திங்கள், 6 மார்ச், 2023

"பெரியாறு"

 

"பெரியாறு"

---------------------------------------------------------------------------


கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஈசல் குவியல்களின் 

வெளிச்சம் எங்கே இருக்கிறது?

சாங்கிய தத்துவம் சொன்னது

வரிசையின் 

ஆற்றுப்படை ஒழுகுகிறது என்று.

நியாய வைசேடிகம் கூட‌

ஒரு இயக்கத்தின் 

காரண காரியத்தை முடிச்சு போட்டது.

பூர்வமீமாசமும் உத்தர மீமாம்சமும் 

வாழ்க்கையின் அடி ஆழத்துக்குப்போய் 

ஏதோ உயர்ந்த "மாம்சத்தை"

காட்டுவதாய் பாவ்லா காட்டிவிட்டு 

பக்திக்கும் யாகத்துக்கும் 

சுலோகங்களை குவித்து விட்டு 

உட்கார்ந்து கொண்டு விட்டன.

இந்துத்தத்துவம்

மாயை எனும் மாஞ்சா தடவிய 

பட்டத்தை தான் 

பறக்க விட்டுக்கொண்டிருக்கிறது.

இன்னும் அந்த 

ஸ்க்ரோடிங்கர் பூனையைத்தான்

பிரம்மம் என்று பூச்சாண்டி காட்டுகிறது.

கேட்டால்

அவர்களின் அறிவு ஜீவிகள்

குவாண்டத்தையும் 

காவி பூசி சூலம் ஏந்த தயார் தான்.

அதே கோணத்தில்

பிரம்மத்தில் ஈ வே ரா தெரிய வேண்டுமே.

ஏன் தெரியவில்லை?

அவர் காட்டிய பிம்பமோ 

பிரம்மன் ரத்த சதையில் 

சமுதாயச் சம நீதி தொலைந்து போன 

படலம் தான்.

சாதி எனும் பீதிகளை ஏன்

மஞ்சள் குங்குமம் பூசி

மல்லாந்து கிடக்கிறீர்கள் என்று தானே 

பகுத்தறிவுக்  கதிர் வீசுகிறார்.

அப்போது அந்த நூல்வேலிக்காரர்கள்

அநாச்சாரம் என்று

சாதீய அக்கிரமமே பிரம்மம் 

என்று மந்திரம் ஓதுகின்றார்களே .

அந்த‌

சஹனாவவது சஹனோபுனஸ்து

சுகினோ பவந்து

எல்லாம் 

ஆத்மீகத்தையே

கசாப்பு செய்ய கிளம்பி விடுகின்றன.

ஆனால்

அறியாமையின் பிழம்புக்குள்

மூழ்கி முத்து எனும் 

அறிவு எடுப்பதே 

வெளிச்சத்தின் வேலை

என்கிறது நாத்திகம்.

இருட்டுப்புராணங்களில்

தடவி தடவி

எத்தனை நூற்றாண்டுகளைத்தான்

மூளியாக உருட்டித்தள்ளுவது?

மனித அன்பும் மலர்ச்சியும்

சம மனப்பான்மையில் 

கல்பொருது இரங்கும்

பஃறுளியாறாக அந்த 

"பெரியாறு"

முழங்கிப்பெருகுவது

இன்னுமா கேட்கவில்லை

நண்பர்களே?


_____________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக