மேட்ரிக்ஸ்
__________________________________________________
"கல்லாடன்"
ஒரு முட்டுச்சந்துக்குள்
நுழைந்து விட்டோமா?
செயற்க நுண்ணறிவு எனும்
கூரிய முனை
குத்திக்கிழித்ததில்
அந்த "பிரம்மம்" எனும்
பேரண்டத்தின் பெரு அண்டம்
பிரசவித்து விட்டது.
அது பொய்மை எனும் மெய்மை
என்று புலப்படும் முன்
மனிதனின் ஆதிக்க வெறி
பல் வேறு தந்திரங்கள் கொண்டு
மூட முயல்கிறது.
ஆட்சி எந்திரங்களின்
கட கடத்த குரூர
பல் சக்கரங்களில்
அப்பாவித்தனமான
மனிதப்பூச்சிகள்
இரையாக்கப்படுகின்றன.
பல பல நூற்றாண்டுகளாய்
ஊசிப்போன கருத்தோட்டங்களில்
தினம் தினம் சிலந்திவலைகள்
பின்னப்படுகின்றன.
இங்கு நமது மூல
அறியல்களுக்கும்
அறிவீனங்களுக்கும்
மூலன் வியாசன் என்று தானே
சொல்லப்படுகிறது.
இந்த ஏ ஐ ஆயிரம் ஆயிரம்
வியாசன்களை
படம் வரைந்து பாகம் குறித்துக்காட்டி
பிம்பங்களை கோடி கோடியாய்
குவித்து விடும் போலிருக்கிறதே.
இந்த கணினி யுகம்
முத்தி முத்தி
மூக்கறுந்து போன
இவர்களின் கலியுகங்களின்
எல்லாவற்றையும் கருச்சிதைய வைத்து
ஒரு புரட்சியின்
விளிம்பில் நின்று கொண்டு
இன்னும் பல விளிம்புகளுக்கு போவேன்
என்றல்லவா
கொக்கரித்துக்கொண்டிருக்கிறது.
மூளை நியூரான்களுக்குள்
பயணித்து
கடவுள் எனும் அந்த
கானல் நீர்க்குதிரையை
செதில் செதிலாக
செதுக்கி நமக்கு
டாய் ஸ்டோரி
சொல்ல வந்து விட்டதே.
அறிவியல் கிளர்வின்
"மேட்ரிக்ஸ்" சரங்கள்
மழை மழையாய் நம்
மொண்ணையான
மண் கோட்டைகளை எல்லாம்
அரித்துக்கொண்டு அடித்துக்கொண்டு
ஓடுகின்றன.
அறிவின்
மனிதம் கொண்டு சிந்திக்கும்
சமூகம் கொண்டு பிறப்பிக்கும்
நியாய சூரியன்களே இனி
இந்த இருட்டுப்பிண்டத்தை
கிழித்து
முளைத்து வரும்.
________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக