வெள்ளி, 31 மார்ச், 2023

வெற்றிமாறனின் விடுதலை.

வெற்றிமாறனின் விடுதலை

________________________________________________

சேயோன்.



ஏறக்குறைய ஒன்றரை லட்சம் 

இலங்கைத்தமிழர்கள்

கசாப்பு செய்யப்பட்ட பின்பும்

அதன் குருதிகலந்த கண்ணீரின்

அக்ரிலிக் பெயின்டிங்கில்

கொடி அசைத்துக்கொண்டு

செத்துப்போன நியாயத்துக்கு

எள்ளும் தண்ணீருமாய் வந்து

கொட்டிக்கொடுக்கப்படும்

கரன்சிக்கோட்டை ஒன்றைக்கட்டி

ஆளுகின்ற ஜிகினா ஆவேசங்களையெல்லாம்

பார்த்த பின்

ஏதோ ஒரு நீர்த்துப்போன‌

விடுதலை தாகத்துக்குள்

மீண்டும் ஒரு செயற்கைத்தாகம் ஏற்படுத்த‌

ரத்தமும் நகப்பிடுங்கல்கள்களும்

நிர்வாணப்படுத்தும் வெறித்தனங்களும்

என்னத்தை உயிர்த்துவிட இயலும்?

கம்யூனிசம் பற்றி

சாதாரணமாய் ராமாயண உபன்யாசங்கள்

போல‌

சப்பளக்கட்டைகள் தட்டி

இந்த மரத்துப்போன‌

செவிப்பறைகளை கிழித்துவிட முடியாத போது

இந்த எரிமலை தாகத்தை

ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்து

அப்படியே அப்பிவைத்துக்காட்டுகிறேன்

என்பதில்

ஒரு கனத்த கண்ணீர்த்துளி

கதை சொல்கிறது...அதுவும்

ஒரு அமிலமழைக்கு மேகம் கருவிக்கொண்டு

அகர முதல சொல்லத்துடிக்கிறது

என்பது மிக மிகத்தேவையான ஒன்று.

இதை பாராட்டு என்று கொச்சைப்படுத்துவதில்

எந்த நோக்கமும் நிறைவேறாது.

சூரி வெற்றிமாறன் கௌதம் மேனன் விஜய் சேதுபதி

என்று

ஒரு செம்படை கிழக்குத்திசையில்

ஒருவிடியலின் சிப்பைக்கிழித்துவிட‌

உந்துதல் காட்டுகிறது என்பதே

நாம் கண்ட சிறந்த வரலாற்றுத்திருப்பம்.

பிராணாயாமம் அது இது என்று

மூச்சுக்கலை பற்றி முழக்குவதில் தான்

நாம் மூழ்கியிருக்கிறோம்.

சமுதாயத்தின் 

அந்த மனித மூச்சே தான் மார்க்சிசம்

என்று இந்த படம்

அந்த சோடாபுட்டி அறிவுஜீவிகளுக்குள்

சோடாபாட்டில்கள் உடைத்துக்காட்டுமா?

மனிதனை மனிதன் சுரண்டுகின்றானடா

மனிதனை மனிதன் சாப்பிடறாண்டா

மனிதன் மனிதன் விலங்கிலும் கீழாய்

நடத்துகிறானடா

...

சரி அடா புடான்னு எழுதிட்டா போதுமா?

சீற்றம் எங்கே?

சினம் எங்கே?

ஆவேசம் எங்கே?

சிந்தனை உந்தலில் 

சிந்தனை விசையில்

சிந்தனையின் 

கால வெளி சமுதாயச்சுழி ஒன்று

கருந்துளையாய்

புதிய பிரபஞ்சங்களை

உறிஞ்சி உமிழுகிறது.

இதன் வெளிச்சம் 

எல்லா இருட்டு குருட்டு சந்துகளிலும்

கிழித்துக்கொண்டு பாய்கிறது.

அந்த பாய்ச்சல் மாறனே

வெற்றி மாறன்.

இன்னும் இன்னும்

இவன் மனித சிந்தனை

அநீதிகளின்

மடை உடைத்த வெள்ளமாய் 

பாயட்டும்.

மக்கள் விசையே

எல்லா அணுக்களிலும் 

அறியாமையை 

பிளக்கும் விசை.

அறிவுச்செறிவை

சேர்க்கும் விசை.

மனிதச்சுடரேந்தி..

ஓ! மனிதமே !

ஓடி வா! ஓடி வா!


________________________________________________




________________________________________________





புள்ளி



உங்களுக்கு தெரியுமா?

ஆணைப்படைத்த 

ஆணவ இறைவன்

அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே

அதிரடியாய் பதிலடியாய்

பெண்ணே முதலில் வந்து

வாசல் திறந்தாள்.

இவளின் தொப்பூள் கொடியே

இன்னும் 

அறுபடவில்லை

அறுபட‌வில்லை

அந்த இறைவனின் 

தொப்புள் புள்ளியில்.


__________________________________________________

ருத்ரா

புதன், 29 மார்ச், 2023

அகழ்நானூறு 32

 அகழ்நானூறு 32

___________________________________________

சொற்கீரன்.



சிமையக்குரல் கவின் ஊர்பு முடிச்சு

நிமிர்த்தன எதிரிய நிரம்பா நீளிடை

அவள் ஊறுசெய்தனள் கூந்தல் அஞ்சிறை

கொடுந்தண் பண்ணின் ஒலிமென் உருகெழ‌

ஓவு கொண்டனள் அவன் ஆவி கொண்டனள்.

அத்தம் நண்ணி அரும் பொருள் சேர்த்து

அகில் சுமந்து ஆர்த்த செல்வம் மணிநிரை கொளீஇ

ஆறு கொள்ளா ஆறுகள் நீந்துவன் ஆங்கு

சிமயவரம்பினள் சீர்மிகு ஐம்பால் கூந்தல் 

செறீஇய கருவி வானம் கல் பொருது இற‌ங்க‌

கருவிழி கொடிவிடு நீர்வழியாய் அவள் கறங்கு

வழியில் அவனும் இழைந்தான் பகன்றை அன்ன‌

அவள் முன்றில் இவர்தல் ஆற்றான் முறுவல் கண்டே


___________________________________________________________



அகழ்நானூறு 32க்கு பொழிப்புரை

___________________________________________________

சொற்கீரன்


பொருள்தேடி செல்லும் காதலன் காதலியின் நினைவாகவே காடுகளை கடந்து செல்கிறான்.அவள் கூந்தல் அழகு ஒரு மலையுச்சியை அவன் நடக்கும் அந்த நீண்ட வெறும்பாதையில் அவன் எதிரிலேயே அழகு காட்டி 

அவனை வதைக்கிறது.அவள் கூந்தல் இழைகள் அந்த மலைவிளிம்பிலேயே ஊர்ந்து ஊர்ந்து வந்து அவன் வழியோடு வந்து துயர் செய்கிறது.அவள் கூந்தல் திரள்கள் அழகிய வண்டுகளின் சிறகுகுகள் போல் தண்ணிய ஒரு இசையை ஒரு உருவகமாய் ஓவியம் காட்டுகிறது.அதில் அவன் உயிர் அவளுடனேயே பிணைந்து செல்கிறது.அவனும் விடாது காட்டுவழி தொடர்ந்து அந்த காட்டின் எல்லைக்கும் சென்று பொருள் ஈட்டுதலை

விடவில்லை.சந்தனம் மற்றும் விலைஉயர்ந்த மணிகள் எல்லாம் ஈட்டிக்கொண்டு வழி நிறைய அவள் நினைவுகள் வழிய வழிய இன்பப்பயணத்துடன் வழி திரும்புகிறான்.அப்போதும் அவள் அழகிய கூந்தலின் சிகரம் அழகு பொருந்திய உயரத்தில் அவனை அழைக்கின்றது.அவள் கூந்தல் பல வகிடுகளில் பிரிவுற்று அடர்த்தியான மழை சுமக்கும் கருமேகங்களின் வானத்துக்காட்சிகளாய் அவனை கவர்கின்றது.அந்த நீளக்கூந்தல் கொடி பிரிந்து கல் மோதி நீர்வழிபோல் ஒலித்து இறங்குவதோடு அவனும் இழைந்து நெளிகின்றான்.அவள் வீட்டு முற்றத்தில் ஒரு பகன்றைக் கொடியாய்ப்பற்றிப் படர மிகவும் தவித்தவனாய் வருகின்றான்.அவளது அழகிய முறுவல் கண்ட காட்சியே அவனை இவ்வாறு அவளிடம் சேர்க்க விரைகிறது.


எயினந்தை மகனார் இளங்கீரனார் அகநானூற்றுப்பாடல் 399 ல் சிமையம் இமையம் என்ற சொற்களை ஆளும் விதம் வெகு வெகு நுட்பமானது. தமிழ்ச்சொல்லான சிமையம் என்பது மலை உச்சியைக்குறிக்கும்.இதுவே சங்கத்தமிழில் "இமயம்"ஆக  வருகிறது.வடவேங்கடம் என்றால் நாம் பக்தியோடு குறிப்பிடும் வேங்கட மலை தான். ஆனால் பொருள் தான் வேறு.வேய் எனும் மூங்கில் காடுகள் நிறைந்ததைக்குறிக்கும் சொல் அது.மலைச்சிகரத்தின் தூய தமிழ்ச்சொல்லே சிமயம் அல்லது சிமையம் ஆகும்.இதுவே இமயம் அல்லது இமையம் ஆயிற்று.எயினந்தை மகனார் இளங்கீரனார் இந்த சொல்லை வைத்தே அந்த அகநானூற்று பாடலின் அழகு நுட்பத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்.

"வேய் கண் உடைந்த சிமைய" என்னும் வரியில் மூங்கில் கணுக்கள் காய்ந்து முற்றி உடையும் நிலையில் உள்ள வெயிலின் கொடுமையில் அந்த மலை உச்சியை (சிமைய) குறிக்கின்றார் புலவர்.

நம் தமிழ்மொழியின் சிறப்பு "அதன் பெயர் சூட்டலே". இனிய பொங்கல் உண்டோம் என்கிறோம். பொங்கல் என்பது பொருளைக்குறிக்கவில்லை. பொருள் சமைக்கபட்டு அதாவது பொங்கும் அல்லது கொதிநிலை எனும் வினையைக்குகுறிக்கும்.எனவே "பொங்கல்"என்பது வினையாகு பெயர்.வினைப்பெயரே பொருளுக்கு ஆகிவருவதே தமிழின் சிறப்பு.இதன் அடிப்படையில் "மலை"யை நாம் ஏன் மலை என்கிறோம்.னம் எதிரே உயரமாய் தோன்றுவது நம்மை "மலைக்க "வைக்கிறது.எனவே மலை கூட வினையாகுபெயர் தான்.மலைத்தல் உணர்ச்சி இங்கு புலப்படுவது போல் மிக மிக உயரமான உச்சி நிலை (சிகரம்)யைக்கண்டு இமை கொட்டாது கண்டு வியக்கிறோம்.இதன் அடிப்படையில் வழங்கும் சொற்களேசிமையம் இமையம் என்பது.


அந்த தமிழ்ச்சுடரின் அழகினை அகழ்ந்து நான் எழுதியதே இந்த அகழ்நானூறு 32.


_____________________________________________________________________________







___________________________________________________________________________________




ஞாயிறு, 26 மார்ச், 2023

திருமணவாழ்த்து மடல்

திருமணவாழ்த்து மடல்

_________________________________________________


மணமகன்

செல்வன் ஆ அரவிந்த் சீனிவாஸ்

மணமகள்

செல்வி எம் பெரியநாயகி எனும் மீனா.

திருமண நாள்

27.03.2023

மதுரை

M S MAHAL

Paravai.

_____________________________________________________________________


இல்லறச்சோலை புகுந்திடும் 

அன்பு உள்ளங்களே.

அஞ்சற்க!அஞ்சற்க! 

அஞ்சறைப்பெட்டி உங்களிடம் உண்டு.

இன்பப்பெட்டகமும் அதுவே தான்

அறிவீர்!

இதயம் என்னும் உங்கள் பாஸ்வர்ட் 

திறக்கும் வாசல் எல்லாம் 

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெள்ளமே.

இது உங்கள் உங்கள் உங்களுக்கான 

இனிய தருணங்களின்

 புத்தகத்திருவிழா.

எழுதுங்கள் படியுங்கள் எல்லாம்

 உங்கள் எழுத்துக்களே.

இனி உங்கள் இலக்கணமும் அதுதான்.

இலக்கியமும் அது தான்.

இல்லற வரிகளின் அன்பும் அழகும் 

அறிவின் கோடும் புள்ளியும் சேர்ந்து

மனம் மகிழ்ந்த மருதானை ஓவியம்

மங்கா ஒளியில் மங்கலம் நிறைக்கும்.

வீடுகள் வெறும் கூடுகள் அல்ல.

நினைத்தால் அங்கு சிறகுகள்

 முளைக்கும்.

வானமும் உயர்ந்து நோக்கிட வெட்கும்

பேரும் புகழும் செல்வமும் நிறைந்திட‌

மக்கட் பேறு எனும் மாணிக்கமும் சுடர‌

நீங்கள் நீடூழி நீடுழி வாழ்ந்திடவே என‌

வாழ்த்திடுகின்றோம்.

வாழ்த்திடுகின்றோம்.

 

_________________________________________


அன்புடன் வாழ்த்தும்


இ.பரமசிவன் & ப.கஸ்தூரி

குடும்பத்தினர்.

ப்ளாட். 628

10 வது தெரு

கற்பகநகர்

மதுரை 625007

________________________________________












தேன்பிரளயம்

 

https://www.youtube.com/watch?v=mBX775qJZZ0

"அன்பே என் ஆரமுதே..."

சீர்காழி கோவிந்தராஜன்‍...ஜிக்கி.




இது பாட்டா?

இந்த தேன்பிரளயம் என்னை

எத்தனையோ தடவை 

புரட்டி புரட்டி போட்டு விட்டது.

திருப்பி திருப்பி எத்தனை தடவை

கேட்டிருப்பேன்

என்று துல்லியக்கணக்கெல்லாம் 

போட்டுக்கொண்டிருக்க முடியாது.

அந்த நேரத்தில்

அந்த மெட்டின் இனிமை துள்ளும் அரும்புமுனை

சடக்கென்று மொத்த பிரபஞ்சத்தையும்

என் மீது கவிழ்த்து 

திக்குமுக்காட வைத்து விடுமே.

சுவரில் வட்டவட்டமாய் தயிர்க்காரி 

பொட்டுவைப்பாளே 

அவளிடம் தான் எத்தனை தடவை என்று

கேட்க வேண்டும்.

அவள் சொன்னாள்.

அய்யா நீங்களே வந்து பாருங்கள்.

அந்த புள்ளிகள் தெரியவில்லை.

எங்கும் எறும்புகள் எறும்புகள் எறும்புகள்!

இன்னும் இன்னும் 

அங்கு ஜிக்கியும் சீர்காழி கோவிந்தராஜனும்

புதிருக்குள் வராமலேயெ புதிராய் இருக்கும்

அந்த இனிப்பின் உயிர்ப்பு ஒலியை

பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.

_________________________________________________

சேயோன்



தேன்பிரளயம்


"அன்பே என் ஆரமுதே..."
சீர்காழி கோவிந்தராஜன்‍...ஜிக்கி.

இது பாட்டா? இந்த தேன்பிரளயம் என்னை எத்தனையோ தடவை புரட்டி புரட்டி போட்டு விட்டது. திருப்பி திருப்பி எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று துல்லியக்கணக்கெல்லாம் போட்டுக்கொண்டிருக்க முடியாது. அந்த நேரத்தில் அந்த மெட்டின் இனிமை துள்ளும் அரும்புமுனை சடக்கென்று மொத்த பிரபஞ்சத்தையும் என் மீது கவிழ்த்து திக்குமுக்காட வைத்து விடுமே. சுவரில் வட்டவட்டமாய் தயிர்க்காரி பொட்டுவைப்பாளே அவளிடம் தான் எத்தனை தடவை என்று கேட்க வேண்டும். அவள் சொன்னாள். அய்யா நீங்களே வந்து பாருங்கள். அந்த புள்ளிகள் தெரியவில்லை. எங்கும் எறும்புகள் எறும்புகள் எறும்புகள்! இன்னும் இன்னும் அங்கு ஜிக்கியும் சீர்காழி கோவிந்தராஜனும் புதிருக்குள் வராமலேயெ புதிராய் இருக்கும் அந்த இனிப்பின் உயிர்ப்பு ஒலியை பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
_________________________________________________ சேயோன்

நெஞ்சுபொறுக்குதில்லையே ...

(38) Parasakthi Nenjuporukkuthilliaiye Song - YouTube 


இசை அமைப்பாளர் திரு.சுதர்ஸன்

____________________________________________________


அந்த இசைமாமேதையின் பாட்டு

இன்று

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம்

ஜனநாயகம் என்ற மூச்சு

எங்கே பட்டுப்போய் விடுமோ?

என்ற கவலையின் ஊசிமுனையால்

துளைக்கப்படுவதை

துல்லியமாக காட்டுகிறது.

வாழ்க அந்த இசைச்செம்மல்.

_______________________________________________

சேயோன்.

சின்னஞ்சிறு சிட்டே!

 


1 நபர், குழந்தை, நிற்கும் நிலை மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

சின்னஞ்சிறு சிட்டே!

சிங்காரப்பூஞ்சிட்டே!

இந்த உலகத்தில்

அப்பாக்களுக்கெல்லாம் அப்பாக்களாய்

அப்பால் ஒரு 

பூங்கிளை உண்டு.

அதில் தான் ஆனந்தமாய் நீ

அமர்ந்திருக்கிறாய்.

நீ நீடூழி நீடூழி வாழ்க!

_____________________________________________

தாத்தா இ பரமசிவன்

வெள்ளி, 24 மார்ச், 2023

முரண்பாடு

 


எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்

மனிதரையும் மற்ற எல்லா உயிர்களையும் 

படைத்திருந்தால்

மேலே சொல்லிருக்கும் நோக்கம் மட்டுமே தான்

முதலில் தோன்றியிருக்கவேண்டும்.

எல்லாம் இன்பமயம் 

என்று கருத்து வடிவம் பெற‌

அடிப்படையாய் இருப்பது 

மக்கள் மற்றும் எல்லா உயிர்களும் தான்.

மக்கள் மயம்.இன்பமயம்

இரண்டும் இழைந்த ஒரு வடிவத்தை

அந்த கடவுள் படைத்திருப்பார் என்று கொள்வோம்.

இப்போது அவருக்கு

சலிப்பு தட்டி போயிருக்கலாம்.

ஒரு சிறு வேறுபாட்டை சொருகி வைத்திருக்கலாம்.

இப்போது அதை உற்றுப்பார்க்கிறார்.

ஏதோ அங்கே சூடு பிடித்திருப்பதாக தெரிகிறது.

எங்கோ இன்பம் அதிகமாகவும் 

அல்லது துன்பம் அதிகமாகவும்

ஒரு மேடு பள்ளம் உண்டாயிருப்பதாக உணர்கிறார்.

அதாவது அவருக்கே அதுவரை புரிபடாத‌

ஒரு நிலைப்பாட்டைப்பார்க்கிறார்.

அதுவே முரண்பாடு.

அது அவரை எதிர்த்து வினவுகிறது.

அதற்கு அவரால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.

இருப்பினும் ஒரு பதில் உருவாகிறது.

அதன் விளைவு என்னவென்றால் 

இனிமேல் கடவுள் என்றும் அதற்கு ஒரு சிம்மாசனம் என்றும்

தேவையில்லை என்று புரியப்படுகிறது.

முரண்பாடுகளே அங்கு எல்லாவற்றையும் இயக்குகிறது.

அது வியக்கத்தக்க மாற்றங்களை விளைவிக்கிறது.

ஒரு சமத்தன்மையோடு அந்த முரண்பாடுகளையும் 

பதியம் போட்டு வளர்த்து

ஒரு புதிய நந்தவனமே உருவாகிறது.

ஒரு பெரிய வளர்ச்சி செயற்கையாய் எழுந்து நின்று

ஆட்சி செய்கிறது.

இப்போது தான் கடவுளுக்கு ஞாபம் வருகிறது.

அந்த இடம் வெறுமையாக இருக்கிறதே அதில்

ஏதோ சாந்து போட்டு பூசிவிடுவோம் என்று

அரைகுறையாய் விட்டு விட்டு வந்தோமே

அது இப்போது என்னவாக இருக்கும்?

இப்படி அவரே "கேள்வியில்" விழுந்து நெளிந்தபோது தான்

அறிந்தார்.

ஓ! அந்த க்ரே மேட்டர் ...மூளை!

ஞாயிறு, 19 மார்ச், 2023

குருகு 2

 குருகு 2

----------------------------------------------------------------------------


கம்பியூட்டர் ஓவியம் ...ருத்ரா ...ஆகஸ்ட் 1996   ப்ரையார் ஒக்லஹாமா. யு எஸ் ஏ


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.


2
____________________________________

உன் மார்புக்கூட்டை

உற்றுப்பார்.

அது வெறும் ஏறியிறங்கும்

மூச்சு அல்ல.

அதை சிறகுத்துடிப்புகளாய்

உருவகம் கொள்.

அந்தப்பறவை  எங்கு

வேண்டுமானாலும்

பறக்கும்.

அமைதியாய் அதன் ஒலி

ஹம்..ஸ்.. என்று

உன் மூச்சுகளில் ஒலிக்கும்.

ஹம்சம் என்றால்

அந்த மொழியில் அன்னம்.

அந்த ஒலிகளின் முட்டைகள்

பிரம்மத்தை குஞ்சு பொரிக்குமோ

என்று

இந்த உபநிஷத்தை

 சொல்லிக்கொண்டு

இருக்கிறார்கள்.

உலக சிட்டுக்குருவிகளின் நாள்

 

Facebook

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.



உலக சிட்டுக்குருவிகளின் நாள்

_________________________________________‍



சிட்டுக்குருவிக்கென்ன 

கட்டுப்பாடு?

இந்தப் பாடலே அந்த‌

சிட்டுகளின் தேசத்துக்கு 

ஒரு தேசீயகீதமாய் 

ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இன்று இதன் சிறகடிப்புகள்

கைபேசிகளில் கூடு கட்டி

உலகத்தின் முகத்தையே

மாற்றிக்கொண்டிருக்கின்றன.

மரக்கிளைக்குருவியும்

மின்ன‌ணுக்குருவியும்

போட்டுக்கொண்ட கூட்டணியில்

உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது.

முட்டை போட்டு குஞ்சு பொரித்தாலும்

பொரிக்காவிட்டாலும்

பில்லியன் பில்லியன் டாலர்கள்

எங்கோ 

ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது.

கீச்கீச்சென்று அவை

கலித்தொகையும் குறுந்தொகையும்

பாடிக்கொண்டிருப்பதால்

காதல் மின்னல்களின் நெய்தலில்

இந்த உலகம் அழகாய் சுழல்கிறது.

எந்தப்பறவை என்றால் என்ன‌

ஹாஃப் பாயில் என்று வரும்போது

நட்சத்திர ஓட்டல்களின் மேஜைக்கும் 

வருவது உண்டு.

மனிதனுக்கு

மரம் மட்டை புழு பூச்சியோடு

இந்த வானம் கூட‌

தீனியாகும் போது

ஒரு நாள் இந்த உலகமே

காணாமல் போய்விடலாம்.

செவ்வாய்க்கோளின் கூண்டு வீடுகளில்கூட‌

ஒரு சிறிய கூண்டில்

அது சிறகடித்து சிக்னல்கள் 

தந்து கொண்டிருக்கும்.


_____________________________________________________________

சேயோன்.






சனி, 18 மார்ச், 2023

பலூன்

பலூன்

____________________________________________________

ருத்ரா



மகாப்பெரிய இறையே!

உனக்காக நாங்கள் ஊதிய பலூன்

எல்லாவற்றையும் 

உள்ளடக்குவதாக உள்ளது.

வான மண்டலங்களையும்

விண்வெளிப்பிழம்புகளையும்

தன்னகத்தே கொண்டிருக்கிறது.

எங்கள் இந்த மூச்சு பெரிதா?

இல்லை

அதில் நாங்கள் வரைந்த உன்

முகம் பெரிதா?

இந்த மூச்சைப்போலவே

உன்னைப்பற்றி முழக்கும்

இந்தப்பேச்சும் பெரிதே.

இந்த மனிதனின் மூச்சும் பேச்சுமே

இங்கு எல்லாம்.

அப்படி இருக்க‌

மனிதப்பிறவியை

கோடரி கொண்டு

வெட்டிவிட்டும்

உன் தந்திரம் இங்கே

யாருக்காக?

எதற்காக?

துறவு கொள்.

என்னை விசுவாசி.

என்ற குரல்

எங்கிருந்து வந்தது.

மூச்சு நாங்கள் கொடுத்தது.

பேச்சும் நாங்கள் கொடுத்தது.

அதில் 

நாங்கள் பிடித்த பிண்டம்

எங்களையே தின்று தீர்ப்பதற்கா

உன் மோட்ச தந்திரம்.

மிகப்பெரிய இறைவம் தான் நீ.

எங்கள் பலூனா எங்களுக்கு சவப்பெட்டி?

உனக்கு எதுவுமே புரியாத போது

பிரம்மம் என்று

இந்த பலூனை

நூல் வைத்துக்கட்டி

சாதி மத வியாபாரத்தை

துவக்கி விட்டாயே.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு

தீங்கு விளைவிக்கக்கூடாது

என்று

நீ தண்டனை மழைகள் 

பொழிந்தபோதும்

அந்த மனிதன் தன்னைப்பற்றியே

சிந்திக்கும் அறிவு

கொண்டிருக்கக்கூடாது

என்பதற்காக 

எத்தனை பிளவு வாதங்கள்?

வர்ணங்கள் இங்கு

அழகுக்கு அல்ல 

மனிதம் எனும் ஒளியையே

இருட்டு பூசி அழித்துவிடத்தான் 

அவை எனும் சூழ்ச்சிகள்

ஏன் இங்கே?

கடவுளே என்று உன்னை

ஒலித்தால் கூட‌

தீட்டு என்று மண்ணுக்குள்

அழுத்திவிடும் 

தந்திரங்களும் மந்திரங்களும் 

இங்கு எதற்கு?

இதை புரிந்து கொண்ட 

சிற்றறிவு போதும் எங்களுக்கு.

உன் பேரறிவை நீயே வைத்துக்கொண்டு

பலூன் ஊதி விளையாடு.

எங்கள் அறிவின் "க்ளோனிங்க்"மூலம்

விதம் விதமாய் நாங்கள் தான்

உன்னைப்படைத்தோம்.

பொம்மை தானே 

தீமையை அழிக்க 

உன் பன்னிரெண்டு கைகளுக்குள்ளும்

ஆயுதங்களை செருகி வைத்தால்

நீ

அதையே வைத்து எங்கள்

உரிமையை

அறிவை

வாழ்வை 

வதம் செய்யக்கிளம்பிவிட்டாயே.

கொடுமையான அறியாமையே

பின்னிருந்து உன்னை

முன் தள்ளுகிறது என்று

கண்டு கொண்டு விட்டோம்.

நீ உடையப்போகிறாய்.

உடையாத உறுதியான‌

எங்கள் அறிவே இனி

மிகப்பெரிய பெரிய பெரிய...

இதை இறைவர்களால் 

புரிந்து கொள்ள முடியாது.


_____________________________________________________



 

சிவாஜி


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் , ’Digital Art by: KOUWSHIGAN acsolution.com’ எனச்சொல்லும் உரை இன் ஓவியமாக இருக்கக்கூடும்



 சிவாஜியின் உணர்ச்சிக்கொந்தளிப்பை

ஒன்பது ராத்திரியில்

அலையடிக்க வைத்தார் 

ஏ.பி.ஏன் அவர்கள்.

இன்னொரு ராத்திரியையும் 

கொடுக்கலாம் என்று ஓவியர்

அந்த நடிப்பு வானத்தின்

மூலை முடுக்குகளையும்

சுழிவு நெளிவுகளையும்

நரம்புகளின் கொத்தாக்கி

உணர்ச்சிப்பிழம்பை 

வடித்துக்கொடுத்திருக்கிறார்.

ஓவியர் கௌசிகன் அவர்களுக்கு

பாராட்டுகள்.

____________________________________________.

சேயோன்.






இளையராஜா

 இளையராஜா

___________________________________‍

சேயோன்.



இசை எனும் காட்டாறு

அள்ளிக்கொண்டு நகர்ந்த‌

பூக்கள் எல்லாமே அழகு தான்.


அன்றைய வெங்கட்ராமன் ஜி ராமநாதன்

மற்றும் சுதர்ஸன், எம் எஸ் வி ,கே வி எம்

இவர்கள் கூட்டத்தில் இளயராஜா அப்புறம்

ஏ.ஆர் ரகுமான் இவர்கள் எல்லோருமே

இசையை அள்ளி அள்ளி வழங்கியவர்கள் தான்.

இன்னும் விடுபட்ட மேதைகள் எத்தனையோ

பேர்கள் உண்டு.

அவர்களில் இளையராஜா மட்டும்

தனிக்காட்டு ராஜா இல்லை.

அநிருத்தின் இசை நுட்பம் புல்லரிக்க‌

வைக்கிறது.

ரீங்காரமிடும் தேனீக்களின் நோட் களும் கூட‌

கணினியின் கர்ப்பத்துள் அடக்கம் தான்.

ராஜா ராஜா ..

வேறு எங்கும் தூக்காதே கூஜா

என்று நரம்புக்கருவிகளையும் 

பல வித கொட்டுகளையும் வைத்துக்கொண்டு

அவர் தன் வெண்கொற்றக்குடையை

சுழற்றிக்கொள்வதில்

யாருக்கும் பொருட்டில்லை..

இசை ஞானி என்பதே 

அதிகப்படியானது தான்.

அதற்கு மேல் வேண்டுமென்றால்

இமய உச்சிக்கு போய் அவர்

உட்கார்ந்து கொள்ளலாம்.

பாராட்டுக்கவிதையாக‌

எழுதவேண்டும் என்றால் 

அவர் இமய உச்சி சென்றால்

இமயம் கீழே அல்லவா ஒரு

கூழாங்கல்லாய் கிடக்கும்

என்று தான் எழுதவேண்டும்.

அவர் உயரம் அப்படிப்பட்டது!


_______________________________________________









பாலம்

 என்னமோ 

எல்லாத்தையும் தலைகீழா புரட்டிடும்னு

ஒரு மாயைலே இருக்கீங்க.

குஜராத்துல ஒரு பாலம் அறுந்து விழுந்து

நெறையப் பேர் செத்தாங்க.

ஜே ஜேன்னு ஜெயிச்சு வந்துட்டாங்க.

என்னமோ 

எல்லாத்தையும் தலைகீழா புரட்டிடும்னு

ஒரு மாயைலே இருக்கீங்க.

குஜராத்துல ஒரு பாலம் அறுந்து விழுந்து

நெறையப் பேர் செத்தாங்க.

ஜே ஜேன்னு ஜெயிச்சு வந்துட்டாங்க.

கர்நாடகால‌

இங்கே என்னமோ ரோடு பாலம்லாம்

ஒடஞ்சு போச்சுங்கிறீங்க.

அங்க பாருங்க ஒரு பெரிய லிங்கத்தை

தூக்கிகிட்டு கதாநாயன் கட் அவுட்டுலே

கர்ச்சிச்சுக்கிட்டு நிக்கிறான்.

ஆவேசமான சனாதனம்

எல்லா ஓட்டுகளயும் முழுங்கிப்போடும்.

மக்களின் கபாலங்கள்ள கதவு அடச்சே 

கெடக்கிறதாலயும்

கரன்சிகளின் சொர்க்கவாசல்  ஆன்னு வாய் பிளந்து

கெடக்கிறதாலயும்

எல்லா சிந்தனைகளையும் அது லபக்குன்னு

முழுங்கிடுமே.

எதுத்து ஜெயிச்சாலும்

குதிரை வியாபாரத்து மகசூல்ல‌

அதே கொடி தான் பறக்கும்.


_____________________________________________________

இங்கே என்னமோ ரோடு பாலம்லாம்

ஒடஞ்சு போச்சுங்கிறீங்க.

அங்க பாருங்க ஒரு பெரிய லிங்கத்தை

தூக்கிகிட்டு கதாநாயன் கட் அவுட்டுலே

கர்ச்சிச்சுக்கிட்டு நிக்கிறான்.

ஆவேசமான சனாதனம்

எல்லா ஓட்டுகளயும் முழுங்கிப்போடும்.

மக்களின் கபாலங்கள்ள கதவு அடச்சே 

கெடக்கிறதாலயும்

கரன்சிகளின் சொர்க்கவாசல்  ஆன்னு வாய் பிளந்து

கெடக்கிறதாலயும்

எல்லா சிந்தனைகளையும் அது லபக்குன்னு

முழுங்கிடுமே.

எதுத்து ஜெயிச்சாலும்

குதிரை வியாபாரத்து மகசூல்ல‌

அதே கொடி தான் பறக்கும்.


wreck.

 

ship wrecked 

in the midst of angry waves

that is but an anology

the brutal number rolls and rolls

and takes the draconian reign.

the rightful anchor lies so deep.

the franchise bleeds with all 

trusted creeds called the

mooring of promises for

safe and secure aspirations of people...

the big word and the great phrase

of all holy verbose is

the constitution that pours

blood and sap for our "Democracy".

2024 is a killing meteor felling our

established homes of freedom at parlour.

the boggies of theocratic design and texture

with trembling notes of drums 

for furious on-slaught music of

butchery caste-divides with a

dictatorship...yes ..alas..

this peoples' ship is at wreck.

_____________________________

ruthraa








வெள்ளி, 17 மார்ச், 2023

முதல்...

   


முதல்...

_____________________________________‍

பரமண்டலத்தான்.




தண்டனையை முதலில் 

செய்து விட்டு

அதிலிருந்தே 

ஒரு முகம் செருகிக்கொண்டு

தரிசனம் தருபவர் தான்

நமக்கு கடவுள்.

ஒரு பக்தன் அப்பாவியாய்க்

கேட்டுவிட்டான்.

மனிதன் தான் பாவத்தின் வாசல்

என்று தண்டனைகளையும் 

கூடவே படைத்து விட்டீர்கள்.

அப்படியென்றால்

மனிதனைப்படைத்தது தானே

முதல் பாவம்.

அதற்கு யார் தண்டனை தருவது?

நீ கடவுள் விசுவாசி அல்ல.

அந்தப்பாவத்திற்கு

நீ மீண்டும் 

மண் ஆகக்கடவது என்றார்.

அவன் கேட்டது பாவமா? அறிவா?

மனிதனின் கேள்வியே

சைத்தான் அல்லது கடவுள் உருவில்

முளைத்த முதல் ஆதிக்கத்தின்

சவப்பெட்டிக்கு அடிக்கப்படும்

முதல் ஆணி.


____________________________________________________

எங்கிருந்தோ ஒரு குரல்.

 

 எங்கிருந்தோ ஒரு குரல்.

___________________________________________

"மூளி வர்மன்"



என்னை இது?

இந்த உன் முனை மழுங்கிப்போன‌

காகித அம்புகளா

அந்த சூரியனிடம் முள் தைக்கும்.

பரவாயில்லை.

எங்கோ எவனோ சொல்லியிருக்கிறான்

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு

என்று.

அது போதி மரத்தடிக்குரல் அல்ல.

ஏதோ ஒரு வியாபாரப்போதை மரத்துக்

குரல் அது.

ஒரு புகழ்ப்போதை

இப்போது

உன் பேனாவையும் காகிதத்தையும்

புண்படுத்தியிருக்கிறது.

உன் காயத்துக்கு நீ

என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.

ஆறாத புண்ணை எல்லாம் ஆற்றும்

"ஆறுமுகக்"களிம்பு தானே

உன் கவிதை.

உன் நோய் உனக்கு.

உன் களிம்பு உனக்கு.

அது களிம்பு அல்ல களிப்பு.

"இடைப்போலி" என்று

ஒரு இலக்கணக்குறிப்பு எழுதிக்கொள்

அதையும் ஒரு கவிதையாய்.


____________________________________________________

இனி நான் ருத்ரா இல்லை.

வாட்டர் கலர்

 

ஜுகல் சர்க்கார் அவர்களின் வாட்டர்கலர் ஓவியம்.

1 நபர் இன் ஓவியமாக இருக்கக்கூடும்


வாட்டர் கலர் என்றால்

அந்த விழியோரத்தில் கசியும் 

ஈரமே போதுமே

பெண்மைக்காடு ஓவியமாய்

உயிர்மை சொட்டி நிற்க!

___________________________________

ருத்ரா

அதே "ருத்ரா"தான்.




புலம்பல்களிலே

இலக்கியம் வாய்ந்த புலம்பல் 

இது தான்.

சும்மாச்சுக்கும் கூட‌

ஒரு விருது என்று லேபிள் ஒட்டி

அய்யோ பாவம் என்று

கொடுத்து விடுவார்கள்.

புலம்பல் இது தான்.

இலக்கியம் சொட்ட சொட்ட
 
என் ஆழத்திலிருந்து

கசக்கிப்பிழிந்து போட்ட வரிகள் இவை.

அதற்கு கிடைத்தவையோ

"ஒன்று இரண்டு"பார்வைகளே.

அல்லது 

அதுவும் இல்லாமல் மூளியாய்

என் "மின் திடல்" பாழ்பட்டு

கிடக்கும்.

உனக்கு என்ன பிரச்னை?

எங்கிருந்தோ ஒரு குரல்.

சொலூஷன் இது தான்.

அந்த விரல்களை

அந்த விசைப்பலகையை

முறித்துப்போடு.

அந்த மின் தகன மேடையின்
 
மிச்ச சாம்பல் பூக்களாய்

எழுத்துக்கள் எரிகின்றன.

இன்னும் எரிகின்றன.

_________________________________________
அதே "ருத்ரா"தான்.

நாட்டு நாட்டு

 


நாட்டு நாட்டு

______________________________________

ருத்ரா




தெலுங்குப்பட பாடலுக்கு

இசையமைப்பாளர் நம்

மரகதமணி என்ற கீரவாணிக்கு

"ஆஸ்கார்"விருது கிடைத்திருப்பது

நம்மையெல்லாம் மகிழ்ச்சியில்

புல்லரிக்க வைத்திருக்கிறது.

நடை நட நாட்டியம் என்ற‌

நம் சொல்

தெலுங்குக்குள் புகுந்து கொண்டு

இப்படி ஆட்டு ஆட்டு என்று

ஹாலிவுட் காரர்களையும்

அசத்தியிருப்பது நமக்கும் பெருமை.

ஊட்டி முனையில் அந்த‌

ஆனைக்குட்டி உணர்ச்சி பிழிய‌

நம் தமிழ்ப்பாசத்தை காட்டியிருப்பதற்கும்

ஆஸ்கார் கிடைத்திருக்கிறது

என்பதும் நமக்கு மிகப்பெருமையே.

ஆர் ஆர் ஆர் என்ற மகத்தான‌

படத்தை எடுத்த ராஜமவுலி

ஹாலிவுட்டின் ஸ்பீல்பெர்க் கேமரூன்

போன்ற இயக்குநர்களையே

வியக்க வைத்திருக்கிறார்

என்பதும் நமக்குப்பெருமையே.

காவிரிக்காக இன்னும் நம்மோடு

பங்காளிச்சகோதரன் எனும் 

உராய்வுகளோடு இருந்த போதும்

நம் தமிழின் தொப்பூள்கொடி மிச்சம்

இன்னும் 

அங்கு பொலிவு காட்டிக்கொண்டிருப்பது

நம் இருவருக்கு மட்டுமே தெரியும்.

ராஜமவுலி எனும் திரைச்சிகரமே

ஆர் ஆர் ஆர் ஐ தொடர்ந்து

ஒரு ஆர் எஸ் எஸ் ஐ 

அந்த கிராஃபிக் பிரம்மாண்டத்தில்

தூக்கி நிறுத்தப்போவதாய்

தகவல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.

சிங்கமும் புலியும் கரடியும்

இன்னும் மலையளவு லிங்கங்களும்

அம்புலிமாமாக்கதையாய்

ஹாலிவுட் ஃபென்டாசிகளில்

உங்களால் காமிராவுள் நிழல்கள் காட்டும்

என்பதில் ஐயமே இல்லை.

ஆனால் மானிட அறத்தை 

மனித சமநீதியை ஒரு

படுக்குழிக்குள் வீழ்த்தும் ஆபத்தை

உங்கள் லேசர் பிழியல்களில்

மறைத்துக்கொண்டு 

ஒரு பழமை வாதத்தை

பிம்பம் காட்ட மாட்டீர்கள் என்று

உறுதியாய் நம்புகிறோம்.

காப்பாற்றுவீர்களா அதை

எங்கள் கண்ணியம் மிக்க கலைச்சிற்பியே!


________________________________________________‍


அகழ்நானூறு 31

 அகழ்நானூறு 31

___________________________________________

சொற்கீரன்.




தோகை அலையென திங்கள் மறைக்க‌

அவன் வரூஉம் தடமும் தோன்றாக்கொடும் ஊழ்

கலுழக்கண் அழிந்து பொம்மல் ஓதியும்

நனி நலிவுறவே வாங்கமை பூஞ்சினை 

அயரும் தும்பியும் அதிர் யாழ் முரல‌

அதிரக்கேட்ட கணைக்கால் திண்கேழ்

தமியன் ஆறு செலவின்  பொருள்ஈட்டு

வேட்கை துறப்பவும் அல்லானாகி

கொடுங்கை யாளி கொல்வரிச் சுவட்டின்

பற்றிச் சென்றும் சுரம் படர்ந்தனன்.

அவள் எல்வளை இறைமுனை இற‌ங்கிடும் முன்னே

வேட்டுவன வேட்டபின் விரை பரியும் மன்னே.


_____________________________________________________________




வியாழன், 16 மார்ச், 2023

ஈசல்கள்

 


ஈசல்கள்

_______________________________________

ருத்ரா



பீதிஅடைந்த 

மக்கள் கூட்டம்

என்று பொருள் படும் 

ஒரு இந்திப்படம் 

வர இருக்கிறது.

அன்பான மக்களே

உங்கள் மொழி எனும் 

அசிங்கமான ஆடைகளையெல்லாம்

களைந்து எறிந்துவிட்டு

நம் இந்தியாவின் நிர்வாணத்தை

தரிசியுங்கள்.

ஆட்கொல்லி வைரஸ் ஒன்றுக்குள்

அடைபட்டுப்போன நம் 

பிரமாண்ட ஜனநாயகம்

மிரண்டு போன பூனைக்குட்டிகளின்

கூட்டமாக 

பரிணாமம் அடைந்த இந்த அவலம்

ஒரு படமா? பாடமா?

நம் கடவுள்கள் நம் ஸ்லோகங்கள் எல்லாம்

எங்கோ பொய்மைச்சேற்றில்

மரவட்டைகளாய் சுருண்டு கிடக்க‌

பயமும் பீதியுமே

நம் பொருளாதாரத்தின் மூலதனமும் சந்தையுமாய்

கோர முகம் காட்டுவதை

புரிந்து கொள்ளும் கூர்மை

இங்கே வெளிச்சத்தை கருதரிக்கும் முன்

அந்த வைரஸ்கள் 

சுருட்டும் துணிமூட்டைக்குள்ளும்

அதன் மின் தகன மேடைத் 

தீக்கொளுந்துகளிலும்

அழிந்தே போகும் கொடூரம்

நம்மால் தாங்கிக்கொள்ள இயலாததாய்

இருந்தது.

மக்களே 

உங்களுக்கு சராசரியான ஒரு

சிறு அரசியல் கூட 

தெளிவு பெறவில்லையென்றால்

பயம் பீதி கலவரம்

இவை மட்டுமே

கொடியேந்தி கோலோச்சிக்கொண்டிருக்கும்.

விழிப்புணர்வு மட்டுமே

நமது முதல் தடுப்பூசி


___________________________________________________________________






நீலாம்பரி

 அரசியல் விழிப்புணர்ச்சின்னு அகலமா நீளமா ஆழமா பேசிட்டு இருக்கோம்.இது சட்டென்று மைல்கல்லுகள‌ புடுங்கிப்போட்டுட்டு பாதையவே மாத்துற சமாச்சாரம்.நம்ம கலாச்சாரம் அப்டி இப்டின்னு ஆயிரம் ரெண்டாயிரம் சாதிகள வச்சுக்கிட்டு வலிமையற்றவர்களை வலிமை உடையவர்கள் அடக்கி ஆண்டு மிதிச்சு நசுக்கி கூழாக்கிக்கிட்டு இருக்கிறோம்.ஆணுக்கு பெண் சமம்னு பேசி பேசி வாய்ச்சவடால்தான் வுடுறோம். இன்னும் ஒரு பெண் தனியா போறத்துக்கு பாதுக்காப்பான ரோடு இன்னும் போடமுடியல.காந்தி அடிகள்கனவு இன்னும் அச்சடித்த புத்தகங்களில் மட்டுமே இருக்கு.அது சரி.இப்போது எதுக்கு பொலம்புரீங்கன்னு கேக்கரீங்களா? எல்லாம் வர்ர 2024 நெனச்சு தான்.எப்படி வச்சாலும் நிமிந்து நிக்கிற தஞ்சாவூர் பொம்மையாட்டமால்ல இருக்கு நம்ம தேர்தல் விளையாட்டு.இருக்கிற எல்லா மர மட்டைகளும் புழு பூச்சிகளும் கும்பாபிசேகங்கள்ளேயும் கும்பமேளாக்கள்ளேயும் தானே கவிந்து கிடக்குதுக.வேதாளம் எப்போதுமே சாதி சமய முருங்கமரத்திலெ ஏறி மக்களோட முதுகுல தானே சவாரிசெய்யுது.நாமளே சொல்லிகிட்டு இருக்கிற‌நம்ம கடேசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் அதோ எங்கோ ஒரு தெருக்கோடியிலே தான் இருக்கு. இன்னும் நூறாண்டு எங்க ராமராஜ்யம்னு தான் சொல்லிகிட்டு இருக்காங்க.யாருக்கோ சில பேருக்கு மொகம் துடைக்கிற‌கர்ச்சீஃபாத்தான் நம்ம பொருளாதாரம் இருக்கு.ஒலக நாடுகளும் அவங்க அவங்க வியாபாரத்துக்கு இந்த நாடு சந்தைத்திடல் ஆனால் மட்டுமே போதும்னு நெனைக்கிறாங்க.உலக மானிடவியல் மேம்பாடு மற்றும் மனித உரிமை கோரிக்கைகள் ரொம்பிக்கிடக்கும் குப்பைக்கூடைகளுக்கு ஐ நா வில் இட நெருக்கடியாம். என்ன செய்யபோகிறோம்?

மயக்கமா? கலக்கமா? பாட்டை அழுகையின் ஏதொ ஒரு பிரம்ம ராகத்தில் ஆனந்தமாய் கேட்டுக்கொண்டிருப்போம்.ராகத்தை நீலாம்பரி என்போம்.புரியாததை எப்படி அழைத்தால் என்ன?


__________________________________________________________________________

ஒரு வாக்காளன்

 







_____________________________________________________

காகிதமும் பேனாவும்




கையில் காகிதமும் பேனாவும்

இருக்கவேண்டும் என்று 

தேவையில்லை.

"ம்" என்று வானத்தை 

பார்த்தாலே போதும்.

கவிதை வந்து விழுந்ததும் 

சொன்னது

உன் பெயர் தான் 

"மனுஷ்ய புத்திரனா?"

என்று நான் கேட்கவே இல்லையே.


_________________________________________________

ருத்ரா

கடவுளே

 கடவுளே

கொஞ்சம் கீழே இறங்கி வந்து

இந்த தராசு தட்டுகளை சோதியுங்கள்.

உங்களுக்கு கூட 

அந்த தட்டுகளின் அடியில் 

ஏதேனும் ஒன்றில்

புளியை ஒட்டி வைத்து

நியாயம் சொல்வார்கள்

இந்த வியாபாரிகள்.

பூஜை புனஸ்காரங்களுக்கு அடியில்

நசுங்கிக்கிடக்கும்

கடவுளர்களே

உங்களை நீங்கள் 

காப்பாற்றிக்கொள்வதெப்போ?


___________________________________________

ருத்ரா


குருகு

 குருகு 

----------------------------------------------------------------------------


கம்பியூட்டர் ஓவியம் ...ருத்ரா ...ஆகஸ்ட் 1996   ப்ரையார் ஒக்லஹாமா. யு எஸ் ஏ


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.





வெண் குருகே 
நீ விரிக்கும் சிறகில் எல்லாம் 
என் சிந்தனை தான்.

நீ நீருக்குள் முங்கி முங்கி 
எழுந்து 
உன் அலகை 
சிலிர்த்துக்கொள்ளும்போதெல்லாம் 
இந்த உலகத்தின் 
மொத்த மௌனமும் 
உதிர்ந்து போகிறது.
பிரம்மம் 
அந்த மீன்களா?
நீயா?

வேதங்களின் வெறுந்தூண்டிலில் 
சுலோகங்கங்கள் 
சொருகிக்கிடந்த போதும் 
பிரம்ம மீன் சிக்குவதே இல்லை.
உன்னிடம் 
சிக்கலாம் என்று 
"ஹம்ஸோபனிஷத்" எல்லாம் 
சொல்லிப்பார்த்தார்கள்.
அப்புறம்...?

( தொடரும்)

------------------------------------------------------------------------------------------------
ருத்ரா 

புதன், 15 மார்ச், 2023

"மாக்சிம் கார்க்கி"

 பாட்டாளி வர்க்கம் 

சமுதாயக்கொடுமைகளை

துப்பாக்கிக்கொண்டு 

அழித்து எழுதிய‌

பக்கங்களில் 

சமுதாயத்தின் எழுச்சிபெற்ற‌

உயிர் எழுத்துக்களைத்தூவி

நாவல் மழை பெய்து

மண் எனும் அன்னையின்

அன்பின் சிகரத்துக்கு

மணி மகுடம் சூட்டியவர்.

நாவலா அது?

மக்களின் ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்

துடிப்புகளின்

அலைப்பிழம்பு அல்லவா அது!

வாழ்க என்றும்

இந்த வையத்தில் எங்கும்

நம் "மாக்சிம் கார்க்கி"


__________________________________________________

ருத்ரா




அகழ்நானூறு 30.

எயினந்தை மகனார் இளங்கீரனார் அகநானூறு பாடல் 399ல் கீழ்க்கண்ட வரிகளை எழுதியுள்ளார்.

நெல்லிக்காய்கள் கொத்து கொத்தாக பளிங்கு போல் காய்த்து இருக்கும் அழகை வெகு அழகுடன் காட்டியிருக்கிறார். அந்த கற்பனைத்தடத்தில் நான் எழுதியதே இந்த அகழ்நானூறு 30.



அகழ்நானூறு 30.

----------------------------------------------------------------------------------------

சொற்கீரன்



"மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்

பல் கோள் நெல்லிப் பைங் காய்"

உதிர்தரு கான் அவன் புகுதரு காலை

அவள் கிளர்மொழி ஆங்கு கிளராநின்று

அவன் பால் உரிக்கும் ஓர் அடு மைஊழே.

அற்றே அவனும் அவள் இறைவளை நோக்கி

படுமணி இரட்ட பாய் பரி தேரும்

கலிமா நுசுப்பு அசைக்கும் சிறு வண்டும்

உடைக்கண் வேய் அமை அறையும் புள்ளும்

அவனொடு ஆங்கு விரையும் அறிதி அறிதி!

பொருள்வயின் வேட்டலின் அவள் நீள்விழி ஆற்றின்

எதிர்வழி நீந்தலே சாலும் சாலும் மற்று என்

பொருள் மொழிக்காஞ்சி ஈண்டு இவண் ஓர்வது?



________________________________________________________________

செவ்வாய், 14 மார்ச், 2023

நான் யார்?


நான் யார்?

___________________________________________



நான் யார் என்று கேள்

என்றான் அவன்.

யாரிடம் என்று சொல்லமுடியவில்லை

அவனால்.

தன்மை

முன்னிலை 

படர்க்கை

இலக்கணங்களுக்குள்ளும்

ஒரு பாம்புப்படுக்கை போட்டுக்கொண்டு

படுத்துக்கொண்டுவிட்டான் அவன்.

நமக்கு படம் போட்டுக்காட்டுவதாய்

ஏதேதோ ஸ்லோகங்ககளின் சுருள்களை 

அடைத்துக்கொண்டு

அந்த ப்ரொஜெக்டரில்

"அவதாரம்"காட்டுகிறான்.

ஹாலிவுட் காரர்கள் காட்டும்

"அவதார் லேசர் பிழிசல்களில்"

வர்ணங்கள் உண்டு.

ஆனால் "வர்ணாசிரமங்கள்" இல்லை.

அந்த வெள்ளைக்காரர்களிடம்

விஞ்ஞானத்தின் பிரமிப்பு உண்டு.

இந்த வெள்ளைக்காரர்களிடம்

அஞ்ஞானத்தின் இருப்பு மட்டுமே

இன்னும் இன்னும் மிச்சம்.

பெரும்பான்மையான மக்களுக்கு

பக்தியின் பந்தி மட்டுமே உண்டு.

அடிமையாய் அழுந்தி இவர்கள்

அழிந்து போவதற்கு மட்டுமே 

இவர்களுக்கு எல்லாம்

பரிமாறுவதாய் 

பாசாங்கு காட்டுகிறார்கள்.

அவர்களின் "மார்பில் குறுக்காய்" ஓடும்

அந்த பூமத்தியரேகையில்

ஒரு நாள் 

இவர்களின் எரிமலை ஸ்பரிசத்தால்

அந்த அழுக்குகள் எல்லாம் எரிந்தே போகும்.

__________________________________________________

ருத்ரா 

திங்கள், 13 மார்ச், 2023

புயல்.

 


Bright eye makeup looks







































இது துயில் அல்ல.
எனக்குத் தெரியும் 
இது புயல்.
இது அவள் காதலின் பிரளயம்.
கடல்களுக்கே 
வயிற்றைக்கலக்கும்
இன்ப அதிர்வுகளின்
புழுக்கூடு.
அமைதியாய் இமைகளின்
இலைக்கவிப்பில்
கிழித்துக்கொண்டு
சிறகு விரிக்கப்போகும்
ஒரு சுநாமியின் பட்டாம்பூச்சி.
காதலே வா!
சிறகுகளை படபடத்து வா!
இமை விளிம்பின் மயிர்க்கால்களில்
ஒதுங்கத்துடிக்கும்
காதல் தவிப்பின் 
வண்ணக்குழம்பு...
ஒரு கோப்பையில் கற்பனையாக‌
ஏந்தி நிற்கிறது
உயிரே இல்லாத கவிதைகளின் 
உயிர் எழுத்துக்கள்.

____________________________________________________________
ருத்ரா

----------------------------------------------------------------------------------------------
Thanks for this source:








சனி, 11 மார்ச், 2023

பிஞ்சிலே பழுத்த பிரபஞ்சம்

 

(26) Worlds Smartest Kid Just Revealed CERN Just Opened A Portal To Another Dimension - YouTube



பிஞ்சிலே பழுத்த பிரபஞ்சம்

________________________________________


ஆம் 

ஒரு பள்ளிச்சிறுவன்

"மேக்ஸ் லாஃப்லின்"

தன் முதிர்ந்த விஞ்ஞான அறிவின் 

ஒளியால்

"மண்டேலா விளைவு"

எனும் அந்த‌

உளவியல் பொய்மை மெய்மை

நினைப்புகள் போல்

ஒரு "உருவெளி மயக்க"ப்பாதையை

கண்டு பிடித்திருக்கிறது.

குவாண்டமே அப்படியொரு

பொய்மெய்மையை

கணிதப்படுத்தி விட்டது.

இந்த சிறுவயது மேதையும்

அணு உலைக்குள் (செர்ன்)

அந்த குளுவான் எனும் 

வெகு நுண் ஆற்றல்துகள்

"ஐந்தொகையான்"கள் 

(பென்டா குவார்க்)

ஆகியிருப்பதை கண்டுபிடித்துவிடும்

நிலைக்கு முன்னேறி உள்ளான்.

அணு உலைக்குள்ளிருந்து

"புழுத்துளை"ப்பாதைக்கு

தண்டவாளங்கள் போட்டு விடுவான் 

போலிருக்கிறது.

இந்த பிரபஞ்சம் "எல்லையற்ற கொத்துக்களாய்"

தனக்குத்தானே முகம் பார்த்துக்கொள்ளும்

கோடி கோடி பிம்பங்களாய்

இருப்பதாகவும் 

ஒரு புதிர் இங்கே

விரிவு பெற்று பேசப்பட்டு வருகிறது.

பிரபஞ்ச‌த்தின் 

95 சதவீதம் வரை

இருட்பிண்டமும்

இருள்மை ஆற்றலுமாய்த் தான்

இருக்கிறது

என்னும் உண்மை

அந்த அணு உலைக்குகையில்

சுடர்க்கதிர் வீச்சுகளை

நம் கண் மறைத்து விண் மறைத்து

மாயம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் 

இது அறிவியலின் மாயம்.

குவாண்டம் என்பது

கல்கியின் "பொய்மான் கரடு"போல்

கரடி விடுவதாக தெரிந்தாலும்

"ஸ்க்ரோடிங்கரின்"

இரட்டைநிலைப் பூனையாக‌

மியாவ் மியாவ் என்று

விஞ்ஞான விந்தையை

எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.


_____________________________________________________

ருத்ரா இ பரமசிவன்.

அகழ்நானூறு 29

 அகழ்நானூறு 29

____________________________________________

சொற்கீரன்.




நெடும் பழன வழியிடை வள்ளுகிர் யாமை

பொறிக்கண் விதிர்ப்ப கொடிவிடு கல்லிற்

பரற்கண் போகி பெண்ணை அந்தூறு

அண்ணிய நுங்கின் கிளர்கண் கசியும்

கள்ளினை பகுவாய் நிறைப்ப மாந்தி

ஓர விழித்து சில் அசைகூர் சிறுதேர் அன்ன‌

செல் இயல் கண்டும் கரும்பமல் படப்பை

பாசடர் தோகையின் இடை இடை அகவும்

அவள் ஒலி ஆங்கு அஞ்சிறைத்துடியென 

முரல்வதும் கூர்விழி பொறிமா திரிமருப்பு

அவனுள் சுருள்போழ் செய்யலும் ஒல்லாதானாய்

சுரம் நீடு தோற்றும் நிழல் ஆறு நெளிய‌

வான்சுடர் திசையொடு திரிதரும் நெருஞ்சி

அன்ன அவளும் அவன் அலை வன்காழ் 

நெடுஞ்சுரம் முகத்தவள் புதைபடு துயிலும்.

இமைசேரா முள்விழிக்காட்டில் சேக்கை இடறி

துயர் அழல் வீழ்ந்து வேகுவள் நோகுவள்

காட்சியும் அவனை தீயூழிப்படுத்தும்.

வையை ஆற்றின் காஞ்சி நீழல் அவள்

குரவை அயரும் காட்சிமுன் கைக்கொள‌

காற்றையும் பெயர்த்து காற்றுமுன் சென்றான்.


_______________________________________________________



வெள்ளி, 10 மார்ச், 2023

ஷார்ட் ஃபில்ம்

 

ஷார்ட் ஃபில்ம்

________________________________________

ருத்ரா.



இருட்டையும் கூட 

இலக்கியம் ஆக்கி விட‌

முடியுமா?

அப்படித்தான்

அந்த ரெண்டா கால் நிமிட‌

ஆங்கிலத் துண்டுப்படம் பார்த்தேன்.

ஆனால்

இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்

இருட்டைப்பூசிக்கொண்டு

ஒலி இசை அதிர்ந்தது.

பிறகு 

புள்ளி பூஜ்யம் பூஜ்யம்..

செகண்டுக்கு

ஒரு ஒளிக்கீற்று.

அவ்வளவு தான் 

படம் முடிந்து

வரிசை வரிசையாய்

எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன‌

ஐந்தாறு நிமிடங்களாய்.

அது என்ன தலைப்பு...

மறந்து விட்டதே...

மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.

"தேடு"

எதை என்று தான் போடவில்லை.

இருட்டையா?

வெளிச்சத்தையா?

ஒரு ஆழமான ஆழமாகிய 

எனக்குள்

அந்த நங்கூரத்தை

வீசி எறிந்தார்களே!

அது ஒரு

பில்லியன் டாலர் இலக்கியம் தான்.


_____________________________________________________


வியாழன், 9 மார்ச், 2023

அகழ்நானூறு 28



அகழ்நானூறு 28

___________________________________________

சொற்கீரன்.


பனைமருள் எருத்தின் பல்வரி இரும்புலி

நனைந்தலைக் கானத்துக் கடமா தொலைச்சிய‌

செங்குருதி மன்றில் சூர்நிழல் தூஉய்

துன்னிய வெஞ்சுரம் அஞ்சாது ஆர்த்து

பெருகல் பல கல் அத்தம் கவலைய‌

ஆறுகள் நீந்தி பொருள்வயின் செலவின்

அன்ன அஃது அன்று ஈது கொல் அமர் கங்குல்

எல் ஊர் எறிந்து ஆநிரை கவரும் 

அடல் அம்பு மழையின் ஊடும் ஊர்ந்து

நின் நீள் இரவு தோற்றும் நகை நறவு முகைக்கும்

நின் பூவின் பொறிபடு சுணங்கிற்கும் தப்பாது.

நெறிஅவிழ் வழியின் பிழைத்த கலிமா

குறிஅற்று பலவாய் குன்றுகள் இடறும்

வெள்ளிய முளைத்த குணக்கீற்று ஒளியின்

விளிம்புப் போழ்தின் நடுந‌னி வீழ்ந்து 

நின் முறுவல் குறியே எய்துவன் என்னே.


____________________________________________________







டைம் ட்ராவல்

 அவனுக்கு ஒரு குழந்தை

பிறந்தது.

அவனை பேராண்டி என்று

கூப்பிட்டது.


டைம் ட்ராவல்

_______________________________

ருத்ரா

அகழ்நானூறு 27

 அகநானூறு 244

மதுரை மள்ளனார்.

முல்லை

வினைமுற்றிய தலைமகன் 

தேர்ப்பாகற்கு சொல்லியது.


தலைவன் வினைமுடித்து இல்லம் திரும்பும் ஒரு வவ்வால்காடு.அது பற்றி அவர் குறிப்பிடும் உவமை வரிகளும் அழகு மிக்க சொல்லாடல்களும் மிக அருமை.சங்கப்புலவர் மதுரை மள்ளனார் அந்த அடர்ந்த காட்டில்  மிக உயர்ந்த மரங்களின்  நீர்ப்பசை ஈரத்தால் பசுமையை ஒட்டிவைத்தாற் போன்றும் கிளைகளில் நெய்த‌டவியதைப்போன்றும் அந்த சூரியவெளியில் அவை மினு மினுத்து வவ்வால்கள் கூட்டமாய் அப்பிக்கொண்டதை மிகவும் அழகாய் கீழ்க்கண்ட வரிகளில் எழுதுகிறார்.


"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"


இந்த வரிகளை என் அகழ்நானூறு 27 ல் அப்படியே தொடக்கவரிகளாய் தைத்து நெய்துள்ளேன்.....சொற்கீரன்


அகழ்நானூறு 27

_____________________________________________

சொற்கீரன்.


"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"

கல்லெறிந்தாற் போல் காரின் குழைதரு

மஞ்சு இனமென வான் திரை கிழிக்கும்

சூர்கலி கொல் இருள் அஞ்சுரம் ஆரும்

அகலம் கிளர்தர ஆற்றுப்படூஉம் 

அடுபோர் மள்ளன் என்னாது என்னை

இமைச்சிறை பூட்டி விழிக்குள் வீழ்த்தும்

அன்னவள் கண்சுரம் ஆற்றுப்படையின்

தண்ணிய நிழலிய நீளிடை புகுவன்

விரைதி விரைதி கொய்சுவற்புரவியின்

கொள்மொழி பேசு கதழ்பரி அஃதின்

பூங்குழியும் ஈண்டு புயல் கரு பூக்க‌

நின் கால்விரல் எழுதி காலும் வெரூஉம்

கடுவிசை ஓம்பு காலம் ஈண்டு

பெருங்கல் மறிக்கும் வழியினை உடைப்பாய்

அவள் சில்பூ விழி இங்கு சீர்த்தவிடத்து.


________________________________________________________





அகழ்நானூறு 27


அகழ்நானூறு 27

_____________________________________________

சொற்கீரன்.


பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை

கல்லெறிந்தாற் போல் காரின் குழைதரு

மஞ்சு இனமென வான் திரை கிழிக்கும்

சூர்கலி கொல் இருள் அஞ்சுரம் ஆரும்

அகலம் கிளர்தர ஆற்றுப்படூஉம் 

அடுபோர் மள்ளன் என்னாது என்னை

இமைச்சிறை பூட்டி விழிக்குள் வீழ்த்தும்

அன்னவள் கண்சுரம் ஆற்றுப்படையின்

தண்ணிய நிழலிய நீளிடை புகுவன்

விரைதி விரைதி கொய்சுவற்புரவியின்

கொள்மொழி பேசு கதழ்பரி அஃதின்

பூங்குழியும் ஈண்டு புயல் கரு பூக்க‌

நின் கால்விரல் எழுதி காலும் வெரூஉம்

கடுவிசை ஓம்பு காலம் ஈண்டு

பெருங்கல் மறிக்கும் வழியினை உடைப்பாய்

அவள் சில்பூ விழி இங்கு சீர்த்தவிடத்து.


________________________________________________________






புதன், 8 மார்ச், 2023

உலக மகளிர் தினம்







நனவை தின்ற கனவு.

 

நனவை தின்ற கனவு.

_____________________________________________

ருத்ரா




வாழ்வது போல்

அல்லது

வாழ்ந்தது போல்

ஒன்றை வாழ்ந்து விட்டோம்.

மீதி?

முழுவதுமே மீதி.

தொடங்கவே இல்லை.

மூளைச்செதில்களில் மட்டும்

காலப்பரிமாணத்தின்

வேகம் கூட்டி...

வேகம் என்றால்

சாதாரண வேகம் இல்லை

சூப்பர் லுமினஸ்...

ஒளியை விட கோடி மடங்கு கூட‌

இருக்கலாம்.

இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய‌

இன்னொரு அடுக்கில்

நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய்.

இன்னும் சில பத்து ஆண்டுகளில்

புதிதாக பிரபஞ்சப்பூக்களை

உன் கோட் பித்தான் துளைகளில் கூட‌

பதியம் போட்டுக்கொள்வாய்.

உளுத்துப்போன புராணங்களில்

வெர்ச்சுவல் காஸ்மாலஜி மாடல்கள்

குமிழி இட்டுக்கொண்டே இருக்கலாம்.

மனிதம் மீறிய‌

பில்லியன் பில்லியன் சிந்தனை சிப்பங்களும்

அறிவியல் மூளை மடிப்புகளும்

உன் எண்ண அசைவுகளிலேயே

இயக்கம் பெறுவதாக இருக்கலாம்..

என்ன இது?

சூரியனின் ஒரு பகுதி பிய்ந்து

விட்டதாமே.

ஜேம்ஸ்வெப் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

உன் சன்னல்களில் அது

நுழைகி....றது...

சைஃபை மூவியால் இந்த‌

ஹேலுசினேஷன்...

அவன் ரத்தவெள்ளத்தில்.

டாக்டர் சுருக்கமாய் சொல்லிவிட்டார்.

செரெபெரல் ஹேமரேஜ்.


________________________________________________________


செவ்வாய், 7 மார்ச், 2023

உலக மகளிர் தினம்



உலக மகளிர் தினம்

-----------------------------------------------------------------------------




பெண்ணே!

உலக மகளிர் தினம் என்று

மலர்க்கிரீடம் சூட்டினோம்.

அந்த மலர்கள் சிரித்தன‌

அவள் வண்ணச்சீறடிகளே

உலகின் புகழ்பெற்ற பூங்காங்கள்.

அவள் காலடிகளையா தலையில் சூடுவது?

அதில் ரோஜா எனும் 

ஒரு மலர் முள்ளை வைத்து

குத்திக்காட்டியது.

போதும்.

கவிதைகள் எனும் உங்கள் 

கள்ளின் குடங்களைக்கொட்டி கவிழ்த்தது?

இந்த சமுதாயம் சமூக அநீதிகளால்

புண்பட்டுக் கிடப்பது 

அறிவீர்களா?

புண்படுத்தியவர்களே

இப்படி 

புளகாங்கிதம் கொண்டு

அம்மன் அபிஷேகங்கள் நடத்தியது போதும்.

வளையல்கள் ஒலிப்பதற்கு மட்டும் அல்ல‌

இந்தக்கைகள்.

அறிவு ஆள்வதும் 

அகிலம் ஆள்வதும்

மகளிர் வழி பரிணாமங்களே

அறத்தொடு அரசியல் மலர்த்தும்!

வெல்லும் வெல்லும்.

பெண்ணே வாழ்க!

பெண்மையே வெல்க!

__________________________________________‍

ருத்ரா

பனி பெய்த நீரில்




டெல்லி தெருக்கள் 

----------------------------------------------


விளக்குக் கம்பங்கள் ஒளியில்

பல் தேய்த்து வாய் கொப்புளிக்கின்றன‌

பனி பெய்த நீரில்.

_______________________________________

ருத்ரா

திங்கள், 6 மார்ச், 2023

அகழ் நானூறு 26

 அகழ் நானூறு 26

---------------------------------------------------------

சொற்கீரன்.



குணகடல் முகந்த கொள்ளை வானம்  

கமஞ்சூல் குடித்த எழுகடல் வெள்ளம் 

கயிற்றின் இறங்கி அடர்மழை என்ன 

கல்லும் மண்ணும் வேழ மண்டை 

முதிர் மன்றும் அறைந்து ஆற்றிய 

வழிப்படூஉம் சினையுறு அருங்கேழ் 

அம்மர நிரையும் சிதர் பட இறங்கும்.

பானாள் கங்குல் குறி எதிர்ந்து வரூஉம் 

நின் பணைத்தோள் மல்லன் மின் பரி 

ஆங்கு காலம் தாழ்த்து உரறு அதிர் குரல் 

இடித்தன்ன விரையும் விரையும் என்னே.

நின்  எயிற்று இணர் இன்பூச் சொரியும் 

நகை தோய இருட்சுரம் மீள்வன்.

பெருமலை மீமிசை முற்றின முடிச்சின் 

முகிழ் முக வெள்நள் திங்கள் முகைய 

நின் வாள் இலங்கு அருவி இன்பிழி இழியல் 

போதும் அஃதே செம்பொருள் கொள்வன்  என 

கோடாமை கோடமை கொடுங்கை பற்றி 

மீள் தரும் காலென நின் எதிர்ப்படும் மன்னே.


-----------------------------------------------------------------------------------------




அயோத்தி

 


அயோத்தி

_______________________________________

ருத்ரா




மனிதம் இல்லாத மதம்.

மதம் இல்லாத மனிதம்.

இந்த இருதுருவங்களுக்கு

இடையே

குழந்தையும் தெய்வமும் 

சின்ன செப்பு விளையாட்டு 

விளையாடிக்கொண்டிருக்கிறது.

பெயரில் என்ன இருக்கிறது.

அப்துல் மாலிக் என்பதில்

இந்தியாவின் இதய நரம்புகள்

ஒரு அம்மா ஒரு அப்பா ஒரு குழந்தையாக‌

பின்னிக்கொண்டு

அன்பின் பிரளயத்தை பதியமிடுகிறது.

குழந்தையின் பசியை ஒரு தாய்

வெறும் நசுங்கிய தட்டும் 

சில சோற்றுத்திரள்களுமாகவா

பார்க்கிறாள்?

அந்தக்குழந்தையும் அந்த‌

கவளத்தை 

ஒரு காமிராகோணம் கொண்டா

பதித்தீயின் சுவாலையை

லேசர் படுத்தி சீன் காட்டுகிறது?

இல்லை.இல்லை.

உணர்வுகள் உரிக்கும் உள்ளத்தின்

உள் பூஞ்சையான மெல்லிய நுங்கின்

கண் கசிந்த நீராய் வழிவதை

காட்டுகிறது.

வால்மீகியோ? துளசிதாஸரோ?

நிச்சயம் அந்த அயோத்தியை

ஒரு புல்டோசர் பட்டினமாகவா

வர்ணித்திருப்பார்?

மக்களை வருடும் அன்பின் பீலிகள் தானே

அயொத்தியின் நகரமெங்கும்

தூவிக்கிடப்பதாக 

ஓலைச்சுவடிகளில் அந்த‌

ஒலிச்சுவடுகளை பதித்திருப்பார்.

இருப்பினும் கடப்பாரைகளின்

தூசிப்படலம்

தமக்குள் பேசிக்கொன்டன.

வேடர்கள் வில் அம்பு தூக்கவில்லை.

சொல்லம்பு கொண்டு 

நம் மன சாட்சிகளை துளைத்திருக்கிறார்கள்.

இந்த அரசியல் வேடர்கள் ஏன்

கசாப்புக்கடைகளுக்கு 

பளிங்குத்தூன்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்?

அயோத்தி படம் 

இப்படி எதுவுமே நம் மனதைத்தைக்கும்

துரும்புகளை வீசவே இல்லை.

இருப்பினும் படம் முழுவதுமே

ஒரு "பீஷ்மர் அம்புப்படுக்கை"தான்.

குத்திகுத்தி இரத்தவிளாறுகளில்

கங்கையும் சில்லறை சில்லறையாய்

அழுது தீர்க்கிறாள்.

அந்த இஸ்லாமியப்பாத்திரம் முழுதும்

மனித அன்பியலின் 

இந்து மகா சமுத்திரம்

வழிய வழிய அலை விரிக்கிறது.

இயக்குநர் மந்திரமூர்த்தி

இந்திய மண்ணின் துடிப்புகளுக்கு

ஒரு துல்லியமான "ஸ்டெதெஸ்கோப்பை"

கையில் வைத்திருக்கிறார்.

அதன் பெயர் அயோத்தி.


_________________________________________________________



"பெரியாறு"

 

"பெரியாறு"

---------------------------------------------------------------------------


கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஈசல் குவியல்களின் 

வெளிச்சம் எங்கே இருக்கிறது?

சாங்கிய தத்துவம் சொன்னது

வரிசையின் 

ஆற்றுப்படை ஒழுகுகிறது என்று.

நியாய வைசேடிகம் கூட‌

ஒரு இயக்கத்தின் 

காரண காரியத்தை முடிச்சு போட்டது.

பூர்வமீமாசமும் உத்தர மீமாம்சமும் 

வாழ்க்கையின் அடி ஆழத்துக்குப்போய் 

ஏதோ உயர்ந்த "மாம்சத்தை"

காட்டுவதாய் பாவ்லா காட்டிவிட்டு 

பக்திக்கும் யாகத்துக்கும் 

சுலோகங்களை குவித்து விட்டு 

உட்கார்ந்து கொண்டு விட்டன.

இந்துத்தத்துவம்

மாயை எனும் மாஞ்சா தடவிய 

பட்டத்தை தான் 

பறக்க விட்டுக்கொண்டிருக்கிறது.

இன்னும் அந்த 

ஸ்க்ரோடிங்கர் பூனையைத்தான்

பிரம்மம் என்று பூச்சாண்டி காட்டுகிறது.

கேட்டால்

அவர்களின் அறிவு ஜீவிகள்

குவாண்டத்தையும் 

காவி பூசி சூலம் ஏந்த தயார் தான்.

அதே கோணத்தில்

பிரம்மத்தில் ஈ வே ரா தெரிய வேண்டுமே.

ஏன் தெரியவில்லை?

அவர் காட்டிய பிம்பமோ 

பிரம்மன் ரத்த சதையில் 

சமுதாயச் சம நீதி தொலைந்து போன 

படலம் தான்.

சாதி எனும் பீதிகளை ஏன்

மஞ்சள் குங்குமம் பூசி

மல்லாந்து கிடக்கிறீர்கள் என்று தானே 

பகுத்தறிவுக்  கதிர் வீசுகிறார்.

அப்போது அந்த நூல்வேலிக்காரர்கள்

அநாச்சாரம் என்று

சாதீய அக்கிரமமே பிரம்மம் 

என்று மந்திரம் ஓதுகின்றார்களே .

அந்த‌

சஹனாவவது சஹனோபுனஸ்து

சுகினோ பவந்து

எல்லாம் 

ஆத்மீகத்தையே

கசாப்பு செய்ய கிளம்பி விடுகின்றன.

ஆனால்

அறியாமையின் பிழம்புக்குள்

மூழ்கி முத்து எனும் 

அறிவு எடுப்பதே 

வெளிச்சத்தின் வேலை

என்கிறது நாத்திகம்.

இருட்டுப்புராணங்களில்

தடவி தடவி

எத்தனை நூற்றாண்டுகளைத்தான்

மூளியாக உருட்டித்தள்ளுவது?

மனித அன்பும் மலர்ச்சியும்

சம மனப்பான்மையில் 

கல்பொருது இரங்கும்

பஃறுளியாறாக அந்த 

"பெரியாறு"

முழங்கிப்பெருகுவது

இன்னுமா கேட்கவில்லை

நண்பர்களே?


_____________________________________________________________________

வியாழன், 2 மார்ச், 2023

அச்சமில்லை அச்சமில்லை

 


இன்று ஒருநாள்
சூரியன்
ஸிப்பை இழுத்து திறந்து விட்டது.
ஈ என்று
ஒரே இளிப்பு.
சுவர்க்கோழி கூட நட்பு தேடி
கிரிச் கிரிச் என்று
நச்சரிக்க ஆரம்பித்து விட்டது.
இரவு பகல் வேறுபாடு
அதற்குத் தேவையில்லை.
இங்கு
எதுவும்
எதற்காகவும்
தனித்துக்கிடப்பதில்லை.
எருக்கஞ்செடி கூட‌
காற்று அசைவில்
பக்கத்துச்செடியுடன்
தொட்டுப்பார்த்துக்கொள்கிறது.
மனிதர்களே! மனிதர்களே!
முகங்களில் சிரிப்பின்
பூங்காக்களை
பதியம் போட்டுக்கொண்டிருங்கள்.
இலைகளின் இடைவெளிகளில் எல்லாம்
நேற்று பின்னிய
மௌனப்பேச்சுகளை
இன்று தொடருங்கள்.
மறைத்து வைத்திருக்கும்
வில் அம்புகளையெல்லாம்
முறித்துப்போடுங்கள்.
கடவுள்கள் கையில்
அந்த அசிங்கங்களை ஏந்திக்கொண்டு
நாறிக்கொண்டிருக்கட்டும்.
அவற்றின் கைக்கூலிகள்
அவற்றிற்கு மஞ்சள் குங்குமம்
வைத்துக்கொண்டிருக்கட்டும்.
மனிதர்களே!மனிதர்களே!
அந்த மஞ்சக்குருவிகள் இரைச்சல்களை
மொழி பெயர்த்துக்கேளுங்கள்.
அதில் தான்
உங்கள் இருப்பியல் எனும்
எக்சிஸ்டென்ஷியலிசம்
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த சிதைகளின் புகை மூட்டங்கள்
சில்லரை சில்லரையாய்
நாட்களை
பண்டமாற்றம் செய்துகொண்டிருக்கட்டும்.
யாருக்கும் இங்கு
கவலை இல்லை.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே!

_________________________________________________________‍
ருத்ரா
குறைவாகக் காட்டு
2 பார்வையாளர்கள்