தோழர் சரோஜ் சௌத்திரி.
__________________________________________
செங்கீரன்.
(ஒரு இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியனின் நினைவு ஏந்தல்)
வெள்ளைக்காலர்களின்
வெளிறிய அறிவு வனத்தில்
சிவப்புச் சிந்தனையின்
கதிர்வீச்சுக்கு
கால் கோள் ஊன்றிய
கல்பாக்கமே! உன்
சொல் பாக்கம் கண்டவர்கள்
வரலாற்றுத்
தலையணைப்புத்தகங்களையெல்லாம்
தள்ளி ஏறிந்து விட்டு
எழுச்சி கொண்டார்கள்.
அது வரை
அது ஒரு முரட்டு புத்தகம் என்று
மார்க்சின் நூலை விட்டு
ஒதுங்கி நின்றவர்கள்
மனித வரலாற்றுக்குள் துடித்த
ஈரமான வேர்வை ரோஜாவின்
எரிமலை மகரந்தங்களையும்
தம் மீது தூவிக்கொண்டார்கள்.
உன் பேருரைகள் சொற்பிரளயங்கள்
அத்தன்மையது.
ஆயுள் காப்பீடு எனும்
வெறும் மரண ஃபண்டு ஆபீஸ்கள்
இந்தியாவின் பொருளாதார வேர்களைக்
காக்கும் உயிரோட்டமான இயக்கம்
தாங்கும் கழகம் எனக் கண்டனர்.
உழைப்பின் நெருப்பு
கரத்துக்கு மட்டும் அல்ல
கருத்திற்கு வேர்வை பாய்ச்சும்
எனும் அறிவார்ந்த
பாட்டாளி இயக்கம்
பாரத மக்களின் நாடித்துடிப்புகளாய்
பாய்ந்தது
உன் சீரிய தொண்டினால் தான்.
பொருளாதார வல்லுநர்கள்
பொருளின் விலை என்றால்
மாயச்சந்தையின் வீங்கும் வற்றும்
மதிப்பு என்று
பலூன்கள் விட்டுக்கொண்டிருந்தார்கள்.
மார்ச்சின் சிந்தனையே அது
பாட்டாளிகளின் வேர்வை மூச்சு என்றது.
ஓ!அறிவு சிற்பியே!
உன் சிந்தனைச்செதுக்கல்களில்
இந்த பாரதப்பழம்பெரும் பாறாங்கல்
மானிட ஆற்றலின் மலர் முகத்தை...
அந்த பாட்டாளியின்
கழுத்து நரம்பு கை நரம்பு புடைப்புகளில்
ஊறும் பாரத வளர்ச்சியின் ஒளியை..
தரிசித்து நின்றோம்.
கல்கத்தாவில் அன்று அந்த
எழுச்சி மிகு
"இலாக்கோ விஜில்"
உன் சுவடு பற்றிக்கொடுத்த
ஒரு சிந்தனைப்போராட்ட வடிவம்.
மறக்க முடிய நாட்கள்
உன் சிவந்த வானத்தின்
வீர விளிம்பு அது.
உன் பெயரே
எங்களுக்கு
இன்னும் இன்னும் ஒரு
புதிய யுகம்!
வெல்க
அச்செஞ்சுடரொளி!
________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக