வியாழன், 4 ஜூலை, 2019

கடவுளே...

கடவுளே...
===================================================ருத்ரா

கடவுளே
கை கூப்புகின்றோம்
தினம் தினம்
உன் திசை நோக்கி.
திசை தான் தெரியவில்லை.
ஆனாலும்
கை கூப்புகின்றோம்.

கடவுளை
உன் முகம் கண்டு
தரிசனம் செய்து களிக்கின்றோம்.
உன் முகம் தெரியவில்லை
ஆனாலும்
உன்னை தரிசனம் செய்கின்றோம்.

உன்னைப் புகழ் பாடி
தினம் தினம்
சொற்கள் அடுக்குகின்றோம்.
சொற்களில் வெறுமை தான்
உள்ளதென்று அறிகின்றோம்.
ஆனாலும்
உன் புகழ் பாடுகின்றோம்.

நீ யார்?
நீ எங்கே?
நீ எப்பொழுது பிறந்தாய்?
பிறந்தாய் என்று
இறந்து போவதும்
இயற்கை தானே!
அதை எங்களால்
பொறுக்க முடியாது.
அதனால்
உனக்கு பிறப்பு இறப்பு
இல்லை
என்று சொல்லி
பூரித்து புல்லரித்து
புளகாங்கிதம் கொள்கின்றோம்.

இப்படி
கேள்விளையும் விடைகளையும்
எங்களுக்குள்
கோர்த்துக்கொண்டு
நீ இருப்பதால்
நீ இருக்கிறாய் என்றும்
நீ இல்லை என்றும்
நாங்கள்
"பாஷ்யங்கள்" படைக்கின்றோம்.

வானத்திலிருந்து
ஒரு குரல் கேட்கிறது.

நீ என்னைப்பார்க்கிறாய்.
நான் உன்னைப் பார்க்கிறேன்.
இது
வெறும்
பிம்பங்களின் பரிமாற்றம்.

அப்படி என்றால்
நீ யார்?
நான் யார்?

விஞ்ஞானி கூறுகிறான்.
இப்போதைக்கு
அது "ஹிக்ஸ் போசான்".

என்னது?
ஹயக்கிரீவரா?
விளங்கும்படி சொல்லுங்களேன்.

ஆகட்டும் இருங்கள்.
சாக்பீஸில்
கணித சூத்திரங்கள்
வரிசையாய்
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அந்த கணிதம்
எனும் மொழியில்
சுவர்கள் இல்லை?
வேலிகள் இல்லை?
தொடர்ந்து அவை
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஆத்திகன் கண்ணீர் மல்கி
கன்னத்தில் போட்டுக்கொள்கிறான்.
நாத்தினோ
மொழியல்லாத அந்த மொழிக்குள்
நுழைந்து
போய்க் கோண்டேயிருக்கிறான்.

ஆமாம்.
அது யார்?
அது எங்கே?
அது எது?

முற்றுப்புள்ளிகளின் தோல்வியில்
அறிவின் வெற்றி
புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.

=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக