வெள்ளி, 31 மார்ச், 2023

வெற்றிமாறனின் விடுதலை.

வெற்றிமாறனின் விடுதலை

________________________________________________

சேயோன்.



ஏறக்குறைய ஒன்றரை லட்சம் 

இலங்கைத்தமிழர்கள்

கசாப்பு செய்யப்பட்ட பின்பும்

அதன் குருதிகலந்த கண்ணீரின்

அக்ரிலிக் பெயின்டிங்கில்

கொடி அசைத்துக்கொண்டு

செத்துப்போன நியாயத்துக்கு

எள்ளும் தண்ணீருமாய் வந்து

கொட்டிக்கொடுக்கப்படும்

கரன்சிக்கோட்டை ஒன்றைக்கட்டி

ஆளுகின்ற ஜிகினா ஆவேசங்களையெல்லாம்

பார்த்த பின்

ஏதோ ஒரு நீர்த்துப்போன‌

விடுதலை தாகத்துக்குள்

மீண்டும் ஒரு செயற்கைத்தாகம் ஏற்படுத்த‌

ரத்தமும் நகப்பிடுங்கல்கள்களும்

நிர்வாணப்படுத்தும் வெறித்தனங்களும்

என்னத்தை உயிர்த்துவிட இயலும்?

கம்யூனிசம் பற்றி

சாதாரணமாய் ராமாயண உபன்யாசங்கள்

போல‌

சப்பளக்கட்டைகள் தட்டி

இந்த மரத்துப்போன‌

செவிப்பறைகளை கிழித்துவிட முடியாத போது

இந்த எரிமலை தாகத்தை

ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்து

அப்படியே அப்பிவைத்துக்காட்டுகிறேன்

என்பதில்

ஒரு கனத்த கண்ணீர்த்துளி

கதை சொல்கிறது...அதுவும்

ஒரு அமிலமழைக்கு மேகம் கருவிக்கொண்டு

அகர முதல சொல்லத்துடிக்கிறது

என்பது மிக மிகத்தேவையான ஒன்று.

இதை பாராட்டு என்று கொச்சைப்படுத்துவதில்

எந்த நோக்கமும் நிறைவேறாது.

சூரி வெற்றிமாறன் கௌதம் மேனன் விஜய் சேதுபதி

என்று

ஒரு செம்படை கிழக்குத்திசையில்

ஒருவிடியலின் சிப்பைக்கிழித்துவிட‌

உந்துதல் காட்டுகிறது என்பதே

நாம் கண்ட சிறந்த வரலாற்றுத்திருப்பம்.

பிராணாயாமம் அது இது என்று

மூச்சுக்கலை பற்றி முழக்குவதில் தான்

நாம் மூழ்கியிருக்கிறோம்.

சமுதாயத்தின் 

அந்த மனித மூச்சே தான் மார்க்சிசம்

என்று இந்த படம்

அந்த சோடாபுட்டி அறிவுஜீவிகளுக்குள்

சோடாபாட்டில்கள் உடைத்துக்காட்டுமா?

மனிதனை மனிதன் சுரண்டுகின்றானடா

மனிதனை மனிதன் சாப்பிடறாண்டா

மனிதன் மனிதன் விலங்கிலும் கீழாய்

நடத்துகிறானடா

...

சரி அடா புடான்னு எழுதிட்டா போதுமா?

சீற்றம் எங்கே?

சினம் எங்கே?

ஆவேசம் எங்கே?

சிந்தனை உந்தலில் 

சிந்தனை விசையில்

சிந்தனையின் 

கால வெளி சமுதாயச்சுழி ஒன்று

கருந்துளையாய்

புதிய பிரபஞ்சங்களை

உறிஞ்சி உமிழுகிறது.

இதன் வெளிச்சம் 

எல்லா இருட்டு குருட்டு சந்துகளிலும்

கிழித்துக்கொண்டு பாய்கிறது.

அந்த பாய்ச்சல் மாறனே

வெற்றி மாறன்.

இன்னும் இன்னும்

இவன் மனித சிந்தனை

அநீதிகளின்

மடை உடைத்த வெள்ளமாய் 

பாயட்டும்.

மக்கள் விசையே

எல்லா அணுக்களிலும் 

அறியாமையை 

பிளக்கும் விசை.

அறிவுச்செறிவை

சேர்க்கும் விசை.

மனிதச்சுடரேந்தி..

ஓ! மனிதமே !

ஓடி வா! ஓடி வா!


________________________________________________




________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக