்" கவிச்சியோடு
அந்த நிழல்களின்
பச்சைக்கம்பள விரிப்பு
மனதை மயக்கியது.
கம்பளிப்பூச்சிக்கு மிகவும்
அற்ப ஆசை..
அல்ல அல்ல..
அது ஒரு உயிர்த்துடிப்பான கனவு!
ஆம்.
அந்த சூரியனையே
சுவைத்துச் சுவைத்து
தின்றால் என்ன?
உச்சிக்கு சென்று
தின்றுவிடுவதைப்போல‌
கூழ் உடம்பை அங்கு
நீட்டி நெளித்தது.
............
............
சூரியமண்டலத்தின்
புழுக்கூடுகள் போல்
மேகங்கள் உருண்டு திரண்டு
தொங்கிக்கொண்டு இருந்தன.
திடீரென்று
ஏழுவர்ணங்களால்
அந்த மாலை வானம்
மாலை போட்டுக்கொண்டது.

கம்பளிப்பூச்சியை
வண்ணக்குழம்பாக்கி
ஒரு பிக்காசோவின்
மாய விரல்கள்
கனவு எனும் சொல்லை
அங்கே
மொழி பெயர்த்துக்கொண்டிருந்தன.
எங்கோ
காதல் ஏக்கங்கள்
அப்படித்தான் இதயங்களை
"கோக்கூன்"களாக்கி
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அந்த "வானவில்" சிறகுகளே
புழுக்கூடுகளின்  சிறை மீண்ட‌
கனவுகள்!

==================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக