பூவே பூவே
__________________________________
மதனகாம ராசன்.
பூவே பூவே
பட்டாம்பூச்சியோடு
உனக்கு என்ன போட்டி?
வண்ணத்திலா?
எண்ணத்திலா?
கவிஞா
போதும்
உன் பேனாவை
முறித்துப்போடு.
உன் பயணத்தின் தூரம் புரியவில்லை.
எதிர்ப்படும் அந்த
மிச்ச மைல் கல் தோறும்
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும்
ரோஜாவை வைத்து
பதியம் போட்டுக்கொண்டு...
அந்தக் காலப்பறவை
உன் மீது எச்சம் இட்டு விட்டு ஓடுவதை
துடைக்கவும் விளங்காமல்
மலங்க மலங்க
மல்லாந்து கிடத்து
விழித்துக்கொண்டு....
அந்தப்பூவும் பட்டாம்பூச்சியும்
இன்னும் உன்னை
தட்டாமாலை
சுற்றிக்கொண்டிருக்கின்றன
உன்னைப்பற்றி
உன்னைச்சுற்றி
இருப்பவர்களைப் பற்றி
சிந்தித்தது உண்டா?
ஒரு தேக்கத்திலேயே
அமிழ்ந்து
இப்படி
செக்கு மாட்டுத்தன
எழுத்துக்களைத் தூர
எறிந்து விடு.
சரி
அப்புறம் உன் சித்தாந்தம்
தூவும் மகரந்தங்கள்
என்னவென்று பார்த்தால்
மலடு தட்டிப்போன பாறையில்
மஞ்சள் குங்குமம் வைத்து
மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்கிறது.
அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டும்
அறிவியல் சுவையை நோக்கி
அலை விரிக்காதது ஏன்?
தமிழா!
உன் பாய் மரம் பாயாத கடல் இல்லை.
உன் கால் பாவாத மண் இல்லை.
உன் மொழியின் வீச்சு ஏன்
இன்று
மழுங்கிப்போனது?
நிலவில் போய் தேரோட்டும் வேளையில்
அமாவசைத்தர்ப்பணம் என்று
தர்ப்பைப்புல்லோடு
சப்தம் போட்டுக்கொண்டிருக்கிறாய்.
முரண்பாடுகள் கூர்மையாகும் போது
முனை மழுங்கி
மனம் முறிந்து போகிறாய்.
புதிய அறிவின் நெருப்பினை
ஓர்மை கொள்.
பல நூற்றாண்டுகளாய்
ஒரே படுக்கை
ஒரே தலையணை
அழுக்கேறிய சிந்தனை.
உன்னைச்சோறிந்து கொள்ளவும்
நீ சொறிந்து கொள்ளவும்
அந்த கடவுள் தானா கிடைத்தது?
கடவுள் மனிதனில் கரைந்து போனது
என்று
சிந்தனைபிரளயம் ஒரு
சிகரம் காட்டுகிறது.
உயரம் தொடு.
அப்போதே நம் குறுகிய
குத்து வெட்டுகளின் குமிழிகள்
காணாமல் போய்விடும்.
________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக