வியாழன், 2 மார்ச், 2023

அச்சமில்லை அச்சமில்லை

 


இன்று ஒருநாள்
சூரியன்
ஸிப்பை இழுத்து திறந்து விட்டது.
ஈ என்று
ஒரே இளிப்பு.
சுவர்க்கோழி கூட நட்பு தேடி
கிரிச் கிரிச் என்று
நச்சரிக்க ஆரம்பித்து விட்டது.
இரவு பகல் வேறுபாடு
அதற்குத் தேவையில்லை.
இங்கு
எதுவும்
எதற்காகவும்
தனித்துக்கிடப்பதில்லை.
எருக்கஞ்செடி கூட‌
காற்று அசைவில்
பக்கத்துச்செடியுடன்
தொட்டுப்பார்த்துக்கொள்கிறது.
மனிதர்களே! மனிதர்களே!
முகங்களில் சிரிப்பின்
பூங்காக்களை
பதியம் போட்டுக்கொண்டிருங்கள்.
இலைகளின் இடைவெளிகளில் எல்லாம்
நேற்று பின்னிய
மௌனப்பேச்சுகளை
இன்று தொடருங்கள்.
மறைத்து வைத்திருக்கும்
வில் அம்புகளையெல்லாம்
முறித்துப்போடுங்கள்.
கடவுள்கள் கையில்
அந்த அசிங்கங்களை ஏந்திக்கொண்டு
நாறிக்கொண்டிருக்கட்டும்.
அவற்றின் கைக்கூலிகள்
அவற்றிற்கு மஞ்சள் குங்குமம்
வைத்துக்கொண்டிருக்கட்டும்.
மனிதர்களே!மனிதர்களே!
அந்த மஞ்சக்குருவிகள் இரைச்சல்களை
மொழி பெயர்த்துக்கேளுங்கள்.
அதில் தான்
உங்கள் இருப்பியல் எனும்
எக்சிஸ்டென்ஷியலிசம்
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த சிதைகளின் புகை மூட்டங்கள்
சில்லரை சில்லரையாய்
நாட்களை
பண்டமாற்றம் செய்துகொண்டிருக்கட்டும்.
யாருக்கும் இங்கு
கவலை இல்லை.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே!

_________________________________________________________‍
ருத்ரா
குறைவாகக் காட்டு
2 பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக