பலூன்
____________________________________________________
ருத்ரா
மகாப்பெரிய இறையே!
உனக்காக நாங்கள் ஊதிய பலூன்
எல்லாவற்றையும்
உள்ளடக்குவதாக உள்ளது.
வான மண்டலங்களையும்
விண்வெளிப்பிழம்புகளையும்
தன்னகத்தே கொண்டிருக்கிறது.
எங்கள் இந்த மூச்சு பெரிதா?
இல்லை
அதில் நாங்கள் வரைந்த உன்
முகம் பெரிதா?
இந்த மூச்சைப்போலவே
உன்னைப்பற்றி முழக்கும்
இந்தப்பேச்சும் பெரிதே.
இந்த மனிதனின் மூச்சும் பேச்சுமே
இங்கு எல்லாம்.
அப்படி இருக்க
மனிதப்பிறவியை
கோடரி கொண்டு
வெட்டிவிட்டும்
உன் தந்திரம் இங்கே
யாருக்காக?
எதற்காக?
துறவு கொள்.
என்னை விசுவாசி.
என்ற குரல்
எங்கிருந்து வந்தது.
மூச்சு நாங்கள் கொடுத்தது.
பேச்சும் நாங்கள் கொடுத்தது.
அதில்
நாங்கள் பிடித்த பிண்டம்
எங்களையே தின்று தீர்ப்பதற்கா
உன் மோட்ச தந்திரம்.
மிகப்பெரிய இறைவம் தான் நீ.
எங்கள் பலூனா எங்களுக்கு சவப்பெட்டி?
உனக்கு எதுவுமே புரியாத போது
பிரம்மம் என்று
இந்த பலூனை
நூல் வைத்துக்கட்டி
சாதி மத வியாபாரத்தை
துவக்கி விட்டாயே.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு
தீங்கு விளைவிக்கக்கூடாது
என்று
நீ தண்டனை மழைகள்
பொழிந்தபோதும்
அந்த மனிதன் தன்னைப்பற்றியே
சிந்திக்கும் அறிவு
கொண்டிருக்கக்கூடாது
என்பதற்காக
எத்தனை பிளவு வாதங்கள்?
வர்ணங்கள் இங்கு
அழகுக்கு அல்ல
மனிதம் எனும் ஒளியையே
இருட்டு பூசி அழித்துவிடத்தான்
அவை எனும் சூழ்ச்சிகள்
ஏன் இங்கே?
கடவுளே என்று உன்னை
ஒலித்தால் கூட
தீட்டு என்று மண்ணுக்குள்
அழுத்திவிடும்
தந்திரங்களும் மந்திரங்களும்
இங்கு எதற்கு?
சிற்றறிவு போதும் எங்களுக்கு.
உன் பேரறிவை நீயே வைத்துக்கொண்டு
பலூன் ஊதி விளையாடு.
எங்கள் அறிவின் "க்ளோனிங்க்"மூலம்
விதம் விதமாய் நாங்கள் தான்
உன்னைப்படைத்தோம்.
பொம்மை தானே
தீமையை அழிக்க
உன் பன்னிரெண்டு கைகளுக்குள்ளும்
ஆயுதங்களை செருகி வைத்தால்
நீ
அதையே வைத்து எங்கள்
உரிமையை
அறிவை
வாழ்வை
வதம் செய்யக்கிளம்பிவிட்டாயே.
கொடுமையான அறியாமையே
பின்னிருந்து உன்னை
முன் தள்ளுகிறது என்று
கண்டு கொண்டு விட்டோம்.
நீ உடையப்போகிறாய்.
உடையாத உறுதியான
எங்கள் அறிவே இனி
மிகப்பெரிய பெரிய பெரிய...
இதை இறைவர்களால்
புரிந்து கொள்ள முடியாது.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக