புதன், 15 பிப்ரவரி, 2023

அகழ்நானூறு 22

 


அகழ்நானூறு 22

___________________________________________________

சொற்கீரன்


வங்கூழ் ஆட்டத் திரைஆடு பொய்யின்

கொய்சுவற் கலிமா அன்ன கால்போழ்

வங்கம் மீமிசை செங்கடற் குருகின் 

அகன்சிறை ஆர்த்த அசைநிழல் போலும்

மண்ணிழை மழைக்கண் மணிச்சிறை ஓச்சி

விழியிடை இழையிடை விரிகவின் நோக்க‌

நின் திசைபாய இறையள் வளைகுலுங்கும்.

நீள்கடல் வரியில் கல்லாடன் எழுதும்

கல்லா சொல்லும் கழறாஅ மொழியும்

அவளின் நெஞ்சத்து துடிதனை முரலும்.

பாழ்மணல் விரிந்தன்ன கட்ற்பாலை ஆங்கு

பொய்யில் தைத்து மெய்யெனக்காட்டும்

பொறிகிளர் மஞ்சின் முகம் முகம் காட்டி

நினை திரை அகலம் நீள ஓட்டி

அடைகரை தோறும் நாகர்தமிழர்

நாவாய் பல்திணை பல் ஒலி கூட்டித்

தந்ததை ஒற்றி நுண்திறம் ஓர்ந்து

செவ்விய தமிழின் செஞ்சுவடு பிலிற்ற

செழும்பொருள் கொண்மார் 

நான் மறைக்கு முன்னும் நாவலன் ஆகி

நாவலந்தீவின் நற்றமிழ் வழங்கி

மன்னார் மருங்கின் மன்னுதன் காட்டி

எல்லா மொழியும் நுவலத் தந்து

எல் என்றொரு முதன் முதற் கிளவி

உயிர ஈந்தவன் உயிர்த்தமிழோனே.

அற்றை அண்ணல் நின் வாணுதல் வருட‌

வந்திடும் ஆறும் நீள்தல் அன்று.

கள்ளிஅம் காட்ட கடமடுத்தாண்டு

உழிஞ்சிலும் வரிசை வல்லிய வரூஉம்

சுரன் போன்றொரு தோற்றம் செத்து

சுழிநீர் நனந்தலை அலைகள் படர்க்கும்.

அயர்ந்தாய் வேர்த்தாய் ஒள்ளிழையோயே.

நித்திலம் பூத்ததை கைத்தலம் கொள்வாய்.

படுமணி இரட்டும் பளிங்கொலி ஓர்வாய்.


____________________________________________________


பொழிப்புரை

______________________________சொற்கீரன்


வங்கூழ் எனும் பலமான காற்று ஆட்டத்திலும் அலைகளின் ஆட்டத்திலும் பிடறி அசையும் பொய்க்காற் குதிரையைப்போல செல்லும் தலவனது கப்பல் காற்றைக்கிழித்து செல்கிறது.அதன் மேல் அந்திச்சிவப்பின் செங்கடற் பறவையின் அகன்ற சிறகு ஆரவாரமாய் அசைந்து நிழல்காட்டுவது போல் நீரால் தூய்மை செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்த தலைவி குளிர்ந்த கண்களின் அழகிய இமைகளை சிமிட்டி அந்த விழிகளின் ஊடு விரியும் அழகில் நோக்க பார்வையால் உன் திசைநோக்கி பாய்கிறாள். 

அழகிய முன்கையின் வளைகள் குலுங்கும்.இவையெல்லாம் தலைவனுக்கு அவன் விரும்பும் அந்த ஒப்பற்ற புலவன் கல்லாடன் அந்த கடல் சுவடியில் எழுதிய செய்யுள் போன்றுஇருக்கிறது.இது வரை கல்லாத சொற்களும் ஒலிக்காத மொழியும் அவள் நெஞ்சத்திலிருந்துதுடிப்பது போல் அது ஒலிக்கும்.அவள் அருகில் இல்லை அதனால் அந்த கடல் அழகற்று வறட்சியாய் ஒரு கடற்பாலையாய் தோன்றுகிறது.ஒளியின் சிதறல் மேகங்களில் ஏதோ ஒரு புள்ளிக்கோலம் போடுகிறது.அசைந்துகொண்டே  இருக்கும் மேகங்கள் மெய்யாய் நிற்பது போல் பொய்யாய் நகர்வது கூட ஒரு பூத்தையல் வேலை காட்டுகிறது.வீரம் செறிந்த தலைவனே இந்த மகிழ்ச்சியில் உன்னை அவள் கப்பலைச்செலுத்தும் உந்துதலை தருகிறாள்.நீயோ அலைகளோடு அலைகளாய் கடலின் நீள அகலங்களை வென்று கப்பலை ஓட்டுகிறாய். திரைகளையே செல்வம் ஆக்கும் திரைவியத் திராவிடத் தமிழனே நீ இறங்கும் கடற்கரையெல்லாம் "நாகர் நகரம்"ஆகிறது.நாகம் நாவம் இரண்டுமே கப்பலைத்தான் குறிக்கும்.கால்கள் இல்லாமல் கடலில் மிதப்பது ஊர்வது எல்லாம் "நாகப்பாம்பை" நினைவுறுத்துகிறது.நாகம் எனும் உவமை கப்பலுக்கு ஆகுபெயர் ஆனது.கடற்கரை நகரங்கள் "நாகர்"அடைமொழியைப் பெற்றதும் அதுவே  ஆகும் .தமிழர்களின் நாகரிகம் "நகர்"எனும் வினை ஆகுபெயரைக்குறித்த நகர்களால் தான் அவ்வாறு குறிக்கப்படுகிறது. தமிழர்கள் கடல்கடந்து சென்று பல்வேறு மக்களின் ஒலிப்புகளையும் திரட்டிக்கொணர்ந்தனர்.தம் ஒலிப்புகளையும் வழங்கி அந்தந்த மொழியையும் செம்மை ஆக்கினர்.அத்தகைய மொழி அறிவின் நுண்திறம் நம் தமிழை செம்மொழியாய் உயர்த்தியது.தமிழின் சுவடுகள் பிற மொழி வளங்களும் சுரந்தன.ஒவ்வொரு ஒலிப்பும் செழுமையான உட்பொருள் கொள்ளும்படி ஆர்த்து ஒலித்தன.(கொள்ம் ஆர்=கொண்மார்). இலக்கண இலக்கிய நலங்கள் எல்லாம் கொண்ட (கொள்மார்) நம் தமிழ் உலகம் முழுதும் வழங்கி வரும் ஒரு உயர் நிலை பெற்றிருந்தது.மனிதர்கள் "நாவல்லவர்களாக" இருந்த பழந்தமிழ் நாடே {"நாவலந்தீவு" ஆகி யிருக்கலாம்.வேதங்கள் தோன்ற காரணமாயிருந்த அவெஸ்தா மொழிப்பாடற் கதை கூட தமிழர்கள் மூலமே அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக