செவ்வாய், 7 மே, 2024

ஒரு சுநாமி போல.


ஒரு சுநாமி போல....

_____________________________________

கல்லாடன்.




உலகத்தை உருட்டி விழுங்கி விடும்

சுநாமி போல் 

ஒரு அழுகை முட்டிக்கொண்டு

வருகிறது.

எதற்காக?

யாருக்காக?

இந்த கேள்விகள்

விடைகளை எதிர்பார்த்து

காத்திருக்க வில்லை.

தீப்பற்றி எரியும் ரத்த நாளங்களில்

ரோஜாக்களை பதியம் போடும்

அரக்கத்தனத்துள்ளும்

நம் அன்றாட அசைபோடல்கள்

உணர்வுத்தாடைகளை

அசைத்து அசைத்து

எதையோ தின்று தீர்க்க வெறிகொண்டு

கிடக்கிறது.

துன்ப துயரங்கள்

தின்று செரிக்கப்படும்

உணவுப்பண்டங்கள் அல்ல.

உன் சிதையின் மேல் உட்கார்ந்து கொண்டு

ராஜ யோகம் செய் என்று

பதஞ்சலி சொல்கிறார்.

குண்டலினியின் ஆகாசப்பூவுக்கு

தூண்டில் போட சொல்கிறார்.

துள்ளும் மீன்களைப்போல்

ஒரு மரணத்தின் தினவு

கண்ணுக்குத்தெரியாமல்

சொரிந்து கொண்டே இருக்கிறது.

செதில் செதில்களாக‌

உதிர்ந்து கொண்டிருக்கிறேன்.

டி எஸ் எலியட் ஒரு கவிதையில்

உடைந்து நொறுங்கிய தூண்கள்

தாங்க முடியாமல் 

சிதிலமாக கிடக்கும் மாளிகை போல‌

கிடந்து பழகுங்கள் என்கிறார்.

பாழ்நிலத்தில் கூட‌

பால் நிலா 

ஒரு மவுனத்தை 

தகனம் செய்து கொண்டிருக்கும்.

மிஞ்சப்போகும் 

சாம்பலும் எலும்புத்துண்டுகளும் கூட‌

இலக்கியம் நுரைக்கும்

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தான்.

இப்போது கட கட வென்று சிரிக்கிறேன்.

ஆம்

ஒரு சுநாமி போல.

____________________________________________ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக