செவ்வாய், 9 ஜூலை, 2019

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்.

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்.
==================================================ருத்ரா

தாத்தா அடைந்து கிடந்த
அந்த அறையில்
காலம் நீண்டு நெளிந்து
சினைப்பிடித்து
சட்டையுரித்த நாற்றம்.
காலத்தின் குஞ்சுகள்
கடிகாரத்தின் "டிக் டிக் டிக்"குகளில்
அங்கே சிதறிக்கிடந்தன.
தாத்தா
அந்த வைக்கல் சுருட்டிய
கடைசித் தலையணையில்
கிடத்தி வைக்கப்பட்டபோது
அவர் கனவுகளின்
புகைச்சுருள்
கொள்ளிச்சட்டியில்
மிச்சமாய் சுருண்டு சுருண்டு வந்தது.
அப்படி என்ன தான்
அவர் அறையில்
அவரை இத்தனை வருடம்
கவ்விப்பிடித்திருக்க கூடும்?
அந்த பழைய ட்ரங்குப்பெட்டியை
குடைந்தேன்.
வர்ணம் உதிர்ந்து
அங்கங்கே நசுங்கி இருந்தது.
அந்த பழம்பொருட்களை கவிழ்த்தேன்.
உருண்டையாய் சிறிதாய்
இரண்டு காசிச்செம்புகள்.
இதனை எப்படி மறந்தனர்?
உள்ளே காசித் தீர்த்தம் குலுங்குவது
கேட்டது.
அழுகிறதோ ?
அப்புறம் பொடிப்பொடியாய்
உதிரும் பழுப்பேறிய காதிதங்களில்
தேவாரம் திருவாசகம் புத்தகங்கள்.
திருமந்திரத்தில் ஏதோ பக்கத்தை மடித்து
அடையாளம் வைத்திருந்தார்.
"மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தில் மறைந்தது மாமத யானை.
...........................................................
................................................................."
சிவபூசையில்
தீட்சை எல்லாம் வாங்கி விட்டாராம்!
சாமி என்னடா சாமி என்னடா சாமி?
அது ஓஞ்சா அது ஒம்மேல படுத்துக்கிடும்!
நீ ஓஞ்சா அது மேலே நீ படுத்துக்கோ!
ஒண்ணுக்கு இருக்கிற நாய்க்கு
செக்கும் சிவலிங்கமும் ஒண்ணு தாண்டா.
சொல்லிவிட்டு
அட்டகாசமாய் சிரிப்பார்.
இன்னும் குடைந்தேன்.
சில அபூர்வ சிலைகள்.
அனைத்தும் நிர்வாண சிலைகள்..
சில வேளைகளில்
அந்த  சிலைகளைப் பார்த்து
உரத்து முழங்குவார்..
புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லிக்கொண்டே போய்
"சமணமும் சரணம் கச்சாமி"
என்று முடிப்பார்.
இன்னும் தோண்டித்  துருவிப்  பார்த்தேன்.
என்ன!
அவை "போர்னோ புத்தங்களா?"
அதிர்ச்சியில் உறைந்தேன்.
இதில் உறைவதற்கு என்ன இருக்கிறது?
எல்லாவற்றையும்
எல்லாவற்றிலும்
கண்டவர் விண்டதில்லை.
விண்டவர் கண்டதில்லை.

அவர் கருத்தில்
நிர்வாணமே பிரம்மாண்ட தெய்வம்.
உயிர்ப்பிழம்பின்
சொக்கப்பனையில்
ஆண் என்ன? பெண் என்ன?

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்
அவர் சாம்பலை கரைத்துவிட்டு.

==================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக