சனி, 20 ஜூலை, 2019

இதோ ஒரு உட்குரல்!

இதோ ஒரு உட்குரல்!
===============================================ருத்ரா

விஞ்ஞானம் தந்த அறிவு
நம் குறுகிய ஜன்னல்களையெல்லாம்
உடைத்துப்போட்டு விட்டது.
நீல வானத்தின் அகன்ற இதயமே
நம் இதயத்தோடு
பதியம் ஆகிவிட்டது.
மனிதன் மகத்தானவன்.
இறைவன் அவனை விட மகத்தானவன்
என்று
இறைவனுக்கு எடுத்துக்காட்டுபவனும்
மனிதனே.
ஆனால் இறைவனின் குரல் ஒலித்தால்
அது இப்படித்தான் கேட்கும்.
ஓ மனிதா எனக்கும் கூட ஒரு குரு வேண்டுமே
உன் மூளையின் உன் உணர்வுகளின்
மிக மிக ஆச்சரியமான மூலைகளை
தரிசனம் செய்ய
என் கோவிலை பிரதிஷ்டை செய்திருக்கிறேன்
என்பது உனக்கு தெரியுமா?
இருவரில் யார் பெரியவர் என்ற‌
போட்டி கூட தேவை தான்.
இறைவனோடு மனிதன் போட்டி போடவேண்டும்
இது
ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கு இடையே
நடத்தும் பட்டி மன்ற‌ம் இல்லை.
மனிதன் இறைமையாகி முழுமை அடையவேண்டும்
என்பது இறைவன் கனவு.
இறைவன் மனித வர்ணத்தில்
முகம் காட்டவேண்டும் என்பது
மனிதனின் தத்துவம் அல்லது லட்சியம்.
இதற்கு இடையே
ஏன் இந்த கத்திசண்டை போட்டி?
அன்று கிரேக்க சிந்தனையாளர்கள்
புராணங்களைக்கூட‌
மனித அறிவின் விளையாட்டுத்திடல்களாக்கி
அதிலும் கூட ஒலிம்பிக் நடத்தினார்கள்.
இந்தியாவில் தான்
அறிவு தேக்கம் அடைந்து
தெய்வீகம் ஆகி
அப்புறம் அதுவே ஆதிக்கம் ஆனது.
மதத்தை கொடி உயர்த்தி பரப்பும் மனிதன்
தன் அறிவை ஏதோ ஒரு இருட்டுக்கு
அடகு வைத்து விடுகிறான்.
இவனது வெளிச்சத்தை இவனே தான்
மீட்க வேண்டும்.
இந்த உட்குரல் அவனுக்கு
எப்போது கேட்கப்போகிறது?

=======================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக