மயிலுக்கு ஒரு அஞ்சலி
___________________________________________
ருத்ரா
மயில்சாமி எனும்
மயில் பறந்தே போய்விட்டது
என்று தாமு அவர்கள்
கண்ணீர் அஞ்சலி உகுத்திருந்தார்.
உண்மையிலும் உண்மை.
அது அகவியது அத்தனையும்
தமிழின் ஒலி.
அதன் சினிமாப்பீலிகள்
இன்றும் மக்களின்
எண்ணங்களையும் வண்ணங்களையும்
சிலிர்ப்புடன் காட்டி
சிரிப்பு காட்டி நெகிழ வைக்கின்றன.
அந்த முட்டாள் எமனுக்கு
இந்த நாட்டின் அதிக வயது
புள்ளிவிவரம் ஏன் தெரியாமல் போனது?
அம்பதேழு வயது என்பது
திரையுலக பிருந்தாவனத்தின்
மிக மிக இளைய வயது அல்லவா.
ஒழிக ஒழிக
அந்த மோசக்கார எமன்.
மயில்சாமி அவர்கள்
நடத்திய நிகழ்ச்சி ஒன்று
இன்னும்
ஒரு எட்டாத உயரத்தில் இருக்கிறது.
பத்து அடி
இருபது அடி
இருநூறு அடி
என்று
பல உயரங்களிலிருந்து
விழுவதை
"பல குரல்" முறையில்
ஒலித்து அரங்கையே அதிரவைத்தார்.
அவரே
ஒரு எட்டாத உயரத்துக்கு சென்று
பல குரல்களின்
சோக மழையை இப்படி
பொழிந்து விடுவார் என்று
யாரும் எதிர்பார்க்க வில்லை.
பல குரல் மன்னனாக வந்து
நடிப்பின் மகுடம் சூட்டியவன்
சமுதாய ஓர்மை பெற்ற
ஒரு மாமனிதனாய்
மின்னல் வெளிச்சம் காட்டி
மறைந்து போனது
நம்மை மிகவும்
திக்கு முக்காட வைத்திருக்கிறது.
அந்த மயிலின் அகவல்கள்
என்றும் நம் நெஞ்சில்
எதிரொலித்துக்கொண்டிருக்கும்.
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக