வ உ சி ...
__________________________________________
நான் செக்கிழுத்ததை
நீ சொல்லிக்கொண்டே தான்
இருக்கிறாய்
இன்னும் செக்குமாடுகளாய்
சுதந்திரம் எனும் வெறும் வாயை
அசை போட்டுக்கொண்டு.
மூவர்ணத்துக்கும் நான்கு வர்ணத்துக்கும்
இன்னும் வித்யாசங்கள்
தெரியாமல் தான் இந்த
வர்ண பூதங்களுக்கு
சூடம் சாம்பிராணி கொளுத்திக்
கொண்டிருக்கிறாய்.
ஓட்டுப்பெட்டி எனும்
உன் மண்டைக்கபாலத்தையே
அடித்து நொறுக்கி விட்டான்..
நீயோ அந்த கபாலம் எனும்
திருவோடு போய்விட்டதே
பிச்சை எடுக்க இனி
என்ன செய்வது என்று
இந்த "சிவன்"களிடம் இன்னும்
திருப்பள்ளி யெழுச்சி
பாடிக்கொண்டிருக்கிறாய்.
வேள் ஆண்மை என்றால்
சுதந்திரத்தை விரும்புதற்கு கூட
ஒரு ஆண்மை வேண்டும்.
நீயோ வேளாளன் என்று
சப்பையாக சப்பாணி
கொட்டிக்கொண்டிருக்கிறாய்.
வ உ சி அவர்களே
எப்படியும் போகட்டும்
எங்களுக்கு நீங்கள் இன்னும்
அடி மனத்து எரிமலை தான்!
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக