வியாழன், 18 ஜூலை, 2019

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி
==========================================ருத்ரா


அது என்னவோ தெரியவில்லை
காதலுக்கு
பட்டாம்பூச்சி தான் பல்கலைக்கழகம்.
இதன் நுணுக்கங்கள்
அறிந்த பின் தான்
அவளை அறிந்து கொண்டதாய்
அவனுக்கு பட்டம் கிடைக்கிறது.
இதன் சிறகு துடிப்புகளில்
ஆயிரம் வர்ணங்கள் உதிர்கின்றன.
ஆயிரம் வர்ணங்கள் தெரிகின்றன.
அவன்
அவளுக்காக
கவிதை எழுத
அவன் மனத்தை பிய்த்துக்கொள்ளும்போது
பட்டாம்பூச்சிகள்
தங்கள்
இறகுகளை பிய்த்துக்கொள்ளுகின்றன.
அவற்றின் வர்ணப்பிரளயங்களிலும்
சித்திரக்கூட்டங்களிலும்
பிக்காஸோக்கள்
பிரசவிக்கின்றனர்.
பட்டாம்பூச்சிகளிடம்
வர்ணங்கள் மட்டுமே உண்டு.
வர்ணாசிரமங்கள் இல்லை.
அதனால்
இவர்கள் காதலுக்கு
சாதி மதங்கள் இல்லை.
அதோ அந்த இறகுகள்
சாமரங்கள் வீசுவதில்
பூந்தென்றல் மட்டுமே கிசு கிசுக்கின்றன.
மனிதர்களின்
குறுகிய வெறிகள்
குறுக்கே மறிக்கும் போது தான்
ஒரு விடியலின் வர்ணம்
அங்கே பூகம்பமாய்
சிறகுகளை படபடக்கின்றன.

=========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக