வியாழன், 9 மே, 2024

தூக்கத்தில் நடக்கின்ற வியாதி ...

 சோம்னாம்புலிசம்

_________________________________________

ருத்ரா.


தூக்கத்தில் நடக்கின்ற 

வியாதி தான்

நமக்கு.

எழுபத்திஐந்து சொச்சம் வருடமாய்

அலைந்து திரிந்தும் 

தூங்குகின்றோம்.

அடிமாடுகளாய் அந்த‌

நாலுவர்ணத்தை

மூணு வர்ணமென்று

அசைபோட்டு அசை போட்டு

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.

அடிமைத்தனம் கெட்டியான

விலங்குகளை 

சுதந்திரம் என்று

அர்த்தம் எழுதி எழுதி

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்.

கடவுள் கைநிறைய வைத்திருக்கும்

அபினிப்புராணங்களில்

அமிழ்ந்து கிடந்து

தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

மனிதனுக்கு மனிதன் 

வாழ்வதற்கு கிடைக்கும் 

உரிமைகள் எல்லாம்

கந்தல்களாய் கிடக்கும் 

கனவுச்சதைகளில் போர்த்துக்கொண்டு

தூங்கிக்கொண்டு தான் 

இருக்கிறோம்.

ஓட்டு எந்திரம் 

நம்மையே பட்டன்கள் ஆக்கி

அமுக்கிக்கொண்டிருக்கும்

ஓர்மையும் இன்றி

கூர்மை மழுங்கிப்போன‌

சமூகநீதிகளால்

அடைபட்டு 

ஆனாலும் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

கனவில் கழுவேற்றப்படுகிறோம்.

நனவில் பிய்ந்து கிடக்கிறோம்.

ஆனாலும்

தூங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்

துருப்பிடித்த நூற்றாண்டுகளின்

வரலாற்று ரணங்களோடு...


_______________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக