திங்கள், 22 ஜூலை, 2019

குகை

குகை
============================================ருத்ரா

நான் தனிமையில் எத்தனையோ சிந்தித்திருக்கிறேன்.
முதலில் ஒரு இருட்குகையில் இருப்பது போல் இருக்கும்.
அப்புறம் அந்த இருட்டும் பழகிப்போகும்.
கருப்பு சூரியன் தன் கூந்தலை அவிழ்த்து
நம்மீதே காயப்போட உலர்த்துவது போல் இருக்கும்
இருள் கூட மயில் பீலிகள் போல்
பிசிறுகளை முகத்தில் வீசி கிச்சு கிச்சு மூட்டும்.


இந்த குகையில் உட்கார்ந்து
தியானம் செய்யவேண்டும் என்று
ரிஷிகள் வருகிறார்களாம்.
வாழ்கையின் ருசியும் வெளிச்சமும் வெளியில் இருக்க‌
இவர்கள் என்ன "பிரம்மானந்தை"சுவைக்க‌
உள்ளே வருகிறார்கள்.?

ஒரு சாமியாரும் ஒரு சாமான்யனும்
நண்பர்கள் ஆனார்கள்.

சுவாமி
அந்த சுவை எப்படித்தான் இருக்கும்?
காட்டுங்களேன்.

சரி இதோ சுவைத்துப்பார்!

ஒரு சுரைக்குடுவையிலிருந்து
என் வாயில் அதை ஊற்றுகிறார்.

ஆகா! திவ்யம் திவ்யம்..என்ன சுவை.
ஆனந்த கூத்தாடினேன்.

அப்பனே!
உண்மையில் அந்த ஞானாமுதம்
இதையும் விட ஆயிரமாயிரம் மடங்கு சுவை.

உனக்கு சிறிது அடையாளம் காட்டவே
இந்த "சோம பானம்"

சோம பானமா?
அது வேதகாலத்து டாஸ்மாக்கு சரக்கு ஆச்சே!
ஆனால்
என்னிடம் குவார்ட்டர் பாட்டில் ஒன்று தான் இருக்கிறது.

என்னப்பா அஸ்கு புஸ்கு என்கிறாய்?
அதை வைத்திருந்தால் கொடு.
நானும் அதை சுவைத்துப்பார்க்கிறேனே.
ஓங்காரத்திலிருந்து துரியப்பாய்ச்சல் புரியும்போது
நாங்கள் அனுபவிப்பது தான் அந்த ஞானானந்தம்.

நீங்கள் என்னமோ எங்கிருந்து கொண்டு வேறு எங்கோ
பாய்ச்சல் செய்வதைத்தான் சொல்கிறீர்கள்.
எங்கள் டாஸ்மாக்கை கொஞ்சம் உள்ளே ஊற்றினால்
எழுபதினாயிரம் பிரபஞ்சம் தாண்டி
எழுபதினாயிரம் சொர்க்கம் தாண்டி
பறந்து கொண்டிருப்போம்.

சரி உன் பாட்டிலை எடுத்துக்கொடு.
என் சுரைக்குடுக்கையை நீ எடுத்துக்கொள்.

இருவரும் பறிமாறிக்கொண்டார்கள்.

சுரைக்குடுக்கைககள்
கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குள்
அட்மிட் ஆனது.
குவார்ட்டர் பாட்டில் தேவர்கள் வழியாக
எமதர்மன் கையில் மாட்டிக்கொண்டது.

பூமியில் இப்போது
ஐந்நூறு வயது ஆயிரம் வயதுக்காரர்களின்
கூட்டம் மிகுந்து விட்டது.

பூமியின் சுற்றும் வேகம் குறைந்து
ஒரு நாள் என்பது
ஒரு மாதம் ஆனது.

==================================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக