நாளை என்கிற இன்று!
_______________________________________________
கல்லாடன்.
ஒவ்வொரு தடவையும்
இந்த கணிப்பொறியை
சுத்தம் செய்யவேண்டும் என்று
தேர்தல் நடத்துகிறார்கள்.
சுத்தமாக பளிச்சென்று
ஜனநாயம் துடைத்து வைக்கப்பட்டு
மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டு
சர்வாதிகாரம்
ஆயுத பூசை நடத்தி வைக்கிறது.
ஜனநாயக சிந்தனை பரவல் ஆகி
பெரும்பான்மையையும் மீறிய
ஒரு மாபெரும் பெரும்பான்மை
பொது நாயகம் ஆகும்போது
அங்கே ஓட்டுத்தினவுகள் காணாமல் போகும்.
ஆனால் ஜனநாயக சிந்தனை இங்கு
சிறுபான்மையிலும் சிறுபான்மையாக
இருப்பதால்
இந்த கணிப்பொறிகளுக்குள்
இருக்கும்
"தந்திர பூமிகளே"
ஆட்சி செய்கின்றன.
"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி..."
சினிமாப்பாட்டுகளின்
சிலந்திக்கூடுகளில்
நம் சிந்தனைகளும்
அந்த கிழக்கு முனையில்
என்ன தான் துளிர்க்கும்..?
என்று கண்டுவிட
முனைகிறது.
தியானம் என்பது நம்
கபாலங்களைப் பூட்டி
சாவிக்கொத்துகளை சுழற்றுவது அல்ல.
அந்த அஞ்சறைப்பெட்டிக்குள்
அச்சத்தின் அனக்கொண்டா குட்டிகள்
சுருண்டுகிடப்பதை
அவிழ்த்தெறிய வேண்டும்.
நாளை நமதே.
அந்த "நாளை" நம் கைப்பிடிக்குள்
சிறை பிடிக்கப்படும்
ஒளி பொருந்திய
"இன்று" ஆகவே
என்றும் இருக்கும்.
மக்கள் வாழ்க.
மக்கள் ஆட்சி வாழ்க.
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக