வியாழன், 18 ஜூலை, 2019

கர்நாடகாவில் ஒரு துர்நாடகா

கர்நாடகாவில் ஒரு துர்நாடகா
=================================================ருத்ரா

டெல்லிக்காரர்களின் இதிகாசங்களில்
அவர்கள் ஆளாத மாநிலங்களில்
தாறு மாறான ராமாயணங்கள்
நடத்தப்படும்.
ஆளுநர்கள்
அவர்களுக்கு தோதான மராமரங்களில்
மறைந்து கொண்டு
அம்புகள் எய்வார்கள்.
எய்யப்படுவது
ஜனநாயக ராமர்கள் என்றாலும்
கவலையில்லை.
அவர்களுக்கு பிடிக்காத மாநிலங்களில்
திரை மறைவில் அந்த பெரும்பான்மையை
சிதைத்து விட்டுக்கொண்டே
பெரும்பான்மை எங்கே எங்கே
என்று கேட்பார்கள்.
அவர்களின் பினாமி ஆட்சிக்கு
அடி பணிந்த மாநிலங்களில்
மனம் ஒப்பாதவர்களைக்கூட
மணம் செய்வித்து
அவர்கள் கை கோர்த்துக்கொடுப்பார்கள்.
பெரும்பான்மை அங்கே சிறுபான்மையாய்
தேய்ந்து கிடந்தாலும்
வெறுமே கண்ணை மூடிக்கொண்டு
தெருக்குப்பைகளை கூட்டிப்பெருக்கி
படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
வேண்டாத மாநிலங்களிலோ
சீதைக்கும் ராமனுக்கும்
நடந்த சுயம்வரத்தையே
கெடுத்துவைக்க யாகம் நடத்துவார்கள்.
எதிர்க்கட்சிகளின்
சுண்டைக்காய் மாநிலங்களில் கூட
பூசணிக்காய் அளவுக்கு
பொய்ப்புகார்கள் நீட்டுவார்கள்.
அவர்கள் ஆளாத மாநிலங்களில் மட்டுமே
ஆளுநர்களுக்கு
பீரங்கிகளைக்கொடுப்பார்கள்.
அவர்கள் ஆளுகின்ற மாநிலங்களில்
ஆளுநர்கள் கையில் இருப்பது
வெறும் அட்டைக்கத்திகள் மட்டுமே.
இந்திய ஜனநாயத்தை
ஒரு மரணத் தூக்கத்தில் ஆழ்த்திடவே
கர்நாடக சட்டசபையில்
இவர்களின் தூங்கும் விரதம்.

காங்கிரஸ்காரர்கள் செய்ததை தானே
நாங்கள் செய்கிறோம் என்று
கீறல் விழுந்த ரிக்கார்டுகளை
ஒலித்துக்காட்டுவார்கள்.
காங்கிரஸ்காரர்கள் செய்வதை செய்ய
நீங்கள் எதற்கு?
காங்கிரஸ்காரர்களே இருக்கட்டுமே
என்று
கீறல் விழாத ரிக்கார்டை
கேள்விகளாக்கி மக்கள் கேட்கிறார்கள்.
இவர்களிடம்
எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது.
ஜனநாயக சிந்தனை எனும்
"எண்ணிக்கை" இல்லாததால்
இந்தியத்தாய் எனும் சீதையை
தீக்குளிக்க வைத்து
அதில் ஆட்சியை சமைத்து
சோறாக்கி தின்பதே இவர்களது
ராமாயணம்.

===========================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக