செவ்வாய், 9 ஜூலை, 2019

பட்ஜெட்



பட்ஜெட்
=======================================ருத்ரா


பொருளாதார வல்லுநர்களுக்கு
போதையேற்றும்
சில புள்ளிவிவரங்களின்
காக்டெயில் பார்ட்டி தான் இது.
ஏழைகளின் சொர்க்கம் இதோ
என்பார்
ஒரு அரைக்கால் சதவீத வளர்ச்சி காட்டி.
பணக்காரர்களுக்கு
சரியான சவுக்கடிகள் என்பார்.
அந்த சவுக்குள் எல்லாம் சும்மா
கிச்சு கிச்சு மூட்டும்
மயிற்பீலிகளின் சாமரம் தான்.
இரும்பு மனிதருக்கு
மூவாயிரம் கோடியில்
ஒரு சிலை..இதோ
பாருங்கள் என்கிறார்.
ஒரு மழையில்  எல்லாம் புரிந்தது.
சிலை
அவருக்கல்ல.
மழையின் ஆகாய கங்கை
அவர் தலை வழியே ஒழுகித் தீர்த்தபோது தான்
அது ஒரு "பகீர"தன் தவத்துக்கு என்று
புரிந்து போனது!
இவர்கள் ஒளித்து வைத்த ஊழல் எல்லாம்
கொட்டிக்கவிழ்த்து  காட்டியது.
இவர்கள் தவம் எல்லாம்
அந்த பங்குமார்க்கெட் பகாசுரர்களுக்குத் தான்
என்று புரிந்தது.
இன்னொரு உச்சம் தொடவேண்டுமென்றால்
ஒரு ஈ காக்கை இல்லாத
இமயமலையின் உச்சியிலே
கோடி கோடி காக்கை குருவிகளை
சுட்டு வீழ்த்தினோம் என்பார்கள்.
பங்கு வியாபாரமும் கொடிகட்டி பறந்து விடும்.
வருமானத்திலிருந்து விலக்கியே
வைக்கப்பட்டவர்களின்
பெரும்பான்மை ஜனநாயகத்தின் தேசம் இது.
ஆனாலும்
அந்த சிறுபான்மையின் "குச்சி மிட்டாய்"
வரிச்சலுகை எனும்
வருமான வரி விலைக்குகளை
வானளாவ புகழ்ந்து நிற்பார்.
சில கூழாங்கற்கள் சந்தோஷப்படலாம்.
ஆயிரம் இமயங்களை திரட்டி வைத்திருக்கும்
அந்த பெரும்பணக்காரர்களின்
கருப்புக்கோட்டைக்குள்
இவர்களின்
மூவர்ணக்கொடி முனைமுறிந்து அல்லவா
கிடக்கிறது.
அதுவும் அந்த
நான்கு வர்ண ஐந்து வர்ண
சாதி மத மத்தாப்புக்காடுகளில்
மாய்மாலங்கள் கொழுந்து விட்டு எரிய
நம் வரலாற்றுபக்கங்கள் எல்லாம்
கருகிக்கிடக்கின்றன.
ஆனாலும் அதோ
மேசைகள் தட்டுகிறார்கள்
காதுகள் பிளக்க.

==========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக