படபடக்கிறது.
___________________________________________
ருத்ரா
பழைய நாட்களை சுமந்து திரிபவன்
எனும் பிணம் தூக்கியா நீ?
வரும் நாட்களை வருடும் பீலிகளாய்
அதன் அழகை உச்சிமோந்து
பார்ப்பவனா நீ?
எப்படியானாலும் அது
வாழ்க்கை தான்.
அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.
அதன் முகமோ முழுநிலவாகவே
எப்போதும் உனக்கு
பால் வார்க்கிறது வெளிச்சத்தில்.
வாழ்க்கைப் புத்தகம்
புத்தக திருவிழாக்களில்
அகப்படுவது இல்லை.
மகிழ்ச்சியும் துயரமுமே
அச்சுக்கூடங்கள்.
அந்த புத்தகத்தை
புரட்டிக்கொண்டிருக்கத்தான்
உன்னால் முடியும்.
எழுத்துக்கூட்டி வாசித்துப்பார்.
உயிர் எழுத்துக்கு மெய் எழுத்து
ஒட்ட வருவதில்லை.
உயிர் மெய் எழுத்துக்கூட்டங்களும்
கூட
வெறும் உணர்ச்சிகளின்
கூட்டாஞ்சோறு மட்டுமே.
பசியும் சோறும்
பந்திவிரிக்கும் நாட்களில்
உன் புத்தகம் காற்றில்
படபடக்கிறது
வெற்றுப்பக்கங்களாய்!
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக