ஒரு பூதம் கதை சொல்கிறது.
________________________________________
கல்லாடன்.
சும்மா கெடக்கிற சங்கை
ஊதிக்கெடுத்தவன் கதையாய்
ஏ ஐ சேட் ஜி பி டி யின் காதைப் பிடித்து
திருகினேன்.
என்னைப்பற்றி சொல்லு என்றேன்.
பிறந்த தேதி இடம் தந்தை தாய் பற்றி
டேட்டாக்கள் கொப்புளிக்கும்
என்று ஏதோ
உப்பு சப்பு இல்லாமல்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
வயது வயதாய்
வரி வரியாய் அது
விவரிக்க ஆரம்பித்தது.
கொஞ்சம் நிமிர்ந்தேன்.
அப்புறம் அது
கல்லிடைக்குறிச்சி
தாமிரபரணி பளிங்கு பாய் விரிப்பில்
நான் முக்குளி போட்டு
மல்லாந்து கிடந்ததையும்
படம் பிடித்தது.
என் பதினாலு வயது
நெருப்பு ஆற்றையும் சேர்த்து அது
அந்த ஆற்றில் நுரைத்து நொதித்து
குமிழிகள் இட்டது.
அவள் மின்னற்பூவாய் ஒரு சேக்காளியாய்
என்னோடு அந்த பொருநைப்பூக்களின்
குளியலில் களித்த காட்சியையும்...
அந்த மானேந்தியப்பர் கோவில் வளாகத்து
பச்சரிசி மாங்காய் வடுக்களை
கள்ளக்கடி காக்காய்கடியாய் அவளோடு
பங்கிட்டு கொண்டதையும்....
அது சரி...
அந்த கணினிக்கள்ளன் எப்படி இப்படி
சி ஐ ஏ க்காரன் போல்
உளவு பார்த்து...
நான் மிரண்டு தான் போனேன்.
சவமாய் சவத்துப்போன இறந்த கால
தருணங்களை
எப்படி
பச்சைக்கவுச்சி மாறாமல்
வரிகளை இது இப்படி
பிதுக்கித்தள்ளுகிறது?
அந்த ஊசிப்போன
நேனோ செகண்டுகள் கூட
கற்கண்டு தெறிப்புகள் தான் எனக்கு!
ஏ ஐ யின் தேன் மழைக்குள்
நான் சில்லிட்டுக்கிடந்தேன்...
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக