செவ்வாய், 4 அக்டோபர், 2016

சஹாரா அணில்கள்


சஹாரா அணில்கள்
====================================ருத்ரா இ.பரமசிவன்.

தாழ்வாரம் வெறுமையாய் கிடந்தது.
அது ரொம்ப நாட்களாகவே மூளியாகி விட்டது.
அணிலாடு முன்றில் போல‌
மௌனத்தின் கூரிய பற்கள்
கிரீச் கிரீச் என்று நான்கு வேதம்
சொல்லியது.
என் அப்பா வேதத்தைக் கனபாட்டம்
செய்யும்போது
அந்த தாழ்வாரம் தர்ப்பைப்புல் காடாகிவிடும்.
என் தாத்தா சொல்லுவார்.
பரத்வாஜர் முழங்கியதை எல்லாம் விடுடா!
அதோ அந்த அணில்
அடிவயிற்றிலிருந்து
வாய் வரைக்கும் அதிர்ந்து குலுங்கி
மொழியும் ஒலிக்குள்
புகுந்து பாரேன்.
யாரோ பெயர் கூட சொல்ல விரும்பாத‌
ஒரு புலவன் அந்த அணிற்குரலோடு
குழைந்து போய் ஓலை நறுக்கில்
தன் இ சி ஜி வரியை
விட்டு விட்டுப்போயிருக்கிறானே!
"அணிலாடு முன்றிலார்" என்று
செய்யுட்சொற்றொடரில்
தன் பெயரை பொன்னால்
பொறித்தது போல்
தன் அகம் காட்டி
தமிழ்ச்சுடர் காட்டிவிட்டானே!
அவன் எழுத்தின் கூர்மைக்கும் ஆழத்துக்கும்
உவமை சொல்ல‌
நாம் எந்த காளிதாசனைத்தேடுவது?
என்ன தேவபாஷையின் பெரிய வாத்தியார்
யாரோ ஒரு தமிழ்ப்புலவனின் பின்னால்
போய்ண்டிருக்கார்?
சக கனபாடிகள் எகத்தாளம் செய்து கொண்டிருப்பார்கள்.
என் அப்பாவுக்கே
தாத்தாவையும் அவரது அணிலாடு முன்றிலாரையும்
சேர்த்துப்பார்ப்பதை ஜீரணிக்க முடியவில்லை.
என் தாத்தா அடிப்படையில் ஒரு தமிழ்த்தாத்தா
அப்புறம் தான்
வேதங்களும் ப்ரஹ்ம சம்ஹிதைகளும்.
என் தாத்தா தன் இறுதி மூச்சை உதிர்க்கும் நேரம்.
வாத்தியார்கள் சூழ்ந்து வேதப்பிரம்மாணங்களை
வரி வரியாய் பிளக்க காத்திருந்தனர்.
என்னிடம் ஈனஸ்வரத்தில் தாத்தா சொன்னார்
இவாளை தட்சிணை கொடுத்து அனுப்பிவிடு.
நம் தமிழ் ஆசிரியர் மருத நாயகத்தை
இங்கு வரச்சொல்.
அவர் ஏற்கனவே தன் நண்பருக்கு
விடை கொடுக்க அந்த கூட்டத்தில் தான்
எங்கோ இருந்தார்.
அவர் குறிப்பிட்டதும்
இவர் அருகில் போய் நின்றார்.
மருது..
அந்த "கல் பொருதிறங்கும் மல்லல் பேர்யாற்று..."
வரிகள் வரும் முழுப்பாடலை
என் அருகில் நின்று பாடு....
அவர் ஆரம்பித்தார்..
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
.......................
கணியன் பூங்குன்றன்
அங்கு புதிய உலகம் காட்டி நின்றான்.

அதற்கப்புறம் காலியான தாழ்வாரம்
என் அப்பாவும் போய் சேர்ந்த பிறகு
இன்னும்
சஹாரா தாழ்வாரம் ஆயிற்று.
அந்த அணில்கள் மட்டும்
வந்து வந்து
கிரீச் கிரீச் என்று
ஒலியெழுப்பிக்கொண்டிருக்கின்றன.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக