வெள்ளி, 24 மே, 2024

பைந்தமிழ்க்கவிஞர் தமிழன்பன் அவர்களே!

 


பைந்தமிழ்க்கவிஞர்

தமிழன்பன் அவர்களே!

அடைமொழி ஈரோட்டில்

மைல் கல்களே இல்லை.

ஏனெனில்

அடையாளங்களோ எல்லைகளோ

இல்லாத‌

நீடு நீடு ஊழிகளின் 

தமிழின் பயணம்

உங்கள் சொல்லின் பயணம்.

உங்கள் மனக்கல் 

ஒவ்வொரு துளியிலும்

வைரங்கள் ஆகி

கதிர் வீசிக்கொண்டிருக்கிறது.

தமிழ் 

தன் சொற்களை 

உங்கள் கவிதைகள் மூலம்

பட்டை தீட்டிக்கொண்டிருக்கின்றது.

சின்ன இன்பம் 

பெரிய இன்பம் 

சொர்க்கம் 

கடவுள் என்றெல்லாம்

தமிழன் ஒரு

அஞ்சறைப்பெட்டிக்குள்

அடைந்து கிடக்கவில்லை.

அவனுக்கு

அஞ்சிறைத்தும்பியும் ஒன்று தான்.

அழகிய காதலியும் ஒன்று தான்.

கடலோரம் கிடக்கின்ற

சிறு கூழாங்கல்லும்

அலை நுரை பட்டு

அலம்புவதில் 

காதல் கசியும்.

கடவுளுக்கு

மறைவாக மந்திரக்கூச்சல்கள்

பொழிவதில்

குப்பைக்கூளங்களே சேர்கின்றன

என்று

நினைக்கின்றவனே தமிழன்.

சங்கத்தமிழ் 

சொற்கூட்டம்

நம் வாழ்வின் 

நுண்ணிய பிம்பங்கள்.

உங்கள் கவிதைகள்

எப்போதும் 

புதுப்பொலிவோடு விளங்கும்

விழாத்தோரணங்களாய்

அகவுகின்றன.

கலித்தல் ஆர்க்கின்றன.

பரிபாடல்களாய்

ஆழ் மனத்துள் இனிமை

பிழிய பிழிய கூவுகின்றன.

அன்றைய‌

எழுத்தாணிகளுக்கு 

எட்டாது எட்டும் 

தொகைகள் எல்லாம்

இன்றைய "கணினி"ச்சுவடிகளையும்

கடந்து வந்து

பாய்கின்றன.

மயில் இறகுகள் பாவனை செய்து கொண்டு

பாதைகள் போட்டு வந்தாலும்

சமுதாயம் மாறப்போகும்

புயல் மூச்சுகளின் முகம் காட்டும்

சுவடுகளையும் ஏந்திவருகின்றன‌

உங்கள் வரிகள்.

உங்கள் விரல்கள் தட்டும் 

விசைப்பலகையில்

கணினி மொழியின் 

அனக்கொண்டாக்கள்

பைத்தான் நடையில் 

பையவே வந்து

தமிழ் மூச்சுகளில் சீறும்.

தமிழ் வீச்சுகளில் பாயும்.

உங்கள் கவிதைகள்

சிந்தனையின் குவாண்டத்தை

வேவ் பேக்கட்களில்

எங்கள் உள் பக்கங்களில்

நிரவி விடுகின்றன.

எங்கள் சுடரேந்தியாய் 

என்றும் தொடர்க.


_________________________________________________‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக