"ஓராண்டு நினைவு திரும்புமுன்னே
நூறாண்டு மறக்கப்படுகிறார்கள்.."
கவியரசு வைரமுத்து அவர்களே
கவிஞர் மருதகாசி அவர்களை
நினைவு கூரும் உங்கள் வரிகளைகண்டு
மிக மிக உறைந்து போனேன்.
எத்துணை ஆழமானவை உங்கள் வரிகள்.
கவியரசு வைரமுத்து அவர்களே
வைரவரிகளின்
அடர்மழைதான் உங்கள்
தேன்கவிதைகள்
என்பது
அந்த புல் அறியும் புழு அறியும்
பூ அறியும் அதனுள் எரியும் அந்த
மகரந்த தூள் அறியும்!
மண் அறியும் விண் அறியும்.
ஆனாலும்
மேலே நீங்கள் எழுதிய
உங்கள் வரிகள்
எந்த ஒப்புமைக்கும் அடங்காத
ஒப்பற்ற வரிகள்.
அது ஆயிரம் வானங்களை
சுருட்டி மடக்கி உள் வைத்திருக்கிறது.
கற்பனை அல்லது உங்கள்
மன ஆழம் என்பது
எவ்வளவு என்பதையே அளக்க முடியாத
ஆழமிக்க வரிகள் இவை!
ஓராண்டுக்குள்
பல நூறாண்டுகள் போய்
நூலாம்படை கோர்த்துக்கொள்ளும்
நீள யுகங்களையெல்லாம்
கொட்டாவி விடச்செய்து கொண்டிருக்கும்
ஒரு சோக அமைதியின் ஆற்றாமையை
கொப்பளிக்கும் வரிகள் அல்லவா அவை.
உலகத்து நூலகங்களையெல்லாம்
உருட்டித்திரட்டிக் கொண்டுவந்தாலும்
இந்த வரிகள் அங்கே
கிடைத்திருக்குமா என்ன?
"எழுதரு மதியம் கடற்கண்டாங்கு"
என்று
வரிகளும் எழுத்துக்களும்
பொங்கிக்கொண்டே இருக்கின்றன.
அந்த உங்கள் இரண்டு வரிகள் கண்டு!
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக