நாட்டு நாட்டு
______________________________________
ருத்ரா
தெலுங்குப்பட பாடலுக்கு
இசையமைப்பாளர் நம்
மரகதமணி என்ற கீரவாணிக்கு
"ஆஸ்கார்"விருது கிடைத்திருப்பது
நம்மையெல்லாம் மகிழ்ச்சியில்
புல்லரிக்க வைத்திருக்கிறது.
நடை நட நாட்டியம் என்ற
நம் சொல்
தெலுங்குக்குள் புகுந்து கொண்டு
இப்படி ஆட்டு ஆட்டு என்று
ஹாலிவுட் காரர்களையும்
அசத்தியிருப்பது நமக்கும் பெருமை.
ஊட்டி முனையில் அந்த
ஆனைக்குட்டி உணர்ச்சி பிழிய
நம் தமிழ்ப்பாசத்தை காட்டியிருப்பதற்கும்
ஆஸ்கார் கிடைத்திருக்கிறது
என்பதும் நமக்கு மிகப்பெருமையே.
ஆர் ஆர் ஆர் என்ற மகத்தான
படத்தை எடுத்த ராஜமவுலி
ஹாலிவுட்டின் ஸ்பீல்பெர்க் கேமரூன்
போன்ற இயக்குநர்களையே
வியக்க வைத்திருக்கிறார்
என்பதும் நமக்குப்பெருமையே.
காவிரிக்காக இன்னும் நம்மோடு
பங்காளிச்சகோதரன் எனும்
உராய்வுகளோடு இருந்த போதும்
நம் தமிழின் தொப்பூள்கொடி மிச்சம்
இன்னும்
அங்கு பொலிவு காட்டிக்கொண்டிருப்பது
நம் இருவருக்கு மட்டுமே தெரியும்.
ராஜமவுலி எனும் திரைச்சிகரமே
ஆர் ஆர் ஆர் ஐ தொடர்ந்து
ஒரு ஆர் எஸ் எஸ் ஐ
அந்த கிராஃபிக் பிரம்மாண்டத்தில்
தூக்கி நிறுத்தப்போவதாய்
தகவல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
சிங்கமும் புலியும் கரடியும்
இன்னும் மலையளவு லிங்கங்களும்
அம்புலிமாமாக்கதையாய்
ஹாலிவுட் ஃபென்டாசிகளில்
உங்களால் காமிராவுள் நிழல்கள் காட்டும்
என்பதில் ஐயமே இல்லை.
ஆனால் மானிட அறத்தை
மனித சமநீதியை ஒரு
படுக்குழிக்குள் வீழ்த்தும் ஆபத்தை
உங்கள் லேசர் பிழியல்களில்
மறைத்துக்கொண்டு
ஒரு பழமை வாதத்தை
பிம்பம் காட்ட மாட்டீர்கள் என்று
உறுதியாய் நம்புகிறோம்.
காப்பாற்றுவீர்களா அதை
எங்கள் கண்ணியம் மிக்க கலைச்சிற்பியே!
________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக