சனி, 18 மே, 2024

ஈரோடு தமிழன்பன்!

 சுடச் சுட

என் காலையின் காப்பிக்கோப்பையில்

பேரண்டப்பெருஞ்சுவையாய்

தமிழ் உயிர்த்த ஆவி நுரையோடு

ஈரோடு தமிழன்பன்!

___________________________________

கல்லாடன் 

காலை 07.45 ..19.05.2024


ஈரோடு தமிழன்பன்!

------------------------------------------

பரிதி நான்!

கிழக்கின் மார்பில் பால்குடித்து
வளர்ந்தவன் நான்.!
பகல்காப்பியத்தின் நாயகன் நான்!
மூடுண்ட மொழியால்
பேசத் தெரியாத எனக்கு
வெளிச்சமே தாய்மொழி!
வெப்பமே மூச்சு!
வானத்தை முதலில்
விரித்து வைத்தேன்!
திசைகளுக்கெல்லாம் பெயர் வைத்தேன்!
தாய்க்குக்
குழந்தை பெயர் வைப்பதுபோல்
நான்தான் கிழக்கென்றுபெயர்வைத்தேன்
என் கனவுகளை
எந்த இரவும் கண்டதில்லை!
என் நனவுகளை எந்த நோயும்
தொட்டதில்லை!
கிரகணங்கள்
என் கருத்துகளைச் சரிபார்க்கும் நேரம்தான்;வேறொன்றும் இல்லை.
என்னைப்போல் வேறு
சூரியர்கள் இருக்கலாம்
ஆனால்
கபாலக் களஞ்சியம் திறந்த
மானுட முகமும்
அவர்கள்அறிமுகமும்
என்னையல்லால் மற்ற
யாருக்கு வாய்த்திருக்கும்?
எனக்கு இரவுகள் இல்லை
தூக்கமும் இல்லை தூக்கத்தின்
வாசலில் காத்துக்கிடக்கும்
கனவுகளும் இல்லை!
தாலாட்டும் பூபாளமும் எழுதும்
புலவர் கூட்டம் பூமியில்தான்!
இரவில்
தினமரணம் என்னைத்தீண்டுவதில்லை
அப்போதும் நான்
வேறுபக்கம்
வேலை பார்க்கப்போய்விடுகிறேன்!
ஒத்திகை பார்க்காமல்
பகல்நாடகத்திற்கு
ஒவ்வொரு நாட்டுக்கும் மேடையில்
திரை இறக்குகிறேன்!
இதுவரை
ஒருமுறைகூடத் திசைப்பிழை
நேர்ந்ததில்லை!
விடியல் வைகறை காலை நண்பகல்
மாலை அந்தி நள்ளிரவு
என்று
எச்சொல்லும் இல்லாத அகராதி
என்னுடையது.
வானத்தில் வகுப்பறைகள் கட்டும்போது
மாணவர்களாகச் சேர விண்ணப்பம்
போடும்
நேரங்களுக்கு இப்பெயர்கள்
தேவைப்படலாம்.
கடலும்
வானமும் கற்றுத்தேர்ந்த
நீலமொழியைக் கற்றவன் நான்
அதன்
சொற்களால் நான் கவிபுனைகிறேன்.
அதுமட்டுமில்லை
வான மீன்கள் எழுதும்
கவிதைகளைக்
கடல் நட்சத்திரமீன்களுக்கு
நான்தான்
கொண்டுவந்து கொடுக்கிறேன்!
அவரவர்க்கும் பகல்களை நான்
தந்துள்ளேன்
பாட்டாளி வேர்வையில் நனைந்த
பகல்களை நான்
முத்தமிட்டு வணங்குகிறேன்
படிப்பாளி சிந்தனையால் கனத்த
பகல்களை நான்
கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்
பொய்கள்
மொய்த்துக்கிடக்கும் இரவுகளில்
தடங்கண்டு
கனவுகள் போகமுடிவதில்லை
கனவுகளின்
ஒவ்வாமையை எந்த மருத்துவத்தால்
குணப்படுத்த முடியும்?
என்றேனும்
பகல்நேரமே கிடைக்கவில்லையெனில்
இயற்கையின்
தலைமைச்செயலகத்திற்கு
ஓர் விரைவு
மின்னஞ்சல் செய்தி அனுப்புங்கள்.
வெளிச்சமே என் தாய்மொழி
19.05.2024 காலை5.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக