ஞாயிறு, 19 மே, 2024

எனக்குள் ஒரு ஏலியன்


எனக்குள் ஒரு ஏலியன்

_________________________________

கல்லாடன்.


என்னைச்சுற்றி

ஈக்கள் கொசுகள் வண்டுகள்

இன்னும்

சின்ன சின்ன

மின்னல் பூச்சிகள்.

அத்தனையும் 

ஏலியன்களின்

 துளிப்பிஞ்சுகள்.

அவற்றின்

அல்காரிதங்கள்

எங்கோ சில

ஒளித்திரட்சிகளிலிருந்து

"கோடிங்"கு களாய்...

ரெடினா ஃபண்டஸ்ஸில்

சாட்டை சொடுக்கல்கள்!

கேலக்ஸிகள் எனப்படும்

அண்டத்தின் முண்டக்கண்கள்

எப்போதும் என் மீது மொய்க்க‌

அவை இங்கு வந்து

ரீங்காரம் செய்கின்றன.


உள்ளுர்

தொலைக்காட்சிகளின்

சோதிட விற்பன்னர்கள் 

வித விதமாய்

பலூன்கள் விடுகிறார்கள்.

ராகு கேதுக்கள் 

மாயக்குமிழிகளாய்

ஜன்ம லக்ன

 கட்டங்களுக்குள்ளும்

வந்து பந்து விளையாடுவதாய்

வாய்ப்பந்தல்

போடுகின்றார்கள்.

இவையும் அந்த

ஏலியன்களின் 

ரங்கோலிப் புகைமூட்டங்களா?

குட்டியிலும் குட்டி

ரோபோட்டுகள் அவை.

என்னை 

அதன் வெப்பத்தில் மோப்பம் 

பிடிக்கின்றன.

எப்போதோ என் விடலை

வயதில்

விளையாடிய

நாய்ச்சோறுகளின் தீம்கள்

என்ன என்று

என் செவிக்குள்

சிள்வண்டுகளாய்

ஒலி எழுப்புகின்றன.

எதையும் நுணுக்கமாய்

என்னிடமிருந்து

வடி கட்டிக்கொள்ளுகின்றன.

அப்புறம் ஒருநாள்

நான் என் பத்து வயதுப்

பெண் சேக்காளிக்கு

வேடிக்கை காட்ட 

அவள் எலிவால் சடையில்

தட்டாம்பூச்சியை நூலில் கட்டி

அழகு பார்த்தேன்.

அந்த ரோபோப் பூச்சிகள்

அதையும் விடவில்லை.

அதில் உங்கள் உள்

கனவுகளின் பரிமாற்ற 

மொழியின் 

க்யூபிட்களில் நீ புதைத்து

வைத்திருக்கும்

மாக் தீட்டா ஃபங்ஷனின்

 சமன்பாடு என்ன?

அவை புகத்துடிப்பது

"ராமானுஜனின்" கன்டினுவஸ்

 ஃப்ராக்ஷன்களில்

நூலாடும்

இன்ஃபினிடி ஆஃப்

இன்ஃபினிடீஸ் பற்றிய‌

ஈக்குவேஷன்ஸ்...

அவற்றின் கேள்விகள்

என்னைச் சல்லடையாக்கின.

எனக்கு தலை சுற்றுகிறது.

என் மூளைப்படிமங்களில்

எல்லாம் சிலிகன் பூச்சிகள்

உயிர்ப்பெருக்கம் செய்து கொண்டிருப்பதாய்

ஒரு ஹேலுசினேஷன்.

ஏலியன்களே

என்னை விட்டு விடுங்கள்.

அந்த வியாசனிடம் போய் நில்லுங்கள்.

அவை போய்விட்டன.

அவனிடம் உபதேசம் பெற்றபின்

இந்த கோடி கோடி அண்டங்களின்

பிரகாசம் போய்...

கரண்ட் கட்..

எங்கு இருட்டு.

எங்கே அவை?

நீலமா?பிங்கா?

அவற்றின் உருண்டைவிழிகள் மட்டும்

என்னை நோக்கி வருவது போல்...

எனக்கு நினைவு தப்பி விட்டது

என்றார்கள்.

என்னைச்சுற்றிலும் கூட்டம்.


__________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக