செவ்வாய், 2 ஜூலை, 2019

பிக் பாஸ் எனும் புதைகுழிகள்

பிக் பாஸ் எனும் புதைகுழிகள்
================================================ருத்ரா


தொலைக்காட்சிகள்
ஏதோ மந்திரவாதிகளின்
சூ மந்திரக்காளிப் பெட்டிகள்
கர்ப்பம் தரிக்கும் காட்சிகளாக‌
பரிணாமம் பெற்றது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
எங்கோ
ஆயிரம் ஒளியாண்டுகள்
தூரத்தில் இருக்கும்
ஒளிபிழம்புகளை
நம் வீட்டு அறைக்குள்
கொண்டு வந்து
சமையலுக்கு வெங்காயம் உரிப்பது போல்
இதழ் இதழாக
பிரபஞ்ச முகம் உரித்து
உற்றுநோக்குவதாய் ஆனது
நம் அறிவு வளர்ச்சியின்
பரிணாமங்கள்.
அதை வைத்துக்கொண்டு
மனித உள் ஆழங்களில்
தூண்டில் இடப்போகிறேன்
என்று
சிக்மெண்ட் ஃப்ராய்டின் முகமூடியைப்
போட்டுக்கொண்டு
சில்லறை மழையை
விளம்பரங்கள் மூலம்
பொழிய வைத்து
பார்வையாளர்களை
அச்சம் முதல் அசிங்கம் வரை
ஒரு மாயக்கயிறு கட்டி
அறிவு வீழ்ச்சியின் ஒரு
பாமரத்தனமான மலையை
வடம் பிடித்து இழுத்துக்கொண்டிருப்பதே
இந்த பிக் பாஸ் மாய்மாலங்கள்.
உண்மை மனிதர்களின்
பிம்பத்துக்கு சட்டை போட்டு
ஜீன்ஸ் மாட்டி
மற்றும் சல்வார் கமீஸ்
சில்லிப்புகளோடு
சித்திரம் காட்டும்
இந்த "ஹாலுசினேஷன்"களின்
வக்கிரங்கள்
சமுதாய மன மலர்ச்சிக்கு
தோண்டப்படும் புதைகுழிகள்.
பரபரப்பு திகில்
குற்ற மிழைக்கும் வெறிப்படுகைகள்
இவற்றை பூச்சாண்டி காட்டி
காதல் காமம் இவற்றையும்
பஞ்சு மிட்டாய் ஆக்கி
ஒளி பரப்பும்
இந்த சமுதாய மனமுறிவுகளில்
ஆக்கபூர்வம் என்பதை விட‌
அழிவுக்கு தினவு ஊட்டும்
காட்சி விருந்துகளே அதிகம்.
உலகம் பூராவுமே
மனிதனின் பலவீனங்களே
பணம் காய்ச்சி மரங்களாய்
மகசூல் குவிக்கின்றன.
இதற்கு எதிர் மறை சிந்தனையோட்டம்
ஒன்று
சமுதாய மின்காந்தப்புலனில்
ஒரு மின்னொளிப்புயலை
தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம்
நமக்குள்
உந்துதல் ஆகத்தான் வேண்டும்.
இந்த புதைகுழிகளில்
புதைந்து போய்விடாதீர்கள்
அன்பான பார்வையாளர்களே!

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக