ஒரு நாள் அனுப்பிய
ஒரு துளியை அனுப்பிய
மழையின் மடிநிறைய இடிகள்தான்
இருக்குமா?
கார்காலக் கனவு பூமிப்புப் புனைவு
ஏதும் இருக்காதா?
ஒரு சொல்லை அனுப்பிய
மொழியின் கையிருப்பில் அடம்பிடிக்கும்மெளனம்தான்
இருக்குமா?
தாலாட்டு தெம்மாங்கு ஒப்பாரி
ஒன்றும் இருக்காதா?
ஒருவிதையை அனுப்பிய
வேரின் திட்டத்தில்
அழும் கிளைகள் அழுகும் இலைகள்தான்
இருக்குமா?
படரும் பசுமை பறவைப்பாட்டு
பசிக்குக் கனிகள் உறங்கநிழல்கள்
ஒன்றுமே இருக்காதா?
ஒரு மனிதனைப் படைத்த
வாழ்வின் கனவில்
உறவுகள் முறிவுகள்பழிப்புகள் மட்டுமே
இருக்குமா?
அன்பின் இறுக்கம் ஆசைப்பெருக்கம்
ஒன்றுமே இருக்காதா?
6-11-25 காலை 8-10
இருக்குமா?இருக்காதா?
தூரிகைப்பீலிகள்!
__________________________________
சொற்கீரன்
(6-11 ௨5ல்
இருக்குமா?இருக்காதா? என்ற
தலைப்பில் எழுதிய
ஈரோடு தமிழன்பன் கவிதையின்
சிலிர்ப்புப்பீலிகள் பற்றிய
என் கவிதை இது)
பொன்காலைப் பொழுது
புண்பட்டதேனோ?
இளங்காலையின் விசிறி மடிப்புகள்
இன்னுமா
தூங்கிக் கொண்டிருக்கின்றன?
தமிழன்பன் கவிதைகளின்
பள்ளியெழுச்சி வரிகள்
இன்னுமா பசுமைத்தீயை
பற்ற வைக்க வில்லை
அந்த தொட்டாற்சிணுங்கி
இலை மடிப்புகளில்?
விடியலும் அந்தியும்
இளஞ்சிவப்புகளில் தானே
கண்ணொளி காட்டுகின்றன.
அவன் கவிதைகளின்
எதுகை மொனைகளுக்கு
தெரியாதா
எது சினம்? எது சிணுங்கல் என்று?
மொழிக்கு புன்சிரிப்பு மட்டும் தான
பரிச்சயமா?
அதன் சொற்கள் வேர்பிளந்தால்
எரிமலைக்குழம்பில் அல்லவா
சுவை கூட்டும்!
தாலாட்டோ
தெம்மாங்கோ
ஒப்பாரியோ
தாய்மைப்பெண்மையின்
அகச்சிவபுக்கிரணங்களின்
அதிர்வு எண் வரிசையில்
ஒரு புதிய படைப்பு யுகம்
"ஸ்ட்ரிங்க் தியரிகளின் "
தொட்டில் கட்டி அல்லவா
தூங்க வைக்கும்.
அப்போதும்
அது வெங்கனற்பாட்டே தான்!
யானை படுத்தாலும் குதிரை மட்டம்
என்பது போல்
எவருடைய எசப்பாட்டும்
அவன் கவிதையின்
சிவப்பு அணுக்களில் தான்
துளிர்த்து நிற்கும்.
பட்டுப்போகும் விதையா
அவன் கவிதை?
காகிதங்களில்
அவன் பேனா முள் தைத்த
முற்றுப்புள்ளிகளும்
நிறுத்தற்குறிகளும்
வெளிச்சம் இழந்த தற்குறிகளுக்கு
உயிர் ஊட்டி அல்லவா
உரம் சேர்க்கும்?
கனவுகள் இருட்டின் பிண்டங்கள்
அல்ல.
விழிப்பின் மனச்சிலிர்ப்புகளின்
"சைக்கடெலிக்" சிகிச்சைகள் அவை.
நிறம் மாறாத பூக்களுக்கும்
வண்ண வண்ணக்குழைப்புகளின்
தூரிகைப்பீலிகள் அவை!
கொஞ்சம் அவை
எழில் பொங்க
கிச்சு கிச்சு மூட்டிக்கொள்ளட்டும்!
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக