விஜயசேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்
=====================================
ருத்ரா இ பரமசிவன்
இப்போது ஆண்டவன் கட்டளையில்
விஜய சேதுபதி
ஒரு புதிய பரிமாணத்துகு தாவியிருந்த போதும்
அவரது "ஆரஞ்சு மிட்டாய்"
கதையிலும் சரி
அவரது "முதுமையை வெறுக்கும்"
ஒரு அற்புத நடிப்பும் சரி
மற்ற படங்களின் நடிப்பை
இதன் மீது உரசிப்பார்த்து
நிறுக்கும் "கட்டளைக்கல்" ஆகும்.
ஆரஞ்சு மிட்டாயின் புளிப்பையும் இனிப்பையும்
கொஞ்சம் சுவைக்கலாம்.
யார் சொன்னது?
அறுபதை நோக்கிய
இருபதின் துருப்பிடித்த "வெர்ஷன்"கள்
வால்மீகியையும்
வியாசரையும்
அண்டை கொடுத்துக்கொண்டு
கிடக்கும் என்று?
நரைத்ததுகளின் "ளொள்ளு"
ரொம்பவே விறைப்பு தான்.
அந்த "108" ஆம்புலன்ஸை
நடிப்பின் வண்ண வண்ண வலிப்புகள் வரும்
பிருந்தாவனக்களம் அல்லவா ஆக்கியிருக்கிறார்
விஜய சேதுபதி.
மனித உளவியலின்
உள் பக்கங்களையே
டர் டர்ரென்று
"நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோமி"ல்
கிழித்தவர் ஆயிற்றே.\
இதயத்துடிப்பின்
சிஸ்டாலிக் டையஸ்டாலிக் மர்மர்கள்
விஜய சேதுபதியின்
பக்கத்திலும் கக்கத்திலும் கவ்விக்கொண்டு
அவர் சொல்ற படியெல்லாம் துடிப்பதே
கதையின் உட்கதை.
ஈடு கொடுத்த நடிகரின்
தோளிலோ பெரும் சுமை.
குறும்படம் எனும் ஒரு ஊசியை
ஒரு பனங்கட்டையில் குத்தி
மூச்சு முட்ட முட்ட தூக்கிவரும்
"ஒரு பரமார்த்திக குரு சீடர்" தன்மையை
காட்டினாலும்
அது ஒரு அற்புத கலைச்சுமையின்
நெடும்படம் தான்.
வார் வைத்த டவுசர் போட்ட காலத்தில்
திருட்டுத்தனமாய்
கருப்பட்டி டப்பாவிலிருந்து
இளகிய அந்த கருப்பட்டிக்குழம்போடு
புளியையும் உருட்டிச்சேர்த்து
குச்சியில் செருகி
சுவைத்தேனே
அதே அருஞ்சுவை தான்..
ஆரஞ்சு முட்டாய்.
===========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக