செவ்வாய், 21 மே, 2024

தமிழன்பன் அவர்களே! 22.05.2024

 


தமிழன்பன் அவர்களே!

==========================================

22.05.2024.


மாமழை போற்றுதும்

மாமழை போற்றுதும் 

என்பதாய்  ஒரு கவிதை

எழுதியிருந்தீர்கள்.

மழை சொல்கிறது.

அது சரிதான்!

எங்காவது என் 

இளிச்ச வாயைத்திறந்து

இருபத்திஅஞ்சு செ.மீ என்று

காட்டினால்

கலங்கிப்போகிறாய்.

மூழ்கி மூச்சவிந்து காணாமல்

போகிறாய்.

தமிழும் ஏழ்கடலை புகட்டி

உனக்கு செய்யுள் தந்தால்

நீ என்ன பாடு படுவாய்?

தமிழா! 

இனிமை கொப்புளிக்கும் 

பிரளயம் அது.

அதன் இலக்கண இலக்கியக்

காடுகளுள் 

எல்லாம் காணாமல் காணக்கிடைக்கும்.

மண்டையோட்டுச் சிதலங்களிலும்

மண்பாட்ட கிறுக்கல்களிலும்

கிடப்பவை

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்

மக்கிப்போன உணர்வுகள் இல்லை.

தமிழன்பன் அவர்களே!

அந்த படிவங்களின்

இத்தருணத்து துடிப்புகளையும்

எங்களுக்கு 

கிள்ளித்தருகிறீர்கள்

நுள்ளித்தருகிறீர்கள்.

ஆனாலும் சவத்துப்போன 

இந்த கூச்சல்கள் 

கூளங்களாய் வந்து 

குறுக்கே குறுக்கே

கும்பாபிஷேகங்கள் நடத்துகின்றன.

தமிழின் நெருப்புப்பிழம்பே!

பன்னீர் தெளிப்பது போல்

உங்கள் எழுத்துக்களின்

சாரலும் தூரலும் போதும்.

தமிழ் எங்கள் உயிர் தான்

உயிரைத் தவிர‌

வேறு ஒன்றும் இல்லை.

உங்கள் அடுத்த கவிதைக்கு 

காத்திருப்போம்

ஆக்சிஜன் சிலிண்டருக்கு

காத்திருப்பது போல!


___________________________________

கல்லாடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக