திங்கள், 15 ஜூலை, 2019

மூன்று வர்ணமும் நான்கு வர்ணமும்

மூன்று வர்ணமும் நான்கு வர்ணமும்
========================================================ருத்ரா

சுதந்திர வரலாற்றின்
அரிச்சுவடிகளின்
அடிச்சுவடுகளிலிருந்து
பயணம் தொடங்கியவர்கள்
மேலே உள்ள வர்ணங்களை
மறக்க மாட்டார்கள்.
வெள்ளையனை எதிர்த்தவர்களின்
முழக்கங்களில்
பல வர்ணங்களின் தீக்கொளுந்துகள்
ஆவேசமாய் எரிந்தன.
வெள்ளைக்காரன்
பாகம் பிரித்துக்கொடுத்த போதுதான்
தெரிந்தது
அந்த தீக்கொளுந்துகள் எல்லாம்
இந்தியன் எனும்
ஒரு மதசார்பற்ற
மானிட தத்துவத்தை
உயிரோடு கொளுத்த முற்பட்ட‌
சாதி மத வெறித்தீயின் சொக்கப்பனை என்று.
உலகக்கண்ணோட்டத்தில்
இந்தியன் என்றால்
எந்த மதங்களுக்கும் அப்பாற்பட்ட‌
ஒரு வர்ணத்தான்
என பண்டிட் ஜவஹர்லால்
நம்பியதால்
அந்த சோசலிச வடிவத்தை
இந்தியாவுக்கு பதியமிட்டார்.
சாதி மத சுரண்டல் வாதிகள்
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
இந்த சமுதாய நாற்றை
சிதைத்து நாசம் செய்தபின்
எஞ்சியதே
இந்த சனாதன பூதம்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாய்
பட்டொளி வீசி பறக்குமபோதெல்லாம்
அந்த நான்கு வர்ணமும் மறைந்திருந்து
தாக்கிய அவலங்களையும்
தாங்கி தாங்கி
விழுப்புண் ஏந்தி நின்றோம்.
ஒரு நாள் இரவில்
அந்த கீழ்வெண்மணியில்
அந்த சாதீய அரக்கத்தனம்
வியர்வை வர்க்கத்தின் பூக்களை
கொளுத்தி சாம்பல் ஆக்கியதே.
மறக்க முடியுமா அந்த மாபாதகத்தை?
இவர்கள் மானிட சித்தாந்தங்கள் எல்லாம்
எங்கோ போய் ஒளிந்து கொண்டனவே.
பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே
இந்தியாவின் இருட்டுக்கண்டத்திலிருந்து
விடியலின் மின்னல் கீற்றுகளுக்கு
உரிமை கீதம் பாடிக்கொண்டிருக்கின்றன.
ஆனாலும் ஒரு ஏகாதிபத்தியத்தின்
கோர நிழல் நம்மீது படிந்து கிடக்கிறது.
இன்னும்
ஆணவக்கொலை செய்ய "பட்டா"போட்டு
எடுத்துக்கொண்ட
அந்த ஆணவத்தின் ஆதிக்க வர்க்கம்
அந்த நான்கு  வர்ண தர்மத்தையும்
அந்த நான்கு வேதத்தில் ஒரு இந்திரனின்
சக்கராயுதத்தை வைத்துக்கொண்டு
இனப்போர் வெறித்தீ முழக்கங்களையும்
இப்போது சாசனம் ஆக்கத்துடிக்கும்
காட்சிகள் நம்மை
பதை பதைக்க வைக்கின்றன.
அந்த நான்கு வர்ண தீக்காடுகளிருந்து
நம் உயிரினும் இனிய அந்த
மூவர்ணக்கனவுகளை
மூண்டெழச்செய்யும் குரல்களை
உயர்த்துவோம் வாருங்கள்!
நம் இந்தியா
வாழ்க ! வாழ்க!! வாழ்கவே!!!

===========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக