அகழ்நானூறு 16
___________________________________________________________
சொற்கீரன்.
கடறு கடாஅத்த முள்ளிய ஆறும்
விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும்
விளரி நரம்பின் விண்தொடு பாலையும்
எவன் இங்கு தடுக்குன ஆகும்?
அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த
அவள் இவணம் அவிழ்தரு நறு நகை
ஐது ஆறு கனைகுரல் கதுப்பொடு அண்ணி
வெள் நள்ளருவி அன்ன ஆங்கு வீழ்த்தும்
வேங்கை நடுங்கிணர் ஒள்வீ செறிக்கும்
வாங்கமை இன் துளை வண்டின் இன்னிசை
அளபெடை யெடுத்து அகவல் நிரவும்.
இறைகொடு மூடும் மின்முகம் ஒளிர்ப்ப
அவள் நெட்டுயிர் பயிர்த்த கொடுவெண்
மூச்சில் இழைந்தான் மூள்சுரம் படர்ந்தான்.
காடுறை நெடுவழி ஒட்டாது உறையுனன்
ஒருபதி வாழ்தலும் ஆற்றுபதில்லன்
அவள் பூணாகம் முன்றில் நிழலாடு முத்தின்
வால் நகை வீங்கும் வானம் நோக்கி
கதழ்பரிய விரைஇ கால்பொருது ஓட
அவன் காதற்பெருமா கை பட்ட புயலென
கனவினும் முந்துறும் காட்சி தன் பின்னீர.
_________________________________________________________
அகநானூறு பாடல் 279ஐ இருங்கோயன் ஒல்லையாயன் செங்கண்ணனார் எனும் புலவர் பாடியுள்ளார்.மணிமிடை பவளம் எனும் பகுதியில் உள்ள பாடல் இது.ஒல்லை ஆயன் என்பது ஒல்லையூர்க் குறுமன்னன் என்பதையும் குறிக்கலாம்.
பொருள்வயின் பிரிந்த காதலன் செல்லும் வழியில் காதலியை கற்பனையில் கண்டு களித்து அந்த உந்துதலில் நீண்ட நெடிய காட்டுவழியை கடந்து செல்கிறான்.இது பாலைத்திணைக்குரியது.புலவர் கையாண்ட சொல் நுணுக்கம் மிக மிகச்செறிவானது அழகானது.அதன் சொற்றொடர்களில் சில அகழ்ந்தெடுத்து நான் பாடிய சங்கந்டைச் செய்யுட் கவிதையே இந்த அகழ்நானூறு 16.
_________________________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக