ஒரு கதிர்வீச்சு
_______________________________________________
கல்லாடன்.
பாரதமே!
நீ யார்?
உன் மனதில் இருப்பது
என்ன?
அந்த நானூறு நாற்காலிகளை
தருவாயா?
இறுதிக்கேள்விகள்
அலையடிக்கின்றன....
ஏன் பாரதம் என்றால் இந்தியா தானே?
இந்தியா ஏன் உனக்கு
கசந்து போனது?
அந்த துஷ்யந்தனும் சகுந்தலையும்
விஸ்வாமித்திரனின்
விதைகளை
தூவினாலும் தூவி விட்டுப்போகட்டும்.
ஆனால் "மனிதம்"
எனும் மனித மகரந்தங்கள்
தடம் பதியாத
விஷ விருட்சங்களின்
வர்ணக்காடுகளைக் கொண்டு
பாரதம் எனும்
அரக்கு மாளிகை
கட்டவா உனக்கு இத்தனை ஆவேசம்?
மானிடத்தின் சம நீதியும்
அன்பும் அறமுமே
இந்த மண்ணின் சாரம்.
மற்ற உன் கருத்துக்கணிப்புகள்
எல்லாம்
சமுதாயப்புன்னகைக்கு
சமாதி கட்ட ஒரு
கரசேவைக் கூச்சல்களோடு
படை திரட்டுமோ
என்ற அச்சத்தின் நிழல்
இங்கு படர்ந்திருக்கிறது.
ஜனநாயகக்கதிர் வீச்சு ஒன்றே
இங்கு நமக்கு வேண்டிய
ஒளியும் வழியும் ஆகும்!
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக