செவ்வாய், 23 ஜூலை, 2019

"ஆடை"யும் அமலாபாலும்.

"ஆடை"யும் அமலாபாலும்.
===============================================ருத்ரா

எது அரசியல் ?
எது ஆன்மீகம்?
எது ஆபாசம்?

அரிசியில் மட்டும் தான்
அரசியல் இருக்குமா?
ஆடைக்காக
போராட்டம் நடத்திய
காலகட்டங்களும் உண்டு.
ஆடை என்பது
பால் அடையாளம் மட்டும் அல்ல
என்று
அமலா பால்
இப்படத்தில் அருமையாக
நெத்தியடி அடித்திருக்கிறார்.

மும்மூர்த்திகளும்
"சதி அனுசூயாவை"
நிர்வாணமாக
பார்க்க வந்தார்களாமே
அப்போது அவர்களையே
குழந்தையாக்கி
நிர்வாணத்தை
இறைமை என்ற
அந்த நிர்வாணத்திற்கே
தரிசனம் தந்ததாய்
நம்மிடையே ஆன்மீகக்கதைகளும்
உண்டு.

ஓவியர்கள்
நிர்வாணத்தை
ஓவியம் ஆக்கும்போது
அவர்களின்
தூரிகைகள் மட்டுமே
அந்தப்பெண்ணை
உற்றுக்கவனிக்கிறது.

ஏன் ஆண் மருத்துவர்கள்கூட
பிரசவம் பார்க்குபோது
அவர்கள் பிரம்மாக்களாக
மட்டுமே தான் இருக்கிறார்கள்.

இந்தக்கருவைத் தான்
திரைப்படமாக பிரசவித்திருக்கிறது
ஆடை.
அந்த டிவி ஸ்டுடியோவுக்குள்
நிர்வாணமாக மாட்டிக்கொண்டு
தவித்த தவிப்பின் நடிப்பை
மிக மிக அற்புதமாய்
உயிர்ப்போடும் துடிப்போடும்
காட்டியிருக்கிறார் அமலா பால்.

இயக்குநர் ரத்னகுமார்
எனும் சிற்பி
செதுக்கிய காட்சிகளில்
பெண்ணியம்
என்பது தெறித்துவிழுவதிலே
கண்ணியம்
மட்டுமே தெரிகிறது.

ஆடை என்பது
நூலும் ஊசியும் கொண்டு
தைக்கப்பட்ட போதும்
பெண்களின் ஆடைகள்
ஆண்களின் ஹார்மோன்களால் தான்
பார்க்கப்படுகிறது.

பெண்ணிய போராட்டத்தில்
சுதந்திரம்
என்பது தாறுமாறான
பரிமாணங்களில்
வெளிப்படுகிறது.
ஆடை
சுதந்திரத்தின்
மூச்சாக வீச்சாக வீறுபெற்றது
மலையாள தேசத்தின்
"மாராப்பு"போராட்டம்.
இப்போது
ஆடையே வேண்டாம்
என்று கூட
சுதந்திரத்தின் சிகரத்தில் நின்று
பேசும் பரிணாமமும் இருக்கிறது.

இந்த படத்தில்
நகைச் சுவைக் காட்சிகளாகவும்
இன்னும்
ஆணாதிக்க அரசியலின்
மண்டையில் பொளேர் என்று
அடிக்கிற காட்சிகளாகவும்
பல மின்னல் தோரணங்கள்
நிறையவே தொங்க விட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கும்
ஆண்மை வேண்டும்.
ஆம்
தைரியமாக இது போல் நடிக்கும்
வீரம் வேண்டும்.

அப்படிப் பார்த்தால்
அமலாபால்
பெண்ணியத்தை
வீரம் செறிந்த கோணத்தில்
நடித்த ஒரு "பாகுபாலி"தான்!


அமலா பால் அவர்கள்
ஒரு அசுரத்தனமான நடிப்பில்
ஒரு தேவதையாய்
உயர்ந்து நிற்கிறார்.

=========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக