செவ்வாய், 30 ஜூலை, 2019

நண்பனே...நண்பனே...நண்பனே..

நண்பனே...நண்பனே...நண்பனே..
==========================================ருத்ரா
மேலே கண்ட வரிகளில்
"மூச்சிறைத்து மீண்டும் மூச்சிறைத்து "
வரும் இந்த இசைவரிகளில்
எனக்கு தெரிவது
இந்திய மக்கள் இயக்கத்தின்
அந்த புயல் மூச்சுகளின்
இ.சி.ஜி வரிகள் தான்.
ஆம்! நண்பனே!
உன் நுரையீரல் இடுக்குகளில்
காஷ்மீரிலிருந்து
கன்யாமுகுமரி வரை
எதிரொலிக்கிறது.
பாட்டாளிகளின் வேர்வை
சிந்து கங்கை மற்றும்
நம் அருகே சலசலக்கும்
சிந்து பூந்துறை வரை
துளித்துளியாய் பெருகுகிறது.
தன் வேர்வையையே பருகி
தாகம் தீர்த்து
தன் பசியிலேயே
அடுப்பு வைத்து உலை மூட்டிக்கொள்ளும்
உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதக்குரல்
அணுக்கதிர் விரிக்கிறது.
நண்பனே...நண்பனே...நண்பனே..
அது கனவு இல்லை.
ஆம்..அது கனல்!
இந்திய உறக்கத்தின்
மதம் கனத்த இமை மூட்டங்களை
உரித்து எழுப்பும்
உயிர் வெப்பம் அது.
உன் பயணம் வெற்றி பெற‌
எப்போதும் என் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ருத்ரா இ.பரமசிவன்
(என் கல்லூரி நண்பன் அன்புக்குரிய திரு சிவசங்கரசுப்பிரமணியன் பற்றி 2 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை இது..1960 களில் கோவை பெரியநாயக்கன் பாளையம் கல்லூரியில் நாங்கள் ஒன்றாய் படித்தோம் சமுதாயத்தை வாழ்க்கையோடு பிணைக்கும்போது அந்த பட்டுப்பூச்சிக்கனவுகள் பட்டுப்போய் விடுகின்றன. ஆனால் அவன் அந்த சுடர் அணையாமல் காக்கும் சுடரேந்தியாய் இன்றும் வலம் வருவதைக்கண்ட பெருமிதத்தில் உதித்த கவிதை இது.)
===========================================================ருத்ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக