திங்கள், 15 ஜூலை, 2019

தேடினேன்

தேடினேன்
================================ருத்ரா இ பரமசிவன்
அந்த அழகிய மஞ்சள் நிற‌
பித்தளை வெற்றிலைச்செல்லத்தை
உருட்டி புரட்டித்தேடினேன்.
கைப்பிடி
சீறும் பாம்பின் சுருண்ட
அற்புத வடிவில் இருந்தது.
அதன் கடுகுக்கண்ணில் கூட‌
ஆலகால விஷம் தெரிந்தது.
மூடியில்
இலைப்பின்னலில்
பூக்களின் கண்கள்
உறுத்து விழித்தன.
கலை நேர்த்தி என்னை
கவனம் திருப்பிவிட்டது.
கவனத்தை மீண்டும் தேடலில்
நீள விட்டேன்.
அந்த செல்லத்தின்
உள்ளறை ஒவ்வொன்றையும்
தேடினேன்.
பாக்கு வைக்கும் இடம்.
சுண்ணாம்பு டப்பி
சுருண்டு படுத்து
கனவு காணும் இடம்.
விரலின் மூலம் வெற்றிலையை
ஸ்பரிக்கும் அந்த‌
கணங்களின் கனமான ஏக்கம்
அதனுள்ளே சிறை.
தங்கபஸ்பம் புகையிலையும்
அந்த நீல கண்ணாடிப்பேப்பரும்
என் செவிக்குள்
இன்னும் சரசரத்தன.
இறுதியாய்
வெற்றிலைக்கவுளி
மரகதப்பாய் அடுக்குகளாய்
அடைந்து கிடக்கும்
அந்த பெரிய அறை
மெல்லிய ஒரு குதப்பல் ஓசையை
அற்புத சங்கீதமாய்
அலை விரித்தது.
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் அப்பாவை
அந்த செல்லத்துக்குள்.
முப்பது நாப்பது வருடங்களாய்
அதற்குள்
அவர் வாசனையைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
......
அதோ!
புளிச்சென்று ஒரு குரல் கேட்டது.
மரணங்களுக்கு
அவர் பயம் கொண்டதில்லை.
எமன் மீது காறி உமிழும்
வெற்றிலை எச்சிலாகத்தான்
அது எனக்கு கேட்டது.
என்னை ஒரு உற்சாகம்
தொற்றிக்கொண்டது.
மீண்டும் அந்த செல்லத்துக்குள்
தேடினேன்.
அவர் மரணத்தை அல்ல.
மரண பயத்தால்
எப்போதும்
காக்கைச்சிறகைக்
கிழித்துக்கொண்டது போல்
வாழ்க்கையை கந்தல் ஆக்கிக்கொள்வதை
காறித்துப்பும்
அந்த நெருப்பு நம்பிக்கையை.
செல்லத்துக்குள்
அவர் ஒரு லாவாக்குழம்பாய்
ததும்பி நின்றார்.
========================================
ஒரு மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக