புதன், 29 மே, 2024

புத்தகம் எனும் வெளிச்சம்

 "டாஸ் கேபிடல்"

__________________________________________‍______

செங்கீரன்.



இது வாசலா? வீடா?

நுழையும் போது

நம்மீது பன்னீர் தெளித்து

வரவேற்கிறது.

கொட்டாவி விடும் நம் 

அகலாமான வாய்முன் 

சடக்கென்று சொடக்கு போடுகிறது.

அப்புறம்

நுழைமுகம் என்று 

முன் தகவல்களை

பட்டுக்கம்பளமாய் விரிக்கிறது.

பிறகு 

உள்ளடக்கம் 

வரிசை படுத்தப்படுகிறது.

அதன் உள்விவரம் தெரிகிறது.

அதன் இதயம் நுரைஈரல்

கல்லீரல் குடல் எல்லாம்

மூளையாய் படர்ந்து இழைந்து

கிடக்கிறது.

நாளங்கள்

கள களக்கின்றன.

சூடான ஆறுகளாக.

நம் இருட்டையெல்லாம்

துடைத்து 

ஒளிபிழம்பை

ஒற்றித்தருகிறது.

மனிதா!

நீ முழுமையடையும் 

தொழிற்பட்டறை இது தான்.

உன் வளைந்து நெளிந்த‌

வக்கிரங்கள் கோணல்கள் 

எல்லாம் 

டிங்கரிங் செய்யப்படுகின்றன.

அவ்வப்போது 

இதன் சன்னல்கள் வழியாக‌

இந்த உலகை எட்டிப்பார்க்கிறாய்.

அப்போது தான்

புரிகிறது

நீ இத்தனை நாளாய்

அந்த கருவறையின் கவுச்சி நாறும்

நீர்ப்படலம் சுற்றிக்கிடந்தாய்

என்று.

உன் கூர் நகங்களும்

கோரைப்பற்களும்

ஒரு ரத்தப்பசியெடுத்து

அலைகின்றன என்று.

உன் போன்ற 

ஏன்

உன்னை ஈன்றவர்களையும்

மற்றும் 

மற்ற மனிதர்களையும் கூட‌

அடித்துத்தின்னும்

வெறி வடிவங்களாய்

இருந்திருக்கிறாய் என்று.

இங்கே நுழைந்து 

நீ இந்த உலகத்தின்

நாடி நரம்புகளில் இழைந்த பின் தான்

நீ

சுடர் விடுகிறாய்.

அது வரை கண்ணுக்குத்தெரியாத‌

அச்சமும் ஐயமும்

கடவுளாக‌

உன்னைப் பிய்த்து பிய்த்து

அங்கே இங்கே என்று எறிந்திருக்கிறது.

எல்லோர் முகமும்

உன் முகமும் சேர்த்து தான்..

அந்த மகிழ்ச்சி மலர்களை

விரிக்கும் போது

நீ 

உணர்கிறாய்

உன்னையே ஒரு 

புதுக்கடவுளாய்.

இந்த அண்டவெளியெல்லாம்

அளைந்து பார்க்கிறாய்.

அறிவு எனும்

ஒரு ஆச்சரியமும் வியப்பும்

பெருமையும் உண்மையுமாய்

நீ 

உணர்கிறாய்.

மனிதர்கள் சம உரிமையில்

விடு பட்டு 

உலகம் முழுவதுமே

அவன் வீடு

என்று மனிதன்  உணர்கிறான்.

இதுவே விஞ்ஞானிகளின் 

கிராண்ட் யுனிஃபிகேஷன்.

ஓ மனிதா!

இப்போது நுழைந்திருக்கிறாயே

இது தான் ஒரு நல்ல புத்தகம் ஆகிறது.

இருட்டு மூடிய நூலாம்படைகளில்

வெளிச்சம் தேடி நூற்று நூல் ஆக்கியிருக்கிறார்.

அந்த மா மேதை எனும் 

கார்ல் மார்க்ஸ் 

லண்டனின் அந்த மாபெரும் நூலகத்தை

கடைந்து திரட்டி

இந்த பாற்கடலைத் தந்திருக்கிறார்.

உன் அமுதமும் உன் நஞ்சும்

உன்னைச்சுற்றிய முரண்பாடுகளின் அலைகள்

என்று உனக்கு உணர்த்துகிறது.

உன் வியர்வைக்கடலே

எல்லாவற்றையும் ஆள வல்லது

என்று முரசு கொட்டுகிறார்.

கற்பனை விரிப்புகள் எனும்

கருத்து முதல் வாதம் 

வெறும் பஞ்சு மேகங்களே.

உன் ஓர்மையில் நிரடுகின்ற‌

இந்த பொருண்மை உலகமே

உன்னை நிமிர்த்திவைக்கும்

பொருள் முதல் வாதம்.

இந்த அலைகளை எதிர்த்த எதிர் நீச்சலே

உன் வாழ்க்கை.

இதன் வாசனை உன்னைத்தழுவிய பின்

பிரிவு வாதம் பிளவு வாதம்

என்னும் பேய்களெல்லாம்

தொலைந்தே போகின்றன.


_______________________________________________








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக