புதன், 29 மார்ச், 2023

அகழ்நானூறு 32

 அகழ்நானூறு 32

___________________________________________

சொற்கீரன்.



சிமையக்குரல் கவின் ஊர்பு முடிச்சு

நிமிர்த்தன எதிரிய நிரம்பா நீளிடை

அவள் ஊறுசெய்தனள் கூந்தல் அஞ்சிறை

கொடுந்தண் பண்ணின் ஒலிமென் உருகெழ‌

ஓவு கொண்டனள் அவன் ஆவி கொண்டனள்.

அத்தம் நண்ணி அரும் பொருள் சேர்த்து

அகில் சுமந்து ஆர்த்த செல்வம் மணிநிரை கொளீஇ

ஆறு கொள்ளா ஆறுகள் நீந்துவன் ஆங்கு

சிமயவரம்பினள் சீர்மிகு ஐம்பால் கூந்தல் 

செறீஇய கருவி வானம் கல் பொருது இற‌ங்க‌

கருவிழி கொடிவிடு நீர்வழியாய் அவள் கறங்கு

வழியில் அவனும் இழைந்தான் பகன்றை அன்ன‌

அவள் முன்றில் இவர்தல் ஆற்றான் முறுவல் கண்டே


___________________________________________________________



அகழ்நானூறு 32க்கு பொழிப்புரை

___________________________________________________

சொற்கீரன்


பொருள்தேடி செல்லும் காதலன் காதலியின் நினைவாகவே காடுகளை கடந்து செல்கிறான்.அவள் கூந்தல் அழகு ஒரு மலையுச்சியை அவன் நடக்கும் அந்த நீண்ட வெறும்பாதையில் அவன் எதிரிலேயே அழகு காட்டி 

அவனை வதைக்கிறது.அவள் கூந்தல் இழைகள் அந்த மலைவிளிம்பிலேயே ஊர்ந்து ஊர்ந்து வந்து அவன் வழியோடு வந்து துயர் செய்கிறது.அவள் கூந்தல் திரள்கள் அழகிய வண்டுகளின் சிறகுகுகள் போல் தண்ணிய ஒரு இசையை ஒரு உருவகமாய் ஓவியம் காட்டுகிறது.அதில் அவன் உயிர் அவளுடனேயே பிணைந்து செல்கிறது.அவனும் விடாது காட்டுவழி தொடர்ந்து அந்த காட்டின் எல்லைக்கும் சென்று பொருள் ஈட்டுதலை

விடவில்லை.சந்தனம் மற்றும் விலைஉயர்ந்த மணிகள் எல்லாம் ஈட்டிக்கொண்டு வழி நிறைய அவள் நினைவுகள் வழிய வழிய இன்பப்பயணத்துடன் வழி திரும்புகிறான்.அப்போதும் அவள் அழகிய கூந்தலின் சிகரம் அழகு பொருந்திய உயரத்தில் அவனை அழைக்கின்றது.அவள் கூந்தல் பல வகிடுகளில் பிரிவுற்று அடர்த்தியான மழை சுமக்கும் கருமேகங்களின் வானத்துக்காட்சிகளாய் அவனை கவர்கின்றது.அந்த நீளக்கூந்தல் கொடி பிரிந்து கல் மோதி நீர்வழிபோல் ஒலித்து இறங்குவதோடு அவனும் இழைந்து நெளிகின்றான்.அவள் வீட்டு முற்றத்தில் ஒரு பகன்றைக் கொடியாய்ப்பற்றிப் படர மிகவும் தவித்தவனாய் வருகின்றான்.அவளது அழகிய முறுவல் கண்ட காட்சியே அவனை இவ்வாறு அவளிடம் சேர்க்க விரைகிறது.


எயினந்தை மகனார் இளங்கீரனார் அகநானூற்றுப்பாடல் 399 ல் சிமையம் இமையம் என்ற சொற்களை ஆளும் விதம் வெகு வெகு நுட்பமானது. தமிழ்ச்சொல்லான சிமையம் என்பது மலை உச்சியைக்குறிக்கும்.இதுவே சங்கத்தமிழில் "இமயம்"ஆக  வருகிறது.வடவேங்கடம் என்றால் நாம் பக்தியோடு குறிப்பிடும் வேங்கட மலை தான். ஆனால் பொருள் தான் வேறு.வேய் எனும் மூங்கில் காடுகள் நிறைந்ததைக்குறிக்கும் சொல் அது.மலைச்சிகரத்தின் தூய தமிழ்ச்சொல்லே சிமயம் அல்லது சிமையம் ஆகும்.இதுவே இமயம் அல்லது இமையம் ஆயிற்று.எயினந்தை மகனார் இளங்கீரனார் இந்த சொல்லை வைத்தே அந்த அகநானூற்று பாடலின் அழகு நுட்பத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்.

"வேய் கண் உடைந்த சிமைய" என்னும் வரியில் மூங்கில் கணுக்கள் காய்ந்து முற்றி உடையும் நிலையில் உள்ள வெயிலின் கொடுமையில் அந்த மலை உச்சியை (சிமைய) குறிக்கின்றார் புலவர்.

நம் தமிழ்மொழியின் சிறப்பு "அதன் பெயர் சூட்டலே". இனிய பொங்கல் உண்டோம் என்கிறோம். பொங்கல் என்பது பொருளைக்குறிக்கவில்லை. பொருள் சமைக்கபட்டு அதாவது பொங்கும் அல்லது கொதிநிலை எனும் வினையைக்குகுறிக்கும்.எனவே "பொங்கல்"என்பது வினையாகு பெயர்.வினைப்பெயரே பொருளுக்கு ஆகிவருவதே தமிழின் சிறப்பு.இதன் அடிப்படையில் "மலை"யை நாம் ஏன் மலை என்கிறோம்.னம் எதிரே உயரமாய் தோன்றுவது நம்மை "மலைக்க "வைக்கிறது.எனவே மலை கூட வினையாகுபெயர் தான்.மலைத்தல் உணர்ச்சி இங்கு புலப்படுவது போல் மிக மிக உயரமான உச்சி நிலை (சிகரம்)யைக்கண்டு இமை கொட்டாது கண்டு வியக்கிறோம்.இதன் அடிப்படையில் வழங்கும் சொற்களேசிமையம் இமையம் என்பது.


அந்த தமிழ்ச்சுடரின் அழகினை அகழ்ந்து நான் எழுதியதே இந்த அகழ்நானூறு 32.


_____________________________________________________________________________







___________________________________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக